குடிமக்களைப் பயனாளிகளாக மாற்றிவிடுவது தான், இக்காலத்தில் முதலாளிய சிந்தனையாளர்கள் வகுத்துள்ள மிகப்பெரிய உத்தி. 1930களில் முதலாளி நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளியல் மந்த நிலை காலத்தில் மக்கள் நலனுக்குச் சில உதவிகளைச் செய்ய வேண்டும், அப்போது தான் வறுமையின் காரணமாகப் பொதுவுடைமைப் புரட்சிகள் எழாமல் தடுக்க முடியும் என்று முதலாளியப் பொருளியல் வல்லநர்கள் திட்டம் கொடுத்தார்கள்.

முதலாளியப் பொருளியல் வல்லுநர்களில் இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத் தக்கவராக இருந்த கீன்ஸ் என்பவர் மக்கள் நலத்திட்டங்களின் அவசியம் பற்றிக் கூறினார். இவர் கோட்பாட்டைக் கீனிசியன் கோட்பாடு என்பர். “சேம நல அரசு”(Welfate state) என்ற கோட்பாடு, ஒரு குடி மகனுக்குக் கருவிலிருந்து கல்லறை வரை அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியது.

எல்லாவற்றையும் சந்தைத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று இருந்த முதலாளியம், அரசு தலையிட்டு மக்களுக்கான உதவிகளைச் செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு வந்தது. நிகரமைச் சோவியத் ஒன்றியம் உருவானபின் தனியார் சுரண்டலற்ற, அனைத்து மக்களுக்கும் பலன்கள் பகிர்ந்தளிக்கப்படக்கூடிய, திட்டமிடப்பட்ட பொருளியல் செயலாக்கம் நடைமுறைக்கு வந்தது. ஐரோப்பிய, அமெரிக்க முதலாளிய நாடுகள் 1930களில் அனுபவித்த பெரும் பொருளியல் மந்த நிலை(Great recession) சோவியத் ஒன்றியத்தைத் தாக்கவில்லை. இதைப் பார்த்த முதலாளியப் பொருளியல் வல்லநர்கள், பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய அரசு தலையிட வேண்டியது கட்டாயத் தேவைஎன்று உத்தி வகுத்தனர்.

முதலாளிகளுக்கு மானியங்கள் வழங்கி வந்த அரசுகள், மக்களுக்கு இன்றியமையாய் பண்டங்கள் குறைந்த விலையில் கிடைக்க மானியங்கள் வழங்கின. முன்னாள் காலனிகளான மூன்றாம் உலக நாடுகள் தாம், பெரும் வறுமையில் சிக்கித் தவித்தன. இந்நாடுகளில் பொருளியல் நெருக்கடியால், வாங்கும் சக்தி குறைந்துள்ள மக்கள், புரட்சிகளில் இறங்கிவிடாமல் இருக்க மானியங்கள் கட்டாயத் தேவை ஆயின.

ஆனால், உலகமயம் செயலுக்கு வந்தபிறகு நிலைமை தலை கீழாக மாறியது. மக்கள் இன்றியமையாத் தேவைகளைத் தங்களின் வாங்கும் சக்திக்குள் பெற்றிட, உணவுப் பொருளுக்கும், போக்குவரத்துக்கும், வேளாண்மைக்கும், சமூகம் தழுவிய அளவில் கொடுத்து வந்த மானியங்களைக் குறைத்துக் கொண்டு, தனிநபர்களுக்கு இலவசம் கொடுக்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

இந்தியாவில், உணவு மானியம், எரிபொருள் மானியம், வேளாண் துறை மானியம் போன்றவற்றைக் குறைத்துக் கொண்டே வருகின்றனர். அதே வெளை பெருமுதலாளிகளுக்கு ஏற்றுமதி மானியம், இறக்குமதி மானியம், வரிச்சலுகை, கட்டணச் சலுகை போன்றவற்றை அதிகப்படுத்திக் கொண்டே வருகின்றனர். 2010-2011ஆம் ஆண்டில் இந்தியாவில் பெருமுதலாளிகளுக்கு ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் அளித்துள்ளது இந்திய அரசு.

எடுத்துக்காட்டாக, துணி ஏற்றுமதி செய்யும் பெரும்பெரும் ஆலை முதலாளிகள், ஒரு குறிப்பிட்ட துணியை வெளிநாடுகளில் 1 மீட்டர் 130 ரூபாய்க்கு விற்றால் தான் இலாபம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மற்ற நாடுகள் அதே துணியை அந்தக் குறிப்பிட்ட நாட்டில் ஒரு மீட்டர் 100 போய் விலையில் விற்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்திய முதலாளியும் அத்துணியை ஒரு மீட்டர் 100 ரூபாய் என்று விற்றால்தான் அவர் அங்கு சந்தையைப் பிடிக்க முடியும். வணிகம் செய்ய முடியும். இந்திய முதலாளியும் 100 ரூபாய்க்கு விற்பார். ஆனால், அவருக்குத் துண்டு விழும் 30 ரூபாயை மானியமாக இந்திய அரசு, அவர்க்குக் கொடுத்துவிடும். இதற்குப் பெயர் ஏற்றுமதி மானியம். இதே போல் இறக்குமதி மானியமும் உண்டு.

இப்படிப் பல்வேறு வகைகளில் பெருமுதலாளிகளுக்கு அளித்த மானியம் தான், 2010-2011இல் ஐந்து இலட்சம் கோடி ரூபாய். பெரும் முதலாளிகளுக்கு இவ்வாறான மானியத் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் மக்களின் இன்றியமையாத் தேவைகளுக்காக அளிக்கப்பட்ட மானியங்கள் மேலும் மேலும் குறைக்கப்படுகின்றன. பெட்ரோலியம், எரிவளி, வேளாண் உரங்கள் போன்றவற்றிற்கு அளித்துவந்த மானியங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது இந்திய அரசு. மின்சாரத்திற்கு மானியம் கொடுக்காதே என்று மாநில அரசுகளை நெருக்கி வருகிறது.

இந்த இழப்புகளையெல்லாம் தாங்கிக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதற்காக தனிநபர்க்கு நேரடியாகக் கிடைக்கக் கூடிய மானியத்தை ரூபாயாக, ஒவ்வொருவர் கையிலும் தரும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறைக்கப்பட்ட மானியத்தை ரூபாயாகக் கையில் தருவார்கள். போகப்போக அத்தொகையும் குறையும். மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் இந்த மானியத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு தனிநபரும் அரசிடமிருந்து மாதாமாதம் இனாம் பெறும் மனநிலை இதன் மூலம் உருவாக்கப்படும்.

“இனாம்” பெறுவோர், தாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற செம்மாப்பினை, சுயமரியாதையை மனதளவில் இழந்து விடுவர். அண்டிப் பிழைப்பவர்கள் என்ற உளவியல் உருவாகிவிடும்.

ஏற்கெனவே, மாநில அரசுகள் தனிநபருக்கு நேரடியாகக் கிடைக்கும் இலவசங்களை வழங்கி வருகின்றன. இவ்விலவசத் திட்டங்களும் உலக வங்கி போன்ற உலகப் பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்களே!

மக்கள் கேட்காத இலவசங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்து, மக்களைக் கவர்ந்து வாக்கு வாங்கி ஆட்சிக்கு வருகின்றன கட்சிகள். குறைந்த விலையில் தரமான அரிசி கேட்டார்கள் மக்கள். ஆனால் இலவச அரசித் திட்டத்தை எல்லோர்க்கும் செயல்படுத்துகிறது அ.இ.அ.தி.மு.க. அரசு. அதற்குமுன் இருந்த தி.மு.க. அரசு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுத்தது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தி.மு.க. அரசு வழங்கியது. அ.இ.அ.தி.மு.க. அரசோ மிக்சி, கிரைன்டர், மின்விசிறி ஆகியவற்றையும் ஆடு, மாடுகளையும் இலவசமாக வழங்குகிறது.

இலவசங்கள் வழங்குவதில் நுட்பமான அரசியல் உத்தி ஒன்றுள்ளது. “ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்; நாங்கள் கொடுப்பதை வாங்கப் பிறந்த குடிபடைகள் நீங்கள்” என்பதுதான் அந்த உத்தி.

“மண்ணின் மக்களாகிய நாமும் ஆளப்பிறந்தவர்கள் தாம்” என்ற மனத்திட்பத்தை இலவசங்கள் அரித்துவிடும்; “எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் ஓர் விலை; எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடினார் பாரதியார். ஏழாம் நூற்றாண்டில் “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் ஏமாப்போம் பிணியறியோம்” என்று திருநாவுக்கரசர் (அப்பர்) பாடினார். இந்த செம்மாப்பு உளவியலைத் தகர்ப்பவைதாம் இலவசங்கள்! ஆட்சியாளர்களை அண்ணாந்து பார்த்து, ஏதாவது இலவசமாகக் கிடைக்காதா என்ற மனநிலையை வெகுமக்களிடம் உண்டாக்குகின்றன இலவசங்கள்.

செல்வமும் செல்வாக்கும் படைத்த சிறு கூட்டத்தால் தான் தேர்தலில் போட்டியிட முடியும். “நம்மால் வாக்களிக்க மட்டுமே முடியம்” என்ற மனநிலையை மக்களிடம் இன்றையத் தேர்தல் முறை ஏற்கெனவே உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரண்டாம் தரக் குடிமக்கள் மனநிலையை மேலும்,  “நாம் ஆளப்பிறந்தவர்கள் அல்லர், ஆட்சியாளர் தயவில் வாழப் பிறந்தவர்கள்” என்று வடிவமைக்கின்றன, இலவசங்கள்.

பலநாடுகளில் மண்ணின் மக்கள் ஓரங்கட்டப்பட்டு வந்தேறிகள் ஆட்சி புரிகின்றனர். அமெரிக்கா(யு.எஸ்.ஏ.) கனடா மலேசியா போன்ற நாடுகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் நாகரிகத்தோடு வாழ்ந்தவர்கள் தொல் பழங்குடி மக்கள். அவர்கள் தொல் இந்தியர்கள் என்று(poleo Indians) மேற்கத்தியரால் அழைக்கப்படும் மண்ணின் மக்கள் ஆவர். தொல் இந்தியர்களை வேட்டையாடி அழித்தார்கள் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள். அவர்களின் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள்; அவர்கள் நடத்திய நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். எஞ்சிய தொல் இந்தியர்கள் வந்தேறி ஐரோப்பியர்களைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தொல் இந்தியர்கள் அந்நாட்டு அரசுகள் வழங்கும் இலவசங்களை நம்பியே வாழ்கிறார்கள்.

பழங்குடி மக்களுக்குத் தாராளமாக இலவசங்கள்- உதவித் தொகைகள் வழங்குகின்றன அவ்வரசுகள். அத்தொகைகளை வாங்கிக் கொண்டு பெரும்பாலோர் போதைப்பழக்கங்களுக்குத் தாராளமாக செலவு செய்கிறார்கள். தங்களின் வரலாற்றை மறந்து, தங்களின் உரிமைகளை மறந்து, வந்தேறிகளைச் சார்ந்து வாழும் மக்களாக அவர்கள் மனநிலை மாற்றப்பட்டது. கனடா சென்றிருந்த போது தொல் இந்திய மக்களின் நிலையை நேரில் கண்டேன்.

அதே போல், மலேசியாவில் வெளியிலிருந்து குடியேறியவர்கள் மலாய் மக்கள். மண்ணின் மக்களாகிய் பழங்குடி மக்கள். அரசின் இலவசங்களைப் பெற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்டு வாழ்வதைப் பார்த்தேன். அமெரிக்காவிலோ, மலேசியாவிலோ மண்ணின் மக்கள் தங்களுக்கு எதிராக அரசியல் போட்டிக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன குடியேறியவர்களின் கொற்றங்கள்! அதற்காக அவர்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகின்றன.

தமிழ்நாட்டு மக்கள் பழங்குடி மக்களல்லர். வளர்ச்சியடைந்த தேசிய இனமக்கள். தில்லி ஏகாதிபத்தியத்திற்குத் தமிழ்த் தேசம் அடிமைப் பட்டிருந்தாலும் காலனிய ஆட்சி வழங்கும் பதவிகளைத் தமிழ் மக்களில் சிலர்  அடைகின்றனர். எனவே இங்கு அமெரிக்காவில், மலேசியாவில் மண்ணின் மக்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டு இலவசங்களைச் சார்ந்த மக்களாக்கப்பட்ட நிலை அதே வடிவில் இல்லை. வேறு வடிவில் இருக்கிறது.

தில்லி ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்க்கும் ஒரு புதிய அரசியல் வர்க்கம் தமிழ் மக்களிடையே உருவாகியுள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரும் இந்தக் கங்காணி அரசியல் வர்க்கத்தில் அடக்கம் இந்தக் கங்காணி அரசியல் வர்க்கம், அரசியல்இல் குடும்பத் தலைமையும், வாரிசுரிமையையும் அந்தந்த மட்டத்தில் நிலை நிறுத்தி வருகின்றன. கங்காணி அரசியலில் வாரிசுகளற்ற அரசியல் தலைமைகளும் உண்டு. இந்த அரசியல் வர்க்கத்தினரின் மக்கள் தொகை மிகமிகக் குறைவு. அனைத்து அதிகாரம் படைத்த இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களின்  எண்ணிக்கையையோ மிக மிகக் குறைவு. இவர்களில் சிலர் காலப்போக்கில் பின்னடைந்து போகலாம். சிலர் புதிதாக உருவாகலாம். இருந்த போதிலும் இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

இந்தக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அரசியல் வர்க்கம் தன்னை ஆளும் வர்க்கமாக நிலை நிறுத்திக் கொள்ளும்; வெகு மக்களை இலவசங்களை எதிர் பார்க்கும் நிலையில் வைத்துக் கொள்ளும். இதுவே இவர்களின் திட்டம். ஆட்சி அதிகாரத்திற்கான போட்டியிலிருந்து வெகு மக்கள் மனதளவில் தாமாகவே விலகி நிற்பதே நல்லது என்று அரசியல் வர்க்கம் கருதுகிறது.

இலவசங்களை வழங்குவதாக அறிவிப்பதில், அவற்றை வழங்குவதில், அரசியல் வர்க்கக் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இலவச அரிசி தருவதாக அ.இ.அ.தி.மு.க. சொன்னால், இலவச அரிசியை வீட்டில் கொண்டு வந்து தருவோம் என்று தே.மு.தி.க. சொல்கிறது. இன்னொரு கட்சி சமைத்துக் கொண்டு வந்து உணவாகத் தருவோம் என்று சொன்னாலும் சொல்லும்.

இலவசங்களைச் சார்ந்து வாழும் மனநிலைக்கு வந்து விட்ட மக்கள் தங்கள் ஆளும் உரிமை படைத்த இனம் என்ற உரிமை உணர்ச்சி குன்றியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வரலாற்றுப் பெருமித உணர்ச்சியும் குன்றியிருக்கும். வருங்காலத்தை உருவாக்கும் பொறுப்பு நமதே என்ற கடமை உணர்ச்சியும் குறைந்திருக்கும். பொதுவில் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள அரசியல் வர்க்கத்தின் தலைமைக்குக் கட்டுப்பட்ட ஒரு கூட்டமாக அம்மக்கள் மாறிவிடுவர்.

இடதுசாரிகளும் மற்றவர்களும் தலைமை தாங்கும் தொழிற்சங்கங்கள், உழவர் அமைப்புகள் உரிமைப் போராட்டம் நடத்துவதைவிட, பொருளியல் சார்ந்த கோரிக்கைப் போராட்டங்கள் நடத்துவதே அதிகமாக உள்ளது. சமூகம், இனம், மொழி, தாயகம் என்பவற்றுள் எதன் உரிமை பற்றியும் அக்கறையின்றி அவரவர் பொருளியல் மற்றும் வேலை நிலைமைகளுக்கு மட்டும் போராடுவது தொழிற் சங்கவாதம் எனப்படும். இத்தொழிற்சங்க வாதம் அமைப்பாகத் திரண்டுள்ள மக்களை ஆள வேண்டியவர்கள் என்ற நிலையிலிருந்து ஆளப்படுவோர் என்ற மனநிலைக்கு மாற்றி விடுகிறது. அமைப்பாகத்  திரளாத மக்களை இலவசங்கள் “ ஆளப்படுவோர்” மனநிலைக்கு மாற்றி விடுகின்றன.

இவ்வாறான சமூக அரசியல் சூழல் நிலவும் நாட்டில், மண்ணின் மக்கள் வெறும் வாக்காளர்களாகவும், வெறும் பயனாளிகளாகவும் குறுகிவிடுகிறார்கள். இவ்வாறு சனநாயக அரசியல், பயனாளிகள் அரசியலாக மாறுகிறது. பயனாளிகள் அரசியல் பக்திப் பரவச அரசியலாக மாறுகிறது.

தமிழ்நாட்டில் பயனாளிகளின் பக்திப் பரவச அரசியல் குதூகலாமாகக் கொண்டாட்டம் போடுகிறது. இதன் குதியாட்டத்தைக் கண்டு தமிழ்த் தேசியப் புரட்சியாளர்கள் திகைக்க வேண்டியதில்லை. மலைக்க வேண்டியதில்லை. பயனாளிகளின் பக்திப் பரவச அரசியலுக்கு வெளியே ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். பக்திப் பரவச அரசியலை அவர்கள் வெறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமைப்பாக இல்லை. தலைமை இன்றி இருக்கிறார்கள்.

உண்மையான தமிழ்த் தேசியப் புரட்சியாளர்களை அந்த மக்கள் அடையாளம் காணவில்லை. அதே போல் உண்மையான தமிழ்த் தேசியப் புரட்சியாளர்கள் அந்த மக்களிடம் சென்று சேரவில்லை. இவ்விரு தரப்பாரிடையே நிலவும் இடைவெளி நீக்கப்படவேண்டும்; இவர்களிடையே விரிவான உறவு உருவாக வேண்டும்.

ஒரு நாளைக்கு இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள். அதன் இன்னொரு பொருள் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கானோர் 16 அகவையைக் கடக்கிறார்கள், 18 அகவையைக் கடக்கிறார்கள். பயனாளிகளின் பக்திப்பரவச அரசியலால் பெரிதும் பாதிக்கப்படாத அந்த அகவை ஆண், பெண்களை அடையத் தமிழ்த் தேசியத்திற்குத் தடை என்ன இருக்கிறது?

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் ஆதரவைத் தமிழ்த் தேசியம் பெற்று விட்டால் போதும். எந்த நாட்டிலும் ஒரு புரட்சி வெற்றிபெற 25 விழுக்காட்டு மக்களின் ஆதரவே முதல் நிலைத் தேவை. இந்த ஆதரவை உறுதிப்படுத்திக்கொண்டால், இதர மக்களில் கணிசமானோர் அந்தஒ புரட்சியை ஏற்பர். அவ்வாறான சூழலில் பக்திப்பரவச அரசியலில் சிக்கியிருந்த மக்கள் கூட்டத்திலும் ஓர் உடைப்பு ஏற்பட்டு ஒரு பகுதியினர் புரட்சிக்கு ஆதரவாக வருவார்கள்.

தமிழ்த் தேசியப் புரட்சி அமைப்பு உடனடியாக வெகுமக்கள் ஆதரவைப் பெருவாரியாகத் திரட்டி விடமுடியாது. இப்பொழுது நிலவுவது “ தேடுதலும் திரட்டுதலும்’’ என்ற காலகட்டம். இன உணர்வாளர்களை, மொழி உணர்வாளர்கள், அரசியல் அலங்கோலங்களைப் புரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று உள்ளம் கொதிப்போர் முதலியோர் இன்று தமிழ்நாட்டில் ஏரளாமாக உள்ளனர். அவர்களுக்கு சரிவர நம்மைத் தெரியவில்லை. நமக்கு அவர்களைத் தெரியவில்லை. இந்தத் “தெரியாத் தனத்தை”ப் போக்க வேண்டியது இருதரப்புக்கும் உள்ள பொறுப்பாகும். இதில் கூடுதலான பொறுப்பு புரட்சிக்கரத் தமிழ்த் தேசிய அமைப்பை நடத்துவோர்க்கு இருக்கிறது.

மேற்சொன்ன உணர்வாளர்களைத் தேடிச் செல்வதும், அவர்களை உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாகத் திரட்டுவதும் தமிழ்த் தேசிய அமைப்பின் இன்றையத் தேவை.

அதே போல் மேற்சொன்ன உணர்வாலர்கள், தங்கள் எண்ணங்களை நேர்மையான அமைப்பின் வழி அல்லாமல் வேறு வழியில் செயல்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இருக்கின்ற அமைப்பு எதுவும் சரியில்லை என்று கருதினால் சரியான அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். யாரும் சரியில்லை, தானும் செயல்பட முடியாது என்று உணர்வாளர்கள் ஒதுங்கியிருந்தால், உதிரிகளாகத்தான் இருப்பார்கள். உதிரிகளாக இருப்போர், தெரிந்தோ. தெரியாமலோ, அமைப்பு வழியில் செயல்படும் பக்திப் பரவச அரசியலின் ஆதரவாளர்களாகவே பயன் படுவர்.

அமைப்பு வழியில் செயல் படும் பக்திப் பரவச அரசியலை அமைப்பு வழியில் செயல்படும் புரட்சிக்கரத் தமிழ்த் தேசிய அரசியலே மாற்றீடு செய்யும். பதவி, பணம், விளம்பரம் என்ற மூன்று தூண்களின் மேல் நிற்கிறது பக்திப் பரவச அரசியல். இந்த மூன்றையும் விலக்கி விட்டு இன்றையத் தேர்தல் அரசியல் இயங்கவே முடியாது.

எனவே தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், சரியான தமிழ்த் தேசிய அரசியல் இயங்க வேண்டும். தனி நபர்க்கான பணம், பதவி, விளம்பரம், மூன்றையும் கருத்தில் கொள்ளாத தமிழ்த் தேசிய அமைப்புதான்; பக்திப் பரவச அரசியலை நீக்கி நேர்மையான, உரிமை மீட்பு அரசியலை நிலைநாட்ட முடியும். தேர்தலை நிரந்தரமாகப் புறக்கணிப்பது நமது திட்டமன்று. விபத்துக்குள்ளாகி விழுந்து கிடக்கும் தமிழ்த் தேசத்தைத் தூக்கி நிறுத்தி, தமிழ்த் தேசக் குடியரசை நிர்மாணித்து, தமிழ்ச் சமூகத்தை மறு வார்ப்பு செய்யும் வாய்ப்புகள் உருவானபின் தேர்தல் அரசியலில் தமிழ்த் தேசியர்களும் பங்கு பெறலாம். அதுவரை தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த் தேசிய அரசியல் செயல் புரிய வேண்டும்.

Pin It