தமிழர் தேசிய இயக்கம் 10.2.2002 அன்று திருச்சயில் நடத்திய சிறப்பு மாநாட்டில் திரு பழ.நெடுமாறன் அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஆற்றிய உரைகள், “பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்புள்ள நூலில் தொகுக்கப்பட்டு வந்துள்ளன. இந்நூலை அப்போது தமிழர் தேசிய இயக்கம் வெளியிட்டது. அம்மாநாட்டில் தமிழ்த் தேசியத்தை ஆதரித்தும் திராவிடத் தேசியத்தை மறுத்தும், திராவிட இயக்கும் குறித்தும் சுபவீ பேசிய ஒரு பகுதி கீழே வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது அவர் பேசிவரும் பேச்சிற்கும் 2002இல் அவர் பேசிய பேச்சிற்கும் இடைவெளி எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒருவருடைய கருத்தில் மாற்றம் வரலாம். முன்சொன்னதைக் கைவிட வேண்டிய நிலை வரலாம். ஆனால், அம்மாற்றம் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் வளர்ச்சி நோக்கியதாக மேலும் துல்லியம் கொண்டதாக இருக்க வேண்டும்.

திருச்சியில் 10.02.2002அன்று நடைபெற்ற தமிழர் தேசிய இயக்கத்தின் சிறப்பு மாநாட்டில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றியத் தொடக்கவுரை, “பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்” என்ற புத்தகமாக தமிழர் தேசிய இயக்க வெளியீடாக வெளி வந்தது. அதிலிருந்து….

உலக முதலாளித்துவத்தை நீ எதிர்க்கிறாய் இந்திய தேசியத்தை எதிர்க்கிறாய் ஏன் திராவிட தேசிய இயக்கத்தை எதிர்க்கவில்லை? இன்னமும் பழைய பாசம் பாக்கி இருக்கிறதோ என்று என்னுடைய பாவாணன் போன்றந நண்பர்கள் அடிக்கடி சந்தேகப்படுவது உணள்டு. அது வேறு ஒள்றும் இல்லை நண்பர்களே.

நான் திராவிடத் தேசியத்தை எதிர்க்காமல் இருப்பதற்கு ஒரு உண்மையான காரணம் இருக்கிறது. உயிரோடு இருப்பதை தான் நாம் எதிர்க்க முடியும். திராவிடத் தேவியம் இன்றைக்கு உயிரோடு இல்லை. நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. திராவிட இயக்கம் வேறு, திராவிடத் தேசியம் வேறு. நாம் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருக்கிறோமோ என்று நான் கருதுகிறேன். தமிழ்த் தேசியத்தை வீரியமாகப் பேசிக் கொண்டிருக்கிற நம்முடைய தோழர்கள் கூட திராவிடம் என்றால் கெட்ட வார்த்தை என்பது போலப் பார்க்க்கிறார்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை.

திராவிட இயக்கத்தின் செயல்களையெல்லாம் வேரோடு வீழ்த்த வேண்டும் என்று நம்முடைய நண்பர் ஒருவர் அண்மையிலே பேசியதைக் கேட்டபோது நான் வருத்தப்பட்டேன். திராவிட இயக்கத்திற்கு ஒரு அரசியல் கொள்கை இருந்தது. ஒரு சமூகக்  கொள்கை இருந்தது. ஒரு தன்மானக் கொள்கை இருந்தது. பெண் விடுதலை என்பதும் தராவிடக் கொள்கை தான். பெண்ணமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவால் முயல் கொம்பு என்பது திராவிட இயக்கத்தின் குறிக்கோள்தான். சாதி எதிர்ப்புதான் திராவிட இயக்கத்தின் உயிர்நாடிக் கொள்கை.

எனவே திராவிட இயக்கத்தின் அனைத்துக் கொள்கைகளையும் வீழ்த்துவது என்று சொன்னால் நாம் அதனுடைய சமூகப் பரிணாமங்களையும, பண்பாட்டுக் கோட்பாடுகளையும் கூட வீழ்த்த நினைக்கிறோமோ என்பது போலத் தவறாக ஆகிவிடும். எனவே எது வீழ்த்தப்பட வேண்டும்? திராவிட இயக்கம் ஒரு கட்டத்திலே ஒரு தவறான கொள்கையை வைத்தது. அரசியல் கொள்கை. அது திராவிடத் தேசியம். அந்த திராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு நண்பர்களே யார் திராவிடர் என்றால் கன்னடத்தையும், மலையாளத்தையும், ஆந்திராவையும் கருத்தில் கொண்டு திராவிட நாடு என்று சொல்லவில்லை. அவர்கள் கூட சொல்லவில்லை. இன்றைக்கு திராவிடம் என்ற சொல் வெறும் அடையாளச் சொல்லாக இருக்கிறதே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை. ஆகையினால் திராவிடத் தேசியம் என்பது அவர்கள் வைத்த ஒரு பிழையான கொள்கை. ஒரு கட்டத்திலே அதை உறுதியாக நம்பினார்கள். அண்ணா அவர்களுக்கும், ம.பொ.சி. அவர்களுக்கும் இடையில் வாக்குவாத்தம் வந்த போது அண்ணா சொன்னார் நாங்கள் ஒரு அணா கேட்கிறோம், நீங்கள் காலணா கேட்கிறீர்கள் என்ற உதாரணத்தைச் சொன்னார். ஆனால் அவருடைய காலத்திலே அது போய்விட்டது.

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் 56 நவம்பரிலிருந்து நீங்கள் கணக்கு எடுத்துப் பாருங்கள். எந்த இடத்திலும் தந்தை பெரியார் திராவிடத் தேசியத்தை வலியுறுத்தவில்லை. 56க்குப் பிறகு இந்திய வரைபடத்தை எரிக்கப் போகிறேன் என்று பெரியார் சொன்னபோது தமிழ்நாடு நீங்களலாக என்று சொன்னாரே தவிர திராவிட நாடு நீங்கலாக என்று சொல்லவில்லை. தமிழ்நாடு நீங்கலாக என்று தான் சொன்னார். அதற்குப் பிறகு அவருடைய இறுதி சாசனம் மரண சாசனம் என்கிற 73இல் தியாகராயர் நகர் கூட்டத்திலேயே அவர் பேசிய பேச்சில் தோழர்களே கடுமையான வயிற்றுவலியையும் பொறுத்துக் கொண்டு திரும்பத் திரும்ப தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம்தான். எந்த முழக்கத்தை 38இல் பெரியார் முன்வைத்தாரோ அந்த முழக்கத்தோடுதான் 73இல் அவர் தன் இறுதி உரைய முடித்தார். அவர் தமிழ்த் தேசியத்தை நோக்கி வந்தார். அண்ணா என்ன செய்தார்? அவரும் 61இல் திராவிடத் தேசியத்தை விட்டுவிட்டார். ஆனால் தமிழ்த் தேசியத்தை நோக்கி வராமல் இந்தியத் தேசியத்தை நோக்கிப் போனார். இன்றைக்குக்கூட திராவிட இயக்கத் தலைவர்கள் என்று கருதப்படுபவர்கள் இந்திய தேசியத்தை நோக்கித்தான் மண்டியிட்டுப் கொண்டிருக்கிறார்கள்.