ஜனாதிபதியான முன்னாள் கொரில்லா

நான், ஜோஸ் ஆல்பெர்ட்டோ முஜிகா கோர்டானோ, குடியரசின் அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு உருகுவேயின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ஜோஸ் முஜிகா கூறியவுடன், pamm_kkபலத்த கரவொலி எழுந்தது. அவ்வாறு கரவொலி எழுப்பியவர்கள் மத்தியில் வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், பிரேசிலின் லூலா, பொலிவியாவின் இவோ மொரால்ஸ், ஈக்குவடாரின் ரபேல் கோரியா, அர்ஜெண்டினாவின் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ், பராகுவேயின் லூகோ மற்றும் கொலம்பியாவின் அல்வரோ யுரிப் ஆகியோரும் இருந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்வதையே முஜிகாவின் வெற்றிகாட்டுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் இடது சாரிப் பொருளாதாரக் கொள்கைகளை முன்னிறுத்திய வாஸ்குஸ் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடைய கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளார்கள் என்பதுதான் அதே கட்சியைச் சேர்ந்த முஜிகாவின் வெற்றியில் தெரிகிறது.

நாட்டின் தேவைக்கேற்ற அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பை உருவாக்கியது மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை மேம்படுத்துதல் ஆகிய வற்றை வலியுறுத்திய முந்தைய ஆட்சியின் கொள்கைகள் தொடரும் என்றும் பதவி யேற்றவுடன் அவர் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் சாவேஸ் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் தென் அமெரிக்காவின் மற்ற நாடுகளுக்கு உத்வேகமளித்தது என்பதை முஜிகாவும் கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றங்களுக்கு முன்பாக இருந்த முதலாளித்துவ அரசுகளின் அட்டூழியங்களை எதிர்த்து நடந்த கொரில்லாப் போர்களிலும் முஜிகா ஈடுபட்டவர். அவருடைய துணைவியார் லூசியாவும் கொரில்லா இயக்கத்தின் முக்கியமானத் தலைவராவார்.

மாசத்துக்கு அஞ்சுநாள்தான் வேலை

"போராடணும்னாகூட  ஒரு சைடுகாலணிய உற்பத்தி செய்வாம்ப்பா" என்று ஜப்பானைப் பற்றி முன்பெல்லாம் கூறுவார்கள். அந்த நிலை மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. இரண்டு காலணியையுமே உற்பத்தி செய்யாமல்தான் இப்போதெல்லாம் ஜப்பானியத் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அனைத்து உத்திகளையும் கடைப்பிடிக்கும் நிலைக்கு அந்நாட்டு தொழிலாளர்களைத் தள்ளியுள்ளது. முதலில் நான் தற்காலிக தொழிலாளியாக வேலையில் சேர்க்கப்பட்டேன். அடுத்து ஒப்பந்தத் தொழிலாளியாக மாற்றினார்கள். அடுத்து நிரந்தரம்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்கிறார் 53 வயதாகும் பெண் தொழிலாளி ஒருவர். ஜப்பானிய நிறுவனமான ஷிசிடோவின் தொழிற்சாலையில் எட்டரை ஆண்டுகள் அவர் பணியாற்றினார்.

இது பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். ஏராளமான நிறுவனங்கள் இத்தகைய மோசடி உத்தியைக் கடைப்பிடித்துள்ளன. இந்த மோசடிகளை எதிர்த்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். ஆயிரக் கணக்கானோர் ஜப்பானின் வீதிகளில் எதிர்ப்பு ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். எனக்கு மாதத்தில் ஐந்து நாட்கள்தான் வேலை தந்தார்கள். ஜப்பானிய சமூகத்தில் பெரிய நிறுவனங்கள்தான் வளரும். அரசியல்வாதிகள் தங்கள் கண்களைத் திறந்து சாமான்ய மக்களின் நிலையைப் பார்க்க வேண்டும் என்கிறார் தச்சுச் தொழில் செய்யும் தொழிலாளி ஒருவர்.

தலைநகர் டோக்கியோவில் நடந்த ஊர்வலம் ஒவ்வொரு அமைச்சரவையின் அலுவலகம் முன்பாகவும் நின்று கோரிக்கைகளை வலியுறுத்திய வண்ணம் சென்றது. தொழிலாளர்களை தங்கள் இஷ்டத்திற்கு வெளியேற்ற உதவும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதிகக் குழந்தை பெற்றால் சலுகை?

ஒரு குடும்பம், ஒரு குழந்தை என்றிருந்த குடும்பங்களுக்கு பாராட்டு மழை பொழிந்தகாலம் இன்னும் தென் கொரியாவில் மறையவில்லை. மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்று ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொண்டது நிற்பதற்குள் நிலைமை மாறியுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் கட்டாய ராணுவச் சேவையிலிருந்துகூட விலக்கு அளிக்கப்படும் என்றெல்லாம் சலுகைகளை தென் கொரிய அரசு வாரி வழங்கிக்கொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து இவ்வளவு நாள் எதைச் செய்தோமோ அதற்கு நேர் எதிரான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அந்த அரசு தற்போது கூறி வருகிறது.

உலகிலேயே குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக தென் கொரியா மாறிவிட்டதே இதற்குக்காரணமாகும். ஐந்து கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியாவில் 2009 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 200 குழந்தைகள் பிறந்தன. தென் கொரிய வரலாற்றில் குழந்தைகள் பிறப்பில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டதில்லை. 1981 ஆம் ஆண்டில்தான் இந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

1970களில் ஒவ்வொரு பெண்ணிற்கும் சராசரியாக 4.5 குழந்தைகள் பிறந்தன. தற்போது அந்த விகிதம் 1.15 ஆகக் குறைந்துவிட்டது. இது மேலும் சரிந்துவிடாமல் பார்த்துக் கொள்வதென்று தென் கொரிய அரசு முனைப்புடன் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருந்ததற்கும், குடும்பக் கட்டுப்பாடு செய்ததற்கும் சலுகைகளைத் தந்த அரசு இனிமேல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தர வேண்டி வரும் என்கிறார்கள் சமூகவியல் வல்லுநர்கள்.

1990களின் துவக்கத்திலேயே குழந்தைகள் பிறப்பு குறைந்துவிட்டது. அப்போதே இதை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்து. இப்போதும் அவசரம்காட்டாமல் இருந்தால்தான் மீண்டும் குழந்தைகள் பெறாமல் இருப்பதற்கு சலுகைகள் தரவேண்டிய கட்டாயம் ஏற்படாமல் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

-கணேஷ்

Pin It