தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வரலாற்று வழிமுறையாக இன்று தமிழ்த்தேசியம் சொல்லப்படுகிறது. தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டு மக்களிடையே நிலவும் வேற்றுமைகளைக் களைந்து வரலாற்று வழியாக தொடர்ந்து வரும் பலவிதமான தொடர்புகளை மேலும் வளர்த்து, கெட்டிப்படுத்தி அதன் அரசியல், சமுக, பொருளாதார, பண்பாடு மற்றும் விஞ்ஞானப் பூர்வமான அடிப்படைகளை நிலைப்படுத்தி தமிழ்நாட்டு மக்கள் தங்களையும் தங்கள் இறையாண்மையையும் காத்துக் கொள்ள முன் நிபந்தனையாக அமைகிறது என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களிடையே நிலவும் வேற்றுமை என்று பொதுவாக சொல்வதைக் காட்டிலும் இந்த வேற்றுமைகளை குறிப்பாக இனம் காண்பது இங்கே அவசியமாகிறது. சாதி, கட்சி, மத, இன, மொழி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும், எல்லா வேற்றுமைகளிலும் முதன்மையானதும் முக்கியமானதும் இந்த சாதியமே ஆகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த சாதியம் பலமாக வேரூன்றி இருப்பதும், இந்த சமுகத்தை பல கூறுகளாக பிளவுபடுத்துவதிலும் முதன்மை சக்தியாகவும் திகழ்கிறது. அந்த அளவிற்கு பிற்போக்கு சக்தியாகவும், மக்களை பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும் கொடும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த சாதியமே சந்தேகம் இல்லாமல் தமிழ்நாட்டில் சமுக தளத்தில் நிலவும் முதன்மை முரணாகும்.

இயற்கையாகவே ஒவ்வொரு சமூகமும் தன் பிற சமுகங்களிடத்தில் இருந்து ஏதோ ஒரு வகையில் தனித்தன்மையும், உறவும், முரண்பாடும் கொண்டிருக்கிறது. சமூகங்கள் தங்கள் இடையே நிலவும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள விழையும்போது அந்த போராட்டத்தின் முடிவு ஏதோ ஒரு சமுகம் அழிந்து போவதற்கு அல்லது அடிமைப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் ஒரு சமுகம் அழிந்து போவதற்கு அல்லது அடிமைப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவது குறிப்பிட்ட சமுகத்திற்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தினை விட அதனுள்ளேயே இருக்கும் அந்த அழுகிய, சீழ் பிடித்த, துர்நாற்றமெடுக்கும் புண்ணாகிய சமுகத்தின் உள்ளேயே நிலவும் பிற்போக்குத்தனமே ஆகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சூழலில் இந்த உள்முரணானது புரையோடிய நிலையில் இருக்கும்போது அந்த சமுகத்தை அழிப்பதற்கு அல்லது அடிமைப்படுத்துவதற்கு நிகழும் ஒரு நிகழ்ச்சியாகவே இந்த வெளியில் இருந்து வரும் ஆபத்து பெரும்பாலும் அமைகிறது.

தமிழ்நாட்டின் உள்முரண்களில் முதன்மையானதாக விளங்கும் சாதிப் பிரச்னையை ஒழிப்பதற்கும், சமுக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தமிழ்ச்சமுகம் எல்லையில்லா தடைகளை சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதம் இன்றைய சமூக தேவையாயிருக்கிறது என்று கருதுகிறோம்.

இந்திய துணைக் கண்டத்தில், அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பழமை கருத்துக்களும், எதிர்க் கருத்துக்களும், புதிய கருத்துகளும் தொடர்ந்து மோதியவாறு இருக்கின்றன‌.

தமிழக வரலாற்றில் பெரியாரின் திராவிடக் கொள்கைகள் மிக நீண்ட காலமாக முற்போக்கின் அடையாளமாகவும், இங்கே நிகழ்ந்த பல மாற்றங்களுக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கின்றன‌. மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பின் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று பெரியார் முழங்கினார். 1970-களில் உலகெங்கும் எழுந்த தேசியப் போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டங்கள் எழுந்தன. ஈழப்போராட்டத்தின் பாதிப்பின் காரணமாக உருவான விழிப்புணர்வும், தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்த இந்திய அரசின் அக்கறையின்மையும், தமிழ்நாடு மீது இந்திய அரசு ஏவும் அடக்குமுறைகளும், இன்றைய அளவில் இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் மக்களுக்கு தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது. இந்திய எதிர்ப்பும், தமிழ்நாடு விடுதலையுமே தவிர்க்க இயலாத வகையில் மக்கள் போராட்டத்தின் வழிமுறைகளாக மாறி வருகிறது. அதனாலேயே இன்றைய சமூக தேவையாக இருக்கும் தேசிய விடுதலைப் போராட்டம், சமூக முரணாக விளங்கும் சாதியம் இரண்டையும் ஆழமான, விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் என்று கருதுகிறோம்.

இந்த நவீன யுகத்திலும், உயர்ந்த விஞ்ஞான உலகிலும் தமிழ்நாட்டில்(இந்திய துணைக் கண்டத்திலும்) சாதியம் வேரூன்றி நிற்பதும், சமுக பிற்போக்குத்தனத்தின் அடையாளமாக நீடித்து வருவதும் வெட்கக்கேடான நிலையே. இந்த சாதீய கட்டமைப்பினையும், சாதிய உணர்வினையும் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமென்பதில் பெரும்பாலான முற்போக்கு அமைப்புகளிடமும், மனிதர்களிடமும் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. ஆனால் நடைமுறை என்று வரும்போதுதான் அனேக சிக்கல்கள், முரண்கள் வருகின்றது. இந்த சமுதாய சிக்கலைத் தீர்ப்பதற்கு பல கருத்தியல்களும், இயக்கங்களும், தலைவர்களும் தோன்றி மறைந்த பின்னரும் சாதிகள் மறையாமல் இருப்பதும், அதன்  கொடூரத்தன்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வடிவங்களில் வெளிபட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்ப்பது எளிதான காரியம் அல்ல என்பதை உணர்ந்தாலும், தீர்க்க முடியாதது அல்ல என்பது எங்களது பலமான வாதம். ஆனால் தீர்க்க முனைவதில் அதனை தீர்த்து வைக்க முனைவோரின் கருத்தியல் தெளிவையும், தகைமையையும், நேர்மையையும் பற்றி கூட விவாதிக்க வேண்டி இருக்கிறது.

ஏனெனில் "ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் பின் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது" என்று காரல் மார்க்ஸ் சொன்னதை இந்திய துணைக்கண்ட சூழலில் குறிப்பிட வேண்டுமென்றால் "ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும், பின் ஒரு சாதி இருக்கிறது" என்று சொல்லும் அளவிற்கு இங்கே சமூக நேர்மை சந்தேகத்துக்கிடமான நிலையில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த காலத்தில் இந்திய அளவில் அம்பேத்கர், பூலே, தமிழ்நாட்டில் அயோத்திதாச பண்டிதர், பெரியார் இன்ன பிற தலைவர்கள் உருவாக்கிய கருத்தியல்கள், இயக்கங்கள் நடத்திய சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்தது. இருந்தும் இந்த சமூகப் போராட்டமானது இன்னும் முழு வெற்றியினைப் பெற முடியவில்லை என்பதும், முழு வெற்றியினைப் பெற முடியவில்லை என்பதோடு அது முன்னேறி இருக்கும் தூரமும் ஒப்பீட்டளவில் குறைவானதாக இருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும்.

தமிழ்த்தேசியம் மற்றும் சாதி ஒழிப்பு விவாதத்தில் நம்முன் வைக்கப்படும் வாதத்தில் முக்கியமானது தமிழ் மக்களின் விடுதலையைக் கோரிக்கையாய் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியம் சாதி ஒழிப்பினை உள்ளடக்கியதா? அல்ல சாதி நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறதா? என்பதுதான் அவை. தமிழ்த்தேசியம் சாதிப் பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை; மாறாக புறக்கணிக்கிறது என்றும் ஒரு சாரர் முறையிடுகின்றனர். தமிழ்த்தேச விடுதலை என்பது சாதி ஒழிப்பினையும் உள்ளடக்கியதே என்று ஒரு தரப்பும், தமிழ்த்தேசம் விடுதலை அடைந்த பின் சாதிப் பிரச்னையை தீர்த்து விடலாம் என்று கூறி சாதீயப்பிரச்னையை வலியுறுத்தாத ஒரு தரப்பும், சாதி ஒழிக்கப்பட்ட பின்தான் தமிழ்த் தேசிய விடுதலை சாத்தியம் என்று ஒரு தரப்பும், சாதியப்பிரச்னையை கையில் எடுத்தால் தமிழ்த் தேசிய போராட்டம் நகராது என்று ஒரு தரப்பும், தமிழ்த்தேசியப் போராட்டத்தின் மூலமாக சாதீயப்பிரச்சனையை ஒழிக்கமுடியாது என்றும் பல தரப்புகள் தங்களுடைய கருத்து தளத்தில் இருந்து மாறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றன .

இதில் தமிழ்த்தேசியம் குறித்து பல்வேறு போக்குகளுடைய கருத்துக்கள், சாதி ஒழிப்பு குறித்து பல்வேறு போக்குகளுடைய கருத்துக்கள், தமிழ்த் தேசியம், சாதி ஒழிப்பு இரண்டையும் ஒருங்கே பேசும் கருத்துக்கள் ஆகியவை இங்கே நிலவுகின்றன. இது போன்ற பலவிதத் தரப்புகளில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும், சாதிக் கொடுமைகளுக்கு உள்ளாகி இருக்கும் மக்கள் தரப்பில் இருந்து வரும் குரல்கள், வரலாறு நெடுகவும் பல்வேறு தரப்புகளால் வஞ்சிக்கப்பட்டு வரும் நாங்கள் (ஒடுக்கப்படும் மக்கள்), வழக்கம் போல அதிகார வர்க்கங்களால் இந்த தேசிய இனப்போராட்ட நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் மேலும் தேசிய விடுதலைக்குப் பின் சாதி ஒழிப்பு நடத்தப்படாமல் போனாலோ, இப்போது ஆதிக்கம் செய்யும் சமூகங்களே அரசாக அமைந்தாலோ எங்கள் வாழ்வில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை பலமாக வாதிடுகின்றன. இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இத்தகைய ஆழமான சமுக முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையினைக் கண்டறியாமல் நாம் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக செல்ல முடியும் என்பது முக்கியமான விடயமாகும் அல்லது குறிப்பிட்ட தூரம் சென்றபின் மீண்டும் எப்பொழுதும் நம்மை பின்னுகிழுக்கும் உள்முரணால் நாம் தோல்வியடைய நேர்வதை தவிர்ப்பதற்கு இப்போதே முன்நடவடிக்கையாக சமூக முரணை தீர்ப்பதற்குரிய வழியினை முடிவு செய்ய வேண்டும். இந்த முரண்பாடுகள் குறித்த கருத்தியல்களில் தெளிவு கொள்ள, ஐயங்களை விலக்கிக் கொள்ள, அறியாமையினை தவிர்த்துக் கொள்ள ஒரு ஆழமான, விரிவான ஆய்வு தேவைப்படுகிறது என்று கருதுகிறோம். இந்த பல்வேறு தரப்புகளின் கருத்துகளில், நிலைபாடுகளில் பெரிதளவோ அல்லது சிறிதளவோ உண்மையும், நியாயமும் இருக்கின்றன. உண்மையும், நியாயமும் இல்லாத கருத்துகளும், நிலைப்பாடுகளும் உண்டு. இவற்றில் தகுதியானவற்றைத் தெரிவு செய்து, தகுதியற்றவையை நீக்கி தேவையான கருத்தியல்களையும், சாத்தியமான நடைமுறைகளையும் தொகுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை.

இத்தகைய தொகுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும், ஏனைய தேசத்து மக்களுக்கும் அவர்களது போராட்டதிற்கு துணை செய்வதாக அமையும். தமிழ்நாட்டின் இன்றைய சூழலில் தமிழ்த்தேசியமும், சாதியப் பிரச்சனைகளும் குறித்த விவாதம் தேவையானதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது. இவை முழுவதுமாக விவாதிக்கப்பட்டு ஒரு சரியான கருத்தியல் தெளிவும், நடைமுறை வழிகாட்டுதலும் உருவானால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தில் சிறைபட்டு கிடக்கும் அனைத்து தேசங்களுக்கும், ஒடுக்கப்பட்டு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் ஒரு தீர்வாக அமையும் என்பதை முன் வைக்கிறோம்.

விவாதம் பற்றி

இந்த ஆய்வு "தமிழ்த்தேசியமும், சாதிய பிரச்சனைகளும்" என்கிற பொது தலைப்பில் இருந்தும் விவாதிக்கப்படலாம், ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைப்பாடுகளில் இருந்து "தமிழ்த்தேசியமும், சாதியப் பிரச்சனைகளும்" என்னும் மைய விவாதத்தில் இருந்து விலகாமல் இந்த ஆய்விற்குத் துணை செய்யும் தலைப்புகளைக் கொண்டும் பேசலாம்; தேவை கருதி சில முக்கியமான அல்லது யாரும் தொட மறுக்கும் விடயங்களை தலைப்பாக வைத்து விவாதம் நடத்தலாம். தமிழ்த்தேசியவாதிகள் சாதிப் பிரச்னையைப் பற்றி பேசுவதில்லை, ஆதிக்க சாதிகளின் நலனுக்கான கருத்தியலே தமிழ்த்தேசியம், சாதியை ஒழித்த பின் சமுக விடுதலையைப் பற்றி பேசலாம்,  தமிழ்த்தேசிய விடுதலை பெற்ற பின் சாதி தானாக அழிந்து விடும், தமிழ்த் தேசியம் இந்திய அளவிலான ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்தினை சிதைக்கும்; அதனால் அது தேவையில்லை, தமிழ்த் தேசியம் சாதியை ஒழிக்குமா? போன்ற கேள்விகளை முன்னிறுத்தியும் விவாதிக்கலாம்.

ஆய்வரங்கங்கள் பற்றி

இந்த ஆய்வரங்கத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்படுகின்றது. புதிய சிந்தனைகள், வழிமுறைகள், கட்டுரைகள், ஆவணங்கள் மற்றும் ஆலோசனைகள் ஆய்வரங்கத்திற்கு கொடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் பகுதிகளில் ஆய்வரங்கத்தினை ஏற்று நடத்த விருப்பம் உள்ளவர்கள் எங்களை அணுகவும். அனைவரும் இந்த ஆய்வரங்கங்களுக்கு வந்து உங்களுடைய முழு ஒத்துழைப்பையும் நல்கி இந்த ஆய்வரங்கத்தின் உண்மை நோக்கம் நிறைவேறிட உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

“தமிழ்த்தேசியமும், சாதியப்பிரச்சனைகளும்”!
 ஆய்வரங்கம்
 
இடம்: "பி" எட் அரங்கம், லயொலா கல்லூரி, சென்னை       
நாள்:22.01.2012, ஞாயிற்றுக்கிழமை
நேரம்:மாலை 5.30 மணி முதல்
 
வரவேற்புரை: தோழர்.பொற்கோவன்

ஆய்வுரை:

தோழர்.சோழநாடன், தமிழ்நாடு மக்கள் பேராயம் 

தோழர்.தமிழ்நேயன், து.பொ.செ, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

பேராசிரியர்.சிவலிங்கம், சுயமரியாதை தலித்சக்தி

தோழர்.பொன்னீலன், எழுத்தாளர் 
 
தோழர்.விடுதலை இராசேந்திரன், து.பொ.செ, பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: தோழர்.இளையராசா

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழர் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆய்வுக்கழகம், தமிழ்நாடு
9042274271/9941996919

(இதே தலைப்பில் ஆய்வரங்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆதரவு தர விரும்புபவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்)