பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது.

மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் தகுதி கொண்ட தலைவர் ஈ.வெ. இராமசாமி தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி, பெரியாரை உடனடியாக வைக்கத்துக்குப் புறப்பட்டு வரச் சொல்லி தந்தி கொடுத்த நாள் 4.4.1924 மற்றும் 12.4.1924. மட்டுமின்றி, பாரிஸ்டர் கேசவ மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் பெரியாருக்கு கடிதமும் எழுதவே, பெரியார் உடனடியாகப் புறப்பட்டு வைக்கத்தை அடைந்த நாள் 13.4.1924. அதாவது கிளர்ச்சி தொடங்கிய இரண்டே வாரத்தில் பெரியார் வைக்கம் சென்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். பெரியார் கடைசி கட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்றார் என்று பார்ப்பனர்கள், சில பார்ப்பன தாசர்கள் உண்மைக்கு மாறாகப் பொய்யைக் கட்டவிழ்த்து வருகிறார்கள்.

அருவிக்குத்தி சிறையில் முதலில் ஒரு மாதம் அடைக்கப்பட்ட பெரியார், விடுதலையாகி மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில் திருவிதாங்கூர் சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டார்.

“ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய  நிலையிலே உள்ள ஒருவர், கேரளத்தில் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது” என்று இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. கேசவமேனன், தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

அப்போது சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் பிரதிநிதியாக இருந்த சி.டபிள்யூ இ காட்டன் எனும் அய்.சி.எஸ். பிரிட்டிஷ் அதிகாரி, சென்னை மாகாணத் தலைமைச் செயலாளருக்கு 1924, ஏப்.21ஆம் தேதியிட்டு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“சத்தியாகிரக இயக்கத்துக்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால் அது வெகு நாள்களுக்கு முன்பாகவே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால் வைக்கம் அறப்போருக்கு சென்னையிலிருந்து நிதி மற்றும் தகுதி வாய்ந்த தலைமையும் கிடைத்ததால் ஆதரவு அபரிமிதமாகி விட்டது. ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டியது.

கேரளாவுக்குப் புறப்படுவதற்கு முன், தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்துவிட்டது” என்று எழுதினார் அந்த அதிகாரி. வைக்கம் சத்தியாகிரகம் குறித்து ஆய்வு செய்த பேராசியர் டி.கே. ரவீந்திரன், தனது ஆய்வில் (Vaikam Satyagraha and Gandhi) இதைப் பதிவு செய்திருக்கிறார். வைக்கம் கோயில் வீதிகள் ஈழவர்கள் உள்ளிட்ட தீண்டப்படாதவர்களுக்கு திறந்து விடப்பட்டதைக் கொண்டாடும் வெற்றி விழா நடத்தப்பட்ட நாள் 29.11.1925. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவரே பெரியார் தான். பார்ப்பனர்கள் இதற்குப் பிறகாவது தங்களது பார்ப்பனியப் புளுகுகளை நிறுத்திக் கொள்ளட்டும்.

பெரியார் குறித்து ரவிக்குமார், எம்.பி.

பெரியார் குறித்த கடுமையான விமர்சனங்களை ஒரு காலத்தில் முன்வைத்து வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.  அவரது பேட்டி ஒன்று ‘ஜூனியர் விகடன்’ (26.6.2019) இதழில் வெளி வந்துள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்பு உறுதிமொழியை எடுக்கலாம் என்ற கருத்தை அவர்தான் தெரிவித்ததாக அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  கடைசியாக அவரிடம் ‘ஜூ.வி.’யில் கேட்கப்பட்ட கேள்வியையும் அவரது பதிலையும் கீழே தருகிறோம்.

கேள்வி : பெரியாரை அதிகம் விமர்சித்தவர் நீங்கள். தி.மு.க.வுடனான இந்த இணக்கம் நீடிக்குமா?

இரவிக்குமார்: நான் அடிப்படையில் ஒரு பெரியாரியவாதி. கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணிச் செயலாளராக இருந்தேன். மதச்சார்பு அரசியல் மேலோங்கும் காலத்தில் நாம் பெரியாரை வாளாகவும் கேடயமாகவும் ஏந்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்

நடுவண் அரசின் சமூக நீதித்துறை ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதற்காக அம்பேத்கர் மய்யம் என்ற ஒரு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. திருமணமான இணையர்களில் ஒருவர் பட்டியல் இனப் பிரிவினராக இருத்தல் வேண்டும். நெல்லை, சாத்தூர், நாகர்கோயிலைச் சார்ந்த மூன்று இணையர் ஊக்கத் தொகைக் கேட்டு விண்ணப்பித் திருந்தனர்.

அம்பேத்கர் மய்ய பார்ப்பன அதிகாரிகள், இந்த இணையர் இந்து சாஸ்திரப்படி புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்தவில்லை என்று கூறி ஊக்கத் தொகையை வழங்க மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன், சமூக நலத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தமிழ்நாட்டில் இந்து சாஸ்திரங்களை மறுத்து நடக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இந்து திருமணச் சட்டத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்து சாஸ்திர அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்று கூறிய அம்பேத்கர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மய்யம் அவரது கொள்கைக்கு எதிராக, ‘இந்து சாஸ்திர’ முறைப்படி நடக்கும் திருமணங்களுக்கே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கூறுவது அம்பேத்கருக்கே இழைக்கும் அவமானம். பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம், அண்ணா முதல்வராக இருந்தபோது சட்டமாக்கப்பட்டுள்ளதால், சுயமரி யாதைத் திருமணம் புரிந்து இந்த மூன்று தம்பதி களுக்கும் ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை கிடைத் துள்ளது. வேறு மாநிலங்களில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இல்லை. திராவிட இயக்கத்தின் சாதனைக்குக் கிடைத்துள்ள வெற்றி இது.

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் - மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்.

நீட் தகுதிக்கான தேர்வு என்று கூறப்படும் வாதத்தில் கடுகளவும் உண்மையில்லை என்பதற்கு சான்றாக ஏராளமான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இயற்பியல், வேதியலில் பூஜ்யம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் தகவல்களைக் கடந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே இந்த மோசடிகள் நடந்துள்ளன. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான ‘நீட்’ கட்-ஆப் மதிப்பெண் 250 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்கூட சுயநிதி கல்லூரிகளுக்குரிய நிர்வாகக் கோட்டாவின் கீழ் சேர்ப்பதற்கு தமிழக அரசு தேர்வுக் கமிட்டி அனுமதித்திருக்கிறது.

இயற்பியல்,  வேதியல், உயிரியல் தேர்வுகளில் தவறான விடை எழுதி மதிப்பெண் குறைப்புக்குள்ளான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திலும் தோச்சிக்குரிய மதிப்பெண்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கப்பட்டு நீட்டே கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. அரசு நிர்ணயித்த ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்தாலும்கூட நிகர்நிலைப்ப பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் அவர்கள் கேட்கும் மிகப் பெரும் கட்டணத் தொகையைக் கட்ட முடியாத மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர முடிவதில்லை. தகுதி மதிப்பெண் பெறாதவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும் இடம் கிடைத்து விடும்.

‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்....

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. ‘பெரியார் வாழ்க; தமிழ் வாழ்க’ என்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கத்துக்கு எதிராக பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர்களே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள்.

‘இராவண-இராம’ யுத்தம் நடந்த காலத்தில் இராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி அயோத்தி மக்கள் வேண்டினார்கள் என்பது ஒரு செவி வழிக் கதை. இராமன் போரில் வென்று சீதையையும் இராவணனிடமிருந்து மீட்டான் என்று இராமாயணம் கதை கூறுகிறது. இராமன் வெற்றி பெற்ற பிறகும் இப்போதும் ‘ஜெய் ராம்’ என்று ஏன் முழங்குகிறார்கள்; இப்போது ‘ஸ்ரீராம பகவானுக்கு’ என்ன ஆபத்து நேர்ந்திருக்கிறது? சீதையை யார் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்?

ஆனாலும், காலங்காலமாக இராமாயணம் - பாரதம் என்ற புராணக் கதைகள், பார்ப்பனரல்லாத மக்களை மூளைச் சலவை செய்து,  வேத மதப் பிடிக்குள் வைத்திருப்பதற்கே ‘இராமகாதை’, ‘இராம காலட்சேபம்’, இராமாயண நாடகங்களாகக நடத்தப்படுகின்றன. 10 நாள்கள், 15 நாள்கள், ‘இராமாயண உபன்யாசகங்கள்’ தமிழ்நாட்டில் நடந்தது உண்டு. இறுதி நாள்களில் ‘இராமன் பட்டாபிஷேகக்’ கதைகளை உருக்கமாகப் பேசி, மக்களை கண்ணீர் சிந்த வைப்பார்கள். உபன்யாசகக்காரர்களுக்கு பட்டாபிஷேக உரை நாளில் பொன், பொருள்,  பட்டாடைகள் பரிசுகளாகக் குவியும்.

இப்போதும் வடமாநிலங்களில் ‘இராமகாதை’ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் பெரியார் இயக்கப் பிரச்சாரத்தால் இந்த காலட்சேபங்கள் குறைந்திருக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் ஜபோல் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி ‘இராம காதை’ நிகழ்ச்சி நடந்தபோது திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் ‘துணிப் பந்தல்’ சரிந்து விழுந்து, கதை கேட்க வந்த 14 பேர் பரிதாபமாக பலியாகி விட்டார்கள். பந்தல் சரிந்தபோது மின்சாரமும் தாக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

‘ஸ்ரீராம ஜெயம்’ என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு பழக்கத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதுவதையே சிலர் தெய்வீகப் பணியாகவும் கருதுகிற மனநிலை இன்றும் தொடருகிறது. ‘இராமனுக்கு’ வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இராமன் கதையை பக்தியுடன் கேட்க விரும்புகிறவர்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு இருக்குமா இல்லையா என்பதையே இராஜஸ்தான் சம்பவம் உணர்த்துகிறது.

Pin It