குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் அல்லாத ஒருவர் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்ற வாய்ப்பின் கீழ் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிவுரைக் கழகத்தின் முன் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் கருத்துகளை முன் வைத்தார்.

“இராணுவத்தை எதிர்த்துப் போராடுவது பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் திட்டம் அல்ல; இதற்காக தீர்மானம் நிறைவேற்றி திட்டமிடப்பட்டு இந்தப் போராட்டம் நடக்கவில்லை. தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு இந்தியா ஆயுத உதவிகளை இலங்கைக்கு செய்து வந்த நிலையில் 83 ராணுவ வாகனங்கள் வரிசையாக அணி வகுத்துச் சென்றபோது அதில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் கொண்டு செல்வதாக தகவல்கள் கசிந்தன. எப்படியாவது தடுத்திட வேண்டும் என்ற கொதிப்பில் - அப்பகுதியைச் சேர்ந்த 300 பொது மக்கள் திரண்டு வாகனங்களை மறித்தனர். செய்தியறிந்து கழகப் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் - ம.தி.மு.க.வினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் திரண்டனர். பத்திரிகையாளரும், தொலைக்காட்சி குழுவினரும், காவல்துறையினரும் கூட திரண்டனர். எல்லாமே வெளிப்படையாகவே நடந்தன. தமிழர்கள் கொல்லப்படப்பட்டு விடுவார்களோ என்ற பதைபதைப்பின் ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் இந்தப் போராட்டம்” என்று கூறிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கடந்த காலங்களில் இதே போல் கோவைக்கு பயிற்சி என்று சிங்கள ராணுவத்தினர் வந்த போது, பெரியார் திராவிடர் கழகத்தினர் காட்டிய எதிர்ப்பால், முதலமைச்சர் கலைஞரே தலையிட்டு பயிற்சி பெற வந்த சிங்களர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ததை சுட்டிக்காட்டினார். அதே போல் தமிழக அரசு தலையிட்டு நிறுத்த முயலும் என்ற நம்பிக்கை தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என்றும் விளக்கினார்.

“இங்கே வீற்றிருக்கும் மூத்த நீதிபதிகளாகிய தங்களுக்கு தமிழகத்தின் சமூக வரலாறு எங்களைவிட நன்றாகவே தெரியும். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு பெரியாரின் போராட்டங்களும், கருத்துகளுமே முக்கிய தாக்கமாக இருந்ததை தாங்கள் அறிவீர்கள். அந்த கருத்துகளைத் தொடர்ந்து இளம் தலைமுறையிடம் கொண்டு சென்று பெரியார் கொள்கைகளை உயிர்த்துடிப்போடு செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பாடுபடும் ஒரே அமைப்பு, இன்றைக்கு பெரியார் திராவிடர் கழகம் தான். பதவி, அதிகாரம், சுயநலன் ஏதுமின்றி - சமுதாயத்துக்காகவே உழைக்கும் கொள்கை உணர்வாளர்களைக் கொண்ட இந்த இயக்கம் - அதற்காகவே கடும் விலையைத் தந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு சட்டம் எங்கள் இயக்கத்தினர் மீது தொடர்ந்து ஏவப்படுவதும் இந்த அறிவுரைக் கழகத்தின் முன் நாங்கள் மீண்டும் மீண்டும் வந்து நியாயம் கேட்பதும் தங்களுக்கே தெரியும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பின்னால் ஓடாமல் - பெரியார் கொள்கை பின்னால் நாங்கள் ஓட விரும்புவதாலேயே நாங்கள் இவ்வளவு அடக்குமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது” என்றார்.

ஈழத்தில் எல்லாமுமே முடிந்துவிட்டது. இனப்படுகொலைகளை நடத்தி முடித்து - உரிமைக்குப் போராடிய இயக்கத்தினரையும் கொன்று குவித்துவிட்டனர். இந்தியாவின் ஆதரவோடு ஈழத் தமிழர்கள் இலங்கை அரசின் பிணையக் கைதிகளாக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் அந்தத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஒரே “குற்றத்துக்காக” எங்கள் தோழர்கள் இப்போதும் அடக்குமுறை சட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்தப் போராட்டத்தினால் பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று - எந்த ஆதாரங்களையும் அரசால் முன் வைக்க முடியவில்லை. எனவே தேசிய பாதுகாப்பு சட்டம் முறை கேடாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதால் இதை ரத்து செய்து நியாயம் வழங்க வேண்டுகிறோம்” என்று குறிப்பிட்டார்.