‘அக்னி பாத்’ திட்டத்துக்கு வடமாநிலங்களில், இளைஞர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனாலும், எதிர்ப்புகளை புறந்தள்ளி திட்டம்நிறைவேறத் தொடங்கியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தில் நான்காண்டுகள் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு அரசு வேலை உத்திரவாதம் எதையும் தராது. ஏற்கெனவே இராணுவத்தில் இருக்கின்றவர்களுக்கான சலுகைகளும் இவர்களுக்குக் கிடையாது. எனவே, அக்னிபாத் திட்டம் என்பது வேறு; இராணுவத்தில் பணியாற்றுவது என்பது வேறு. இந்த அக்னிபாத் திட்டத்திலும் இட ஒதுக்கீடு கிடையாது. இராணுவத்திலும் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடே கிடையாது என்கிறபோது ஜாதி, மத அடையாளங்களை ஏன் விண்ணப்பத்தில் கேட்க வேண்டும் ? அக்னிபாத் திட்டத்திற்கு ஜாதி, மத அடையாளங்கள் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன. எதற்காக இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட மதத்தினரை  சேர்ப்பதற்காக கேட்கிறீர்களா ? அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் இராணுவத்தில் சேர்வதற்காக கேட்கிறீர்களா ? என்று வட நாட்டில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசு இதற்கு ஒரு விளக்கம் கூறுகிறது. இராணுவத்தில் ஏற்கெனவே ஜாதி, மதம் கேட்கிற பழக்கம் இருந்து கொண்டு இருக்கிறது. அதைத்தான் இப்போதும் கேட்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இராணுவத்தில் அந்தப் பழக்கம் இருந்திருக்கலாம். ஆனால், அக்னிபாத், இராணுவம் இரண்டும் ஒன்றல்ல என்று ஆகிவிட்டதற்குப் பிறகு, இதிலும் இட ஒதுக்கீடு இல்லை என்று கூறிவிட்டப் பிறகு , இராணுவத்தில் ஜாதி, மதம் கேட்கிற முறையை அக்னிபாத் திட்டத்திலும் இவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும் ?

 அரசு ஒரு பதிலை கூறுகிறது. “இராணுவத்தில் இறந்து போனவர்கள், இறந்த போன பிறகு அவர்களை அடக்கம் செய்வதற்கு எந்த மதத்தின் சடங்கு படி அடக்கம் செய்வது என்பதற்காகத்தான் மதத்தைக்  கேட்கிறோம்” என்று கூறுகிறார்கள். மதத்தின் அடையாளம் என்பது இறந்து போனவர்களுக்காக சடங்குகளை செய்வதற்காகத்தான் என்ற முறை இராணுவத்தில் பின்பற்றப்படுகிறது.

அதே ஒன்றிய பாஜக ஆட்சி அரசியலில் என்ன செய்து கொண்டிருக்கிறது ? மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துகிறது. நாட்டை மதத்திற்குப் பயன்படுத்துகிறது. சமூகத்தை மதத்தின் அடிப்படையால் கூறுபோடுகிறது, ஜாதியின் அடிப்படையால் பிளவுபடுத்துகிறது, பிற மதத்தினர் மீது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறது. அரசியல் சட்டத்தில் மதவாத அரசியலுக்காக, பல்வேறு திருத்தங்களை கொண்டு வருகிறது, காஷ்மீர் மக்களின் உரிமையை மறுக்கிறது. இவ்வளவுக்கும் மதம் இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இராணுவத்தில் மதம் என்பது இறந்தவர்களுக்கான சடங்குகளுக்கு மட்டுமே. நிஜ வாழ்க்கையிலும் இறந்தவர்களுக்கான சடங்குகளுக்கு மட்டும் மதம் இருக்குமென்று சொன்னால், எந்தத் தொல்லையும் சமூகத்தில் இல்லாமல் போயிருக்குமே. ஆனால், சமூகத்தை அரசியலை ஏன் மத அடிப்படையில் கொண்டு வந்து நாட்டை மதக் காடாக மாற்றுகிறீர்கள் ? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்