உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீசார் பசுவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அனுப்பி வைத்த சம்பவம் இராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலம் மேவாத் மாவட்டத்தில் உள்ள கோல்கோவான் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான் (31). இவர் தனது நண்பர் ஒருவருடன் இரண்டு பசுமாடுகளை ஹரியானாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். ராம்கர் பகுதியில் உள்ள லலாவண்டி கிராமத்துக்கு வந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பசுக்களை அங்கிருந்து கடத்திச் செல்வதாக நினைத்து அவர்களை கடுமையாகத் தாக்கியது.

இதில் காயமடைந்த அக்பர்கான் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உயிருக்குப் போராடிய 31 வயது இளைஞரான அக்பன் கானுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மாடுகளை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்ல முன்னுரிமை கொடுத்தது தெரிய வந்துள்ளது.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 12.41 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15-லிருந்து 20 நிமிடத்திற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் ராம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு அக்பர் கான் சுமார் 4 மணிக்குதான் இறந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அக்பர் கான் அடிபட்டு கிடந்த இடத்திலிருந்து மருத்துவமனை வெறும் 6 கி.மீ தொலைவில்தான் உள்ளது. இந்த 6 கி.மீ தொலைவை கடக்க போலீசாருக்கு 3 மணி நேரம் ஆகியுள்ளது.

அதேநேரத்தில் சம்பவ இடத்திலிருந்து இரண்டு மாடுகளை கௌசாலா என்ற இடத்திற்கு வெறும் இரண்டு மணி நேரத்தில் கொண்டு சென்றுள்ளனர். கௌசாலா 10 கி.மீ தொலைவில் உள்ள இடமாகும். அதாவது அக்பர் கானை

6 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், 10 கி.மீ தொலைவில் உள்ள இடத்திற்கு மாடுகளை முதலில் கொண்டு சென்றுள்ளனர். இதன்மூலம் உயிருக்கு போராடியவரை மீட்காமல் மாடுகளுக்கு போலீசார் முக்கியத்துவம் அளித்தது தெரியவந்துள்ளது.