இந்தியாவின் “சமூகப் பொருளாதார - ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு” விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. இன்னும் ஜாதி கணக்கெடுப்புப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்க்கையைக் கடப்பதற்கு கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 23.5 சதவீதம் பேர். கிராமங்களில் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தவர்கள் 5.4 சதவீதம்.

3.4 சதவீதம் மட்டுமே கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கிராமப்புறங்களில் 90 சதவீதக் குடும்பங்களில் ஊதியம் பெறும் ஊழியர்கள் எவரும் கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ‘கல்வி’க்காக தனிக் கடவுளைக் கொண்டுள்ள நாடு இது. ‘பாரதப் பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘மகான்கள் அவதரித்த’, ‘வேதம் செழித்த’, ‘அவதாரங்கள்’ எடுத்த பூமி என்று பெருமை பேசப்படும் நாட்டின் நிலை இதுதான். மக்களை வறுமையில் மூழ்கச் செய்துவிட்டு, ‘இந்து’ தேசத்தை உருவாக்கிட துடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் என்ன நிலை? இந்தியாவிலேயே நகர் மயமாவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா முழுமைக்கும் கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் 73 சதவீதம். ஆனால், தமிழகத்தில் 57.53 சதவீத குடும்பங்களே கிராமத்தில் வகிக்கின்றன. 42.47 சதவீத குடும்பங்கள் நகரங்களில் வசிக்கின்றன. ‘வர்ணாஸ்ரமம்’ வேர் பிடித்து நிற்கும் கிராமங்கள் மறைந்து, கிராம-நகர வேறுபாடுகள் ஒழிய வேண்டும் என்று பெரியார் வலியுறுத்திய கருத்து வெற்றி பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும். கிராமங்களில் வாழும் 85.58 சதவீத மக்களின் வருமானம் ரூ.5000க்கு கீழேதான் இருக்கிறது. 55.80 சதவீத குடும்பங்கள் நில மற்றவர்களாக கூலி வேலை செய்வோராகவே உள்ளனர். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஒப்பீட்டளவில் வறுமை நிலை குறைந்திருப்பதற்குக் காரணம், பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுவதுதான் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கிராமக் குடும்பங்களில் அலைபேசிகள், இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதில் தமிழகமே முன்னணியில் நிற்கிறது. இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா முழுதும் (கிராமக் குடும்பங்களில்) 17.43 சதவீதம்; தமிழ்நாட்டில் 29.91 சதவீதம். அலைபேசிகளைப் பயன்படுத்துவோர் (கிராமக் குடும்பங்களில்) தேசிய சராசரி 68.35; தமிழ்நாட்டில் 78.46. அதேபோல் குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்தும் கிராமக் குடும்பங்கள் - தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அதிகம் (12.13 சதவீதம்). தமிழ் நாட்டு கிராமங்களில் குடியிருப்போரில் அரசு வேலைகளைவிட தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போவோர் அதிகம். ஆனால் பாசன வசதி கொண்ட பயிரிடும் நிலங்களை வைத்துள்ள பட்டியலினப் பிரிவினர் தேசிய சராசரியைவிட (17.47), தமிழ்நாட்டில் குறைவாகவே (5.01) உள்ளனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து, தமிழகத்தையோ சீரழித்துவிட்டார்கள் என்று ‘வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று பேசி வந்தவர்களுக்கு இந்தப் புள்ளி விவரங்களே சரியான மறுப்பாகும். ஆனாலும், தமிழ் நாட்டில் அதிகாரத்துக்கு மாறி மாறி வந்த திராவிட அரசியல் கட்சிகள் திட்டமிட்ட தொலைநோக்குப் பார்வையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கவலையோடு செயல்பட் டிருந்தால், நல்ல மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்க முடியும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. இந்தியாவில் ஒப்பீட்டளவில் ஆய்வு செய்யும்போது தமிழகம் ஒரு படி மேலே இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் நீண்டகாலம் நடந்த - சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களின் தாக்கமும் இந்த வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருப்பதை மறுத்துவிட முடியாது.

இப்போது, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லாமல், பின்னோக்கி இழுத்துப்போக ஜாதி வெறி, மதவெறி சக்திகள் தீவிரம் காட்டி வருவது தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்தாகும். சமூக-பொருளியல் தளங்களில் தமிழர்கள் வலிமை பெறவும் முன்னேற்றத்தை நோக்கி நகரவும் வலிமையான மக்கள் இயக்கங்கள் உருவாக வேண்டும்.

இந்த இயக்கங்கள் ‘ஜாதி, மத, பார்ப்பனிய ஆபத்துகளையும் அதன் மக்கள் விரோத கருத்துகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். விளிம்பு நிலை மக்களின் வாழ்வுரிமைக்காக அவர்களின் கல்வி-பொருளாதார-வேலை வாய்ப்பு உரிமை களைப் பறிக்கும் பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களையும் அதற்கு பச்சைக்கொடி காட்டும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து, மக்களை அணி திரட்ட வேண்டும்; இது காலத்தின் அறைகூவல்!

Pin It