உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள்; வாழ்வியல் மாற்றங்கள்; அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்துவதில் பாய்ச்சல்; வேகமான கல்வி வளர்ச்சி; அதிகார மிக்க பதவிகள்; அரசியல் அதிகாரங்கள் - இவ்வளவையும் கட்டுடைத்து, ஜாதி அடுக்கு இப்போதும் தன்னை தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. புதிய புதிய உருமாற்றங்களை எடுத்து மனித சமூகத்தைக் ‘கவ்வி’ நிற்கிறது.

periyar 450ஜாதியக் கட்டமைப்புக்கான சமூக வேர்கள் குறித்து தமிழ்நாட்டில் பேசப்பட்ட அளவுக்கு வேறு எங்கும் பேசப்பட்டதே இல்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலேயே இது குறித்த விவாதங்களும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. ‘சுயராஜ்யம்’ பேசுகிறவர்கள், சுயமரியாதையை மறுக்கும் ஜாதியத்தை பார்ப்பனியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் அன்றைக்கே பெரியாரும் - அம்பேத்கரும் கேட்டனர். அயோத்திதாசரும் அவர்களுக்கு முன்பு இதே கேள்வியைத் தான் கேட்டார். வேத காலத்தில் உருவாக்கப்பட்டது. வர்ணாஸ்ரமம், அதுகூட அப்போது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்று அம்பேத்கர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வேதம் கற்கும் அறிவை அடிப்படையாக வைத்து குருகுலத்தில் குரு - யார் பிராமணன்? யார் சூத்திரன்? என்பதை உறுதி செய்தார். பிறப்பால் அனைவரும் பிராமணர். அதாவது இரு பிறப்பாளர் இல்லை என்ற நிலை தான்.

ஆனால், அந்த இரு பிறப்புக்குரிய அதிகாரம் தங்களிடமே நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சூழ்ச்சியால் ‘குரு’விடம் இருந்த அதிகாரத்தை மாற்றி ‘தந்தை’க்கு வழங்கினார்கள். தந்தை மகனையும் மகன் பேரனையும் பேரன் கொள்ளுப் பேரனையும் ‘பிராமணராக்கி’ வாரிசுரிமையாக்கிக் கொண்டார்கள். அந்த வாரிசுரிமையின் ஆணவக் குரல் தான் இப்போது ‘அனைத்து ஜாதியினரும்’ அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கும்போதும் கேட்கிறது. “பாரம்பரியம்; பழக்க வழக்கம்; மாற்ற முடியாதது; ஆகமம் கூறுகிறது; ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்கிறார்கள்”. வர்க்கப் புரட்சிக்கு ஆயுதம் தூக்கும் போராளிகள் நடத்தும் அழித்தொழிப்பைவிட ‘சத்ரு சம்ஹார யாகம்’ வலிமையானது என்கிறார்கள். திமுக ஆட்சியையும் முதலமைச்சரையும் அழிக்க சத்ரு சம்ஹார யாகம் நடத்தியிருக்கிறார்கள். அந்த மாவோயிசப் போராளிகளுக்கு ‘என்கவுண்டர்’ காத்திருக்கிறது என்றால் இந்த ‘என்கவுண்டர்’ யாகக்காரர்களுக்கு கடவுள், மதம், ஆன்மீகம், இந்துத்துவாக்களின் ஆதரவும் பாராட்டுகளும் காத்திருக்கின்றன.

1920களிலேயே பல ஜாதி சங்கங்கள் தமிழ்நாட்டில் தோன்றின. அந்த சங்கங்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் கொடுத்தன. தங்கள் மீது திணிக்கப்பட்ட ‘தீண்டாமை’, ‘ஜாதி இழிவு’ அதனடிப்படையிலான ‘தொழில்’களை எதிர்த்தன. பண்பு ரீதியில் இந்த சங்கங்கள் சமூக நீதிக்கான முற்போக்கானவை என்றே வரலாற்றுப் பார்வையில் மதிப்பிட வேண்டும். பெரியார் 1926 முதல் 1948 வரை பல ஜாதி சங்க மாநாடுகளில் பங்கேற்றுப் பேசினார். ஆதி திராவிடர் மாநாடுகள், நாடார் சங்க மாநாடுகள், செங்குந்தர் மாநாடுகள், வன்னியர் சங்க மாநாடுகள், பிற பார்ப்பனரல்லாத சங்க மாநாடுகளில் அவர் நிகழ்த்திய உரை அனைத்துமே அந்த மக்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது, போராட்டத்துக்கு ஆயத்தமாக்கியது.

“நீங்கள் துணிவு கொண்ட புரட்சிக்கு தயாராகுங்கள்; நீங்கள் ஏன் கீழ் ஜாதி என்று கேள்வி கேளுங்கள்” என்று பேசிய பெரியார், கடவுள், மதக் கட்டளை அரசாட்சி என்று அதற்குக் காரணம் கூறினால் அவைகளை சின்னாபின்னமாக்குங்கள். இனியும் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள்" என்று முழக்கமிட்டார். (ஈரோடு ஆதி திராவிடர்கள் வரவேற்பு - குடிஅரசு 4.12.1932)

அப்படிப் பேசிய பெரியார், அதே மாநாடுகளில் தங்கள் ஜாதிக்கு பெருமை தேடவும் அதற்குப் புராணங்களில் ஆதாரங்களைத் தேடவும் முயலாதீர்கள் என்று எச்சரித்தார். அப்படிப் பெருமை பேசியவர்களை அவர்கள் மாநாடுகளிலேயே நேரடியாகவே கண்டித்தார்.

கிறிஸ்துவ மதம் மாறிய பிறகும் தீண்டாமை, ஜாதி ஒழியாத நிலையில் ஆதி திராவிட கிறிஸ்துவர்கள் மாநாட்டில் பேசிய பெரியார், “மதக் கட்டளையையும் கடவுள் நம்பிக்கையையும் கொண்ட அடிமை - ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவே முடியாது” என்று கூறி, ‘கிறித்துவத்தின் பரலோக இராஜ்யம்’ ஒரு போதும் விடுதலை வாங்கித் தராது என்று பேசினார்.

தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுவித்துக் கொள்ள வெளிநாடுகளுக்குப் போய் விடுங்கள்; அல்லது இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்ற யோசனைகளை முன் வைத்த பெரியார், இஸ்லாம் திணித்த பெண்ணடிமை சடங்குகள் கிறிஸ்துவ தேர்பவனி, சந்தனக் கூடு, ‘ஹலால்’ ஆடு வெட்டும் முறைகளை கண்டிக்கத் தவறியதே இல்லை.

1920களில் தொடங்கப்பட்ட ஜாதி சங்கத்தின் நோக்கங்களும் இப்போது ஜாதி சங்கங்களின் நோக்கங்களும் முற்றிலும் முரண்பட்டதாகவே இருக்கிறது.

ஜாதி இன்று புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. ஜாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்பது முழுமையான சாத்தியமா? என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். ஜாதி ஒழிப்புக்கான முதல் நிலையாக ‘ஜாதிகளுக்குள் சமத்துவம்’ என்ற இலக்கை எட்ட வேண்டியிருக்கிறது. சமூக நீதி கோட்பாடுகள், அரசின் சமூக நலத் திட்டங்கள், வன்கொடுமை சட்டங்கள், மக்களிடையே பிரச்சாரங்கள் இதற்கு துணை நிற்கின்றன. ஆனாலும் இந்தக் கோட்பாடுகளையும் சட்டங்களையும் உதவிகளையும் பயன்படுத்திக் கொண்டே இறுகிப் போய் நிற்கிறது. மிகச் சிறிய அளவில் தளர்த்திருக்கிறது என்று கூறலாம். ஜாதிப் பிடிவாதம் சமூகப் பண்பாடாக மாறிக் கிடக்கிறது. இரண்டாவது கட்டமாக, ஜாதிகளின் பெருமிதத்தை உடைத்து ஜாதிகளின் ‘உள்ளடக்க மதிப்பீடுகளைஇல்லாது ஒழித்தல், காதல் வழிப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணங்கள் - பெண்ணியக் கோட்பாடுகள், நகர்ப்புற வாழ்க்கை, உயர்கல்வி போன்ற அம்சங்கள் ஜாதி இறுக்கத்தைக் குலைப்பதற்கு உதவுகின்றன. ஆனாலும் சமூகத்தின் பொதுச் சிந்தனையாக இது மாற்றப்படாமல் திட்டமிட்டு ‘ஜாதிய வாதிகளால்’ தடுக்கப்பட்டே வருகிறது.

ஜாதியக் கட்டமைப்பு, கிராமங்களில் ‘இறுக்கம்’ கலையாமல் நிலை பெற்று நிற்பதற்குக் காரணம், ஜாதி - ‘சமூகமாக உறவுகளாக’ தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருப்பதும் சமூக உறுப்பினர்களின் மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் உரிமையை தனது அதிகாரப் பிடிக்குள் வைத்திருப்பதும் தான். மகனோ, மகளோ விரும்புகிற வேறு ஜாதிக்காரரை மணம் முடிக்க பெற்றோர் விரும்பினாலும், ‘ஜாதி சமூகம்’ தன்னை ‘அவமதிக்கும்’ என்ற உளவியலும் ஜாதியைக் காப்பாற்றுவதால், கிடைக்கும் ‘மரியாதை’யும் ஆணவக் கொலை வரை தூண்டி விடுகிறது.

இந்த ‘சமூக ஜாதி’யத்தைக் தகர்க்க ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் ஜாதி எதிர்ப்பாளர்கள் வெளியே வந்து சுய ஜாதி எதிர்ப்பாளர்களாக மாற வேண்டும் என்ற கருத்தை ஆழமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. ‘வன்னிய ஜாதி எதிர்ப்பு வன்னியர் சங்கம்; கவுண்டர் ஜாதி எதிர்ப்பு கவுண்டர் சங்கம்; நாடார் ஜாதி எதிர்ப்பு நாடார் சங்கம்’ போன்ற அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டிய வரலாற்றுத் தேவை உருவாக்கியிருப்பதாகவே நான் உணருகிறேன். இந்த ஆலோசனையை ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின் விவாதத்துக்கு முன் வைக்கிறேன். அதாவது சுயஜாதி மறுப்பு அணி, ஜாதி அடையாளத்துடனேயே களமிறங்க வேண்டும்.

ஜாதியத்தை இறுக்கிப் பிடித்து வந்திருப்பது - தேர்தல்; வாக்கு வங்கி அரசியல். நவீன ‘இந்து மத’மாக மாறி ஜாதி வாக்காளர்களை ஜாதி அடிப்படையில் தேர்தல் அரசியல் ஒன்று திரட்டிக் கொண்டே நிற்கிறது. இதற்கு இப்போதுள்ள தேர்தல் விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம். பெரும்பாலான ஜாதி வேட்பாளர்களை அந்தத் தொகுதியில் நிறுத்துவதற்கு தடை போட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இயக்கங்களை நடத்தலாமா என்பது குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

மூன்றாவதாகத் ‘தமிழ் திருமணப் பதிவு மய்யம்’ என்று பெயர் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மய்யங்களை நடத்தி, தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்கிறார்கள். இந்தப் போக்கை எதிர்த்து கடுமையான கண்டனக் குரல்களை எழுப்ப வேண்டும்.

ஜாதி ஆணவப் படுகொலை குற்றத்துக்கு உள்ளாகி, தண்டிக்கப்பட்ட குடும்பங்கள், ஜாதி வன்முறையில் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இடஒதுக்கீடு உரிமைகளைக் கோர முடியாது என்ற திருத்தம் பற்றியும் ஆலோசிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதியக் கட்டமைப்பு மனிதத்துக்கு எதிரானது. அதை வலியுறுத்தும் மதம், கடவுள், சாஸ்திரம், சடங்குகளை விளக்கும் பரப்புரைகளை மக்களிடம் கொண்டு செல்வது மிக மிக அவசியம். குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் இந்த இயக்கத்தை முன்னெடுக்கும்போது அதன் வீச்சும் தாக்கமும் மிக மிக வலிமையாக இருக்கும் என்றே கருதுகிறேன். தீண்டாமை ஒழிப்பு என்ற நிலையிலிருந்து ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள் வலிமை பெற்றாக வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

(தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வெளிவரும் ‘அணையா வெண்மணி’ காலாண்டிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை. ‘அணையா வெண்மணி’, டிசம் - 2021)

Pin It