த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கள்ளக்காதல் கொலைகளுக்கும் கவுரவ கொலைகளுக்கும் என்ன வித்யாசம்?

முன்னதில் கொலையும் ரகசியமாக நடக்கும், பின்னதில் கொலையும் “கவுரவமாக”-ஊருக்கே தெரிந்து-நடக்கும்! எங்கேயோ வடஇந்தியாவில் நடப்பதாக நினைக்காதீர்கள், நமது ராமநாதபுரம் மாவட்டத்தி லேயே அந்த அகவுரவக் கொலைகள் நடக்கின்றன. அது சரி, இதைத் தடுக்க ஏதோ சட்டம் வருகிறது என்றார்களே என்னாயிற்று?

இடைத்தேர்தலில் தெலுங்கானா கட்சி பெற்ற வெற்றி எதைக் காட்டுகிறது?

தெலுங்கானா என்றால் கம்யூனிஸ்டுகள் நடத்திய மகத்தான நிலப்போராட்டம்தான் நினைவுக்கு வரும். இப்போதோ தனி மாநிலப் போராட்டம் ! ஏற்றத் தாழ்வான முதலாளித்துவ வளர்ச்சியே இத்தகைய கோரிக்கைக்கு அடிப்படைக் காரணம். இதை மக்களுக்குப் புரிய வைக்கவும், சமத்துவமான வளர்ச்சியைக் காணவும் உரிய நடவடிக்கைகள் அங்கே இல்லை என்பதையே இந்த வெற்றி உணர்த்துகிறது.

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி. மாரியூர்

14 கோடி டன் உணவு தானியங்களைப் பாதுகாக்கப் போதிய இடமின்றி அரசு தவிக்கிறது என்று சரத்பவார் கூறுகிறாரே?

அதனால்தான் இந்தத் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியது. அதையும் செய்ய முடியாது என்கிறார் பவார். தானியங்கள் கெட்டுப் போனாலும் பரவாயில்லை இலவசமாக விநியோகிக்க மாட்டேன் என்கிற பக்கா முதலாளிதான் இந்த நாட்டுக்கு விவசாய அமைச்சர்! மார்க்சிஸ்டு கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியதுபோல ஏழைகள் பாதுகாப்புத் திட்டம் அல்ல; எலிகள் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது மத்திய அரசு!

அ. முரளிதரன், மதுரை-3

நமது தேசப்படத்தை வரைகையில் இலங்கையின் படத்தையும் சேர்த்து வரைவது ஏன்?

அதுதானே! அப்படி வரைவது ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் அகண்ட பாரதம் கோட்பாட்டை அங்கீகரிப்பதாக ஆகிவிடும். எல்லை தாண்டுகிறார்கள் என்று சொல்லி இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகிற இலங்கையை நமது தேசப்படத்தோடு சேர்த்து வரைவது வினோத முரண் ஏதோ பழக்கதோஷத்தால் வரை கிறார்கள் போலும்.

ரெ. மருதசாமி, மயிலாடுதுரை.

“எனது குடும்பமே தி.மு.க தான்” என்று சமீப காலமாக மீண்டும் மீண்டும் விளம்பரப் படுத்தியே திரு.வி.க. விருது பெற்ற இமையம் என்ற எழுத்தாளர் “தலைவர்களின் புகைப்படங்களிலேயே நம்முடைய கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை காண்கிறார்கள்” என்று கேலி செய்திருக்கிறாரே. . ?

நந்தன் எனும் தாழ்த்தப்பட்ட மகன் இருந்ததேயில்லை, அவன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததற்காக எரித்துச் சாம்பலாக்கப்படவில்லை என்று கூசாமல் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதை ரவிக்குமார் துவங்கி இந்த இமையம் வரை கண்டு கொள்ளவேயில்லை. ஒரு கொடூர ஒடுக்குமுறை மூடி மறைக்கப்படுகிறதே என்று இவர்கள் யாரும் கொந்தளித்து எழவில்லை. ஆனால், கம்யூனிஸ்டு களைக் கேலி செய்வதில் மட்டும் உற்சாகம் காட்டு கிறார்கள். தலித் மக்கள் சகலத்தையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

என்.எம். கணேசன், தஞ்சாவூர்

தற்போது நீங்கள் படித்ததில் பிடித்த புத்தகம் எது?

அதன் பெயர் “ஒரு கொத்து பழைய கடிதங்கள்”. இவற்றில் பெரும்பாலானவை ஜவகர்லால் நேருவுக்கு உலகப் பிரமுகர்கள் எழுதியவை, மற்றவை நேரு பிறருக்கு எழுதியவை. இவற்றை நேருவே 1958-ல் நூலாக வெளியிட்டிருந்தார். இப்போதுதான் என் கையில் சிக்கியது. 1936 ல் லோதியான் பிரபு இவருக்கு எழுதிய கடிதத்தில் சரித்திரம் பற்றிய மார்க்சிய சிந்தாந்தத்தை விமர்சித்திருந்தார். அதற்கு நேரு எழுதிய பதில் இப்படி இருந்தது: “வரலாற்றுக்கான பொருள் முதல்வாத அல்லது பொருளாதாரவாத விளக்கத்தை மார்க்ஸ் அதிகமாக அழுத்திச் சொல்லியிருக்கலாம். அதுவரை இது பெரிதும் புறக்கணிக்கப்பட்டது அல்லது மிக மெலிதாகக் கூறப்பட்டது இதற்கு ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நிகழ்வுகளை வடிவமைப்பதில் இதர காரணிகளுக்குள்ள பங்கை மார்க்ஸ் ஒருபோதும் நிராகரித்ததில்லை. அவர் மிக அதிகமாக முக்கியத்துவத்தை ஒன்றுக்கு கொடுத்தார்-அது பொருளாதாரக் காரணி. அதற்குச் சற்று அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டார் என்பது பெரிய விஷயமல்ல. என்னைப் பொறுத்தவரை வரலாறு பற்றிய அவரது விளக்கமே வரலாற்றை ஓரளவு தெளிவு படுத்துகிறது. அதற்கு அர்த்தம் தருகிறது. தற்போதைய காலத்தை நாம் புரிந்து கொள்ளவும் அது உதவுகிறது. அவரது தீர்க்கதரிசனங்கள் பலவும் நடப்புக்கு வந்திருப்பது மிக பிரமாதமாகும்”. 1959 ல் கேரளத்தின் முதல் கம்யூனிஸ்டு அரசைப் பதவி நீக்கம் செய்தவரும் 1930 களில் மார்க்சியம் பேசியவர்தான், அதிலும் மார்க்சியத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பேசியவர் தான். இந்தக் கடிதங்களைப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தத்துவ விவாதம் நடத்திய அரசியல் தலைவர்கள் அன்று இருக்கத்தான் செய்தார்கள்.

எஸ்.கே.சந்திரமவுலி, சென்னை.

“தீராநதி” யில் தமிழவன் எழுதும் தொடரைப் படிக்கிறீர்களா? உங்கள் கருத்து?

படைப்பின் சமூக உள்ளடக்கம் பற்றிக் கவலைப்படாத இலக்கியப் போக்கே தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது என்று சாதிப்பதே அவரது நோக்கமாகத் தெரிகிறது “உலக இலக்கியத் திறனாய்வு இன்று பிற்போக்கு/முற்போக்கு என்று இலக்கியத்தைப் பிரிப்பதில்லை” என்று ஓங்கிச் சொல்லுகிறார். அதிநவீன இலக்கிய வாதிகளின் உலகம் இதை ஆதினால் தொட்டுச் செய்து வருவது தெரிந்த விஷயம் தானே. அவர்களைப் பொறுத்தவரை அவர்களது தனி உலகமே எல்லாருக்கு மான உலகம்! சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு இந்த கூட்டத்தார் தற்போது கூடுதல் உற்சாகம் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையே. அதற்காக, இலக்கியங்கள் தம் உள்ளுறை அளவில் பிற்போக்கு/முற்போக்கு என்று பெரிதும் பிரிந்திருக் கின்றன எனும் மெய்ப் பொருள் மறைந்து போகாது.

ஜெயகாந்தனின் “ஜெயஜெய சங்கர” வையும், புதுமைப்பித்தனின் “ கடவுளும் கந்தசாமிப் பிள்ளை யையும்” ஒரே வரிசையில் தான் வைக்க வேண்டும் என்கிற வாதம் முன்னதைக் காப்பாற்றுகிற ராஜதந்திரம். இதன் நீட்சிதான் தமிழவனின் கீழ்க்கண்ட வாதம்-

“திராவிட எழுத்தாளர்களும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர் களும் கலை கலைக்காக என்ற முழக்கத்தை எதிர்த்த தன் மூலம் நுட்பமான இலக்கிய மரபைத் தந்த புதுமைப் பித்தன், மௌனி, கு.ப.ரா.வையும் இவர்கள் பிரதி நிதித்துவப்படுத்திய ஆரோக்கியமான எல்லாச் சிந்தனை மரபையும் எதிர்த்தனர்.” புதுமைப் பித்தனின் சிந்தனை மரபை எப்போது கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார் கள்? அவரை உயர்த்திப் பிடித்ததே தொ.மு.சி. ரகுநாதன் போன்ற கம்யூனிஸ்டுகள் தாம்.

சமூக நீதிப் போராட்டங்கள் மற்றும் உழைப்பாளர் இயக்கங்கள் கண்டு ஒவ்வாமை ஆகி பெரிதும் மனக் குகை மர்மங்களைத் தேடிப்போன மௌனி, கு.ப.ரா. வைக் காபந்து செய்ய அவர்களைப் புதுமைப்பித்தன் வரிசையில் நிறுத்தி அழகு பார்க்கிறார் தமிழவன். இவரைப் போன்றவர்கள் எவ்வளவுதான் சாதுரியம் காட்டினாலும் கலை-இலக்கிய உலகில் பிற்போக்கிற்கும் முற்போக்கிற்கும் இடையிலான போராட்டம் தவிர்க்க முடியாதது. காரணம், மனித வாழ்வில் அது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கும் கலை- இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுகிறவர் அதிமேதாவியாக இருப்பார், அவரை வரலாறு கண்டு கொள்ளாது. இப்போதே தமிழவன் ஆங்காங்கே புலம்பியிருக்கிறார். (ராஜாஜியையும், அண்ணாவும் அதிநவீனவாதிகளை ஆதரிக்கவில்லையே என்கிற புலம்பல் ஓர் உதாரணம்), எதிர்காலத்திலும் புலம்புவார்.

எஸ்.காதர் முகைதீன், வேலூர்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளவுக்காகிலும் தங்களுக்குச் சம்பளம் வேண்டும் என்று எம்.பி.க்கள் கேட்பது நியாயம் தானே. . . ?

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி அதில் தேறி அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் அதிகாரிகள். அப்படி ஏதேனும் தேர்வு எழுத வேண்டும் என்று சொன்னால் எம்.பி.க்கள் ஒப்புக் கொள்வார்களா? எம்.எல்.ஏ., எம்.பி. பதவியெல்லாம் ஒரு காலத்தில் பொதுச் சேவையாக இருந்தது. இப்போதோ தேர்தல் செலவு எனும் முதலீட்டிற்கு எதிர்ப்பார்க்கப்படும் வட்டியும், ஆதாயமுமாய் ஆகிப் போனது. தேர்தல் செலவு குறைய வேண்டும், அதையும்-கம்யூனிஸ்டு கட்சிகள் செய்வதுபோல- கட்சிகளே செய்ய வேண்டும் என்று ஆக்கினால்தான் பல தொல்லைகள் ஒழியும்.

Pin It