இந்தியாவின் ஜனநாயகம் தேர்தல் முறை குறித்து, பெரியார் கருத்துகளின் தொகுப்பு

கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படிச் சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத் திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடு வதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும்.

- ‘விடுதலை’ 12.1.1956

சனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எந்தவிதப் பலனும் அடைய முடியாது. நமக்கு அதில் எந்தவித உரிமையும் இருக்க முடியாது. இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவர். அதில் அடிமையாகத்தான் இருக்க முடியும். சனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறையே பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப் பட்ட சூழ்ச்சி முறையே.

- ‘விடுதலை’ 20.1.1959

சரியாகவோ தப்பாகவோ இந்தியாவில் சனநாயக ஆட்சி வந்து விட்டது. ஆனால் கட்சி ஆட்சிகள் அதைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கின்றன? இதைப் பார்த்து மற்ற நாட்டான் என்ன நினைப்பான்? சனநாயகவாதிகள் வெட்கப்பட வேண்டாமா?

- ‘விடுதலை’ 19.3.1968

சதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும் அயோக்கியத்தனமு மாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் சாதிக்கு நலத்தையும், சௌகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் இது சனநாயகமா? பித்தலாட்ட நாயகம், அயோக்கிய நாயகம், சாதி நாயகம் என்பதுதான் பொருந்தும்.

- ‘விடுதலை’ 15.10.1954

சனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பது தான். சனநாயகம் என்ற பித்தலாட்டத்தின் பெயரால் வருபவர் ஒரு சர்வாதிகாரிதான். இப்படிப்பட்ட சனநாயகத்தில் என்ன வாழுகிறது? இந்தச் சனநாயகத்தைக் குறை சொல்வதா என்று பயந்து கொண்டே எல்லோரும் இருந்து விட்டால் இக் கேடுகள் ஒழிய வேறு வழி என்ன இருக்கிறது?

- ‘விடுதலை’ 25.8.1958

போதிய பிரதிநிதித்துவம் இல்லாத வர்களுக்குச் சரியான நீதியும் பிரதிநிதித்துவமும் வழங்குவதுதான் சனநாயகத் தத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகும். எல்லா வகுப்பு களுக்கும் ஏற்ற பிரதிநிதித்துவம் அளிக்காத எந்தச் சனநாயகமும் நொண்டிச் சனநாயகமாகத்தான் - உதவாக்கரைச் சனநாயகமாகத்தான் - காட்சியளிக்கும்.

- ‘விடுதலை’ 6.3.1959