அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்த ‘மதவெறி’ ‘வகுப்புவாத’ செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது.

அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர் டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை துணிவுடன் வெளிப் படுத்தினார். இருவரையும் பணி நீக்கம் செய்தார் டிரம்ப். இப்போது அமெரிக்க நீதிமன்றமே, டிரம்பின் ஆணையை நிறுத்தி வைத்து விட்டது. டிரம்ப் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது. இந்தத் தடை ஆணையைக் கூட டிரம்ப் நேர்மையுடன் செயல்படுத்தவில்லை. அவர் தடை செய்துள்ள ஏழு இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் அய்ந்து நாடுகள் அமெரிக்காவின் கொடூரமான இராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள்.

அதே நேரத்தில் 2001 செப்டம்பரில் அமெரிக்கா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய சவூதி அரேபியா, எகிப்து, அய்க்கிய அரபு அமீரகம், லெபனான் நாடுகளைச் சார்ந்தவர்கள் ‘டிரம்ப்’ விதித்த தடைப்பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்கள். டிரம்ப் தடை செய்த நாடுகளில் அகதிகளாகி, அமெரிக்காவுக்குள் வரவிரும்புவோர், அமெரிக்காவின் நேசத்துக்குரிய அரபு சர்வாதிகாரிகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்கள். இப்படி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சார்ந்த ஏற்கனவே அமெரிக்காவில் குடிபுகுந்தவர்கள் மீதும் டிரம்ப் நிர்வாகம் கடும் அடக்குமுறைகளை எந்த நேரத்திலும் ஏவிவிடும்; அல்லது வெளியேற்றும்.

டிரம்ப்பின் இந்தத் தடை உத்தரவு நாடுகளுக்கு எதிரானது என்பதைவிட வறுமையின் கோரப் பிடிகளில் தவிக்கும் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தியாவுக்குள்ளே வாழும் ஏழை எளிய இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்கும் ‘இந்துத்துவ’ வெறியைத்தான் டிரம்ப்பும் செயல்படுத்துகிறார். அதுமட்டுமல்ல வேலை வாய்ப்புகளிலும் ‘டிரம்ப்’ கை வைத்துவிட்டார்.

இந்தியாவில் மக்கள் வரிப் பணத்தில் அய்.அய்.டி. போன்ற உயர்கல்வியைப் படித்த பார்ப்பனர்கள் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் பறந்து விடுகிறார்கள். அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதில் மிகவும் தீவிரம் காட்டுகிறார்கள். ‘பாரத தேசம்’ - ‘இந்து கலாச்சார பூமி’ என்றெல்லாம் இங்கே பகட்டுப் பேசும் ‘பார்ப்பன சுதேசிகளும்’ இந்துத்துவ ஆதரவாளர் களும் இப்படி ‘இந்தியர்கள்’ அமெரிக்கக் குடிமக்கள் ஆவதை ஒருபோதும் எதிர்ப்பதில்லை. அங்கிருந்து கோடிக் கணக்கில் டாலராக அனுப்பி வைக்கும் ‘தொகை’யை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். ‘டிரம்ப்’ தங்கள் மதவாதத்துக்கு துணை நிற்பார் என்று நம்பிய பார்ப்பனர்களுக்கு இப்போது ஒரு அதிர்ச்சியடி விழுந்திருக்கிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் டாலர் ஊதியமாக பெறுவோர் மட்டுமே இனி அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற முடியும் என்ற மசோதா, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.

அமெரிக்காவுக்கு வேலை வாய்ப்புகளுக்காக செல்லும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு ‘எச்1பி’ என்று பெயர். தற்போது இந்த ‘விசா’ வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 60,000 டாலராக உள்ளது. இது இரட்டிப்பாக உயர்த்தப்படும்போது, இவ்வளவு கூடுதல் ஊதியத்தை வழங்க அங்கே உள்ள நிறுவனங்கள் முன் வராது. இந்தியாவிலிருந்து இவ்வளவு தொகையை ஊதியமாகத் தந்து, பணி வாய்ப்புகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கும் நிலையும் தடைப்பட்டு விடும். அமெரிக்கர்கள் மட்டுமே இனி அங்கே வேலை செய்ய வேண்டும் என்பதே இந்த மசோதாவின் உள்நோக்கம். இந்த மசோதா சட்டமாவதை தடுத்து நிறுத்த டிரம்புக்கு தேர்தலில் தீவிர ஆதரவும் நன்கொடையும் வழங்கிய பார்ப்பனர்கள், டிரம்பிடம் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கைக்கு நியாயம் கற்பித்தவர்கள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதையே சுட்டிக் காட்டி வந்தார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற ஆபத்துகளை உணர மறுத்தார்கள். இப்போது அமெரிக்கா உள்ளிட்ட ‘உலகமயமாக்கல்’ கொள்கையை ஆதரித்த நாடுகள் தங்கள் நாட்டு வேலை வாய்ப்புகளை சொந்த மக்களுக்கே வழங்கி பாதுகாத்துக் கொள்ளும் (Protectionism) கொள்கைக்கு வந்து விட்டன. இப்போது டிரம்ப் இந்தக் கொள்கையோடு ‘இந்துத்துவா’வையும் சேர்த்துக் கொண்டு விட்டார்.

பார்ப்பனியம் தங்களின் மேலாண்மைக்குப் பயன்படுத்தி வரும் உலகமயமாக்கல் - இந்துத்துவம் என்ற இரண்டு கொள்கைகளுமே மக்கள் விரோதமானவை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.