மதுரை மீனாட்சிக் கோயில் மண்டபம் தீப்பிடித்து எரிந்துவிட்டது. ‘தீ விபத்து’ என்று பா.ஜ.க.வின் ‘தமிழிசை’யும், ‘தேசபக்தர்’ எச்.ராஜாவும் கூறுகிறார்கள். ராஜா இன்னும் ஒரு படி மேலேயே போய்விட்டார். ‘சி.பி.அய். விசாரணை வேண்டும்’ என்கிறார். ‘இந்துக்கள் வழிபாடு - கோயில் நிர்வாகங்களில் அரசு தலையீடு கூடாது’ என்று நீட்டி முழங்கும் ‘ஆன்டி இந்தியன்’ புகழ் ராஜாவும் இந்து முன்னணியும் இப்போது சி.பி.அய். விசாரணை கோருவது அரசின் தலையீடு அல்லவா?

‘ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரங்கள்’, ‘அவாள்களை’க் கொண்டே நடத்தாவிட்டால் ஆபத்து வந்து விடும் என்று அலறும் பார்ப்பனர்கள், இப்போது மீனாட்சி கோயிலில் ஆகமக் குளறுபடிகள் நடந்துவிட்டனவா என்று ஆராயாமல், சி.பி.ஐ. விசாரணையைக் கோருவது ஏன்? பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் காப்பாற்றும் முயற்சியல்லவா?

இவர்களுக்கு இப்படி எல்லாவற்றிலும் இரட்டை வேடம் தான்.

‘பூஜை புனஸ்காரங்கள்’ நடக்கும்போது கோயிலுக்குள் இருக்கும் சிலையை ‘பகவான்’ என்பார்கள். அதே பகவான் வெளிநாடு கடத்தப்படும்போது அல்லது கோயிலுக்குள்ளே விபத்துகள் ஏற்படும்போது, பகவானை ‘சிலைகள்’ ஆக்கி விடுவார்கள். பகுத்தறிவாளர்கள் சிலை என்று கூறினால், “இந்து விரோதி; இந்து தான் இளிச்சவாயர்களா?” என்று வீரம் பேசுவார்கள். அதே வாய்தான் இப்போது தீ விபத்தால் ‘சிலை’களுக்கு பாதிப்பு இல்லை என்று பேசுகிறது. வடிவேலு பாணியில் கேட்டால் இது ‘நாற வாயா?’

வேத பார்ப்பன அகராதியில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு அர்த்தம் உண்டு.

அர்ச்சனையில் அவாள் தருவதற்குப் பெயர் ‘தீர்த்தம்’. அதே கோயிலில் தீ விபத்து நேர்ந்து, தீயணைப்புப் படை விரைந்து வந்து தீயை அணைக்கப் பீய்ச்சி அடிப்பதற்குப் பெயர் ‘தண்ணீர்’. மீனாட்சியைக் காப்பாற்ற தீயணைக்கும் படை ‘தீர்த்தம்’ அடித்தது என்றால் அவ்வளவுதான். ‘ஆன்டி இந்தியன்’ கூச்சல் காதைத் துளைக்கும்.

கோயில் வளாகத்தில் பார்ப்பனர் நெருப்பை மூட்டினால் அந்த நெருப்புக்குப் பெயர் ‘அக்னி’. அதே கோயில் மண்டபம் எரிந்தால் அது தீ விபத்து, ‘அக்னி பகவான் விஜயம்’ அல்ல.

ஆண்டவனிடம் பக்தர்களின் கோரிக்கைகளை பரிந்துரைத்து வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க அர்ச்சகருக்கு தட்டில் போடும் பணம், உண்டியலில் போடும் பணம் ‘காணிக்கை’. பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தன்னிடம் வேலை கேட்டு வந்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாங்கிய பணம் காணிக்கையல்ல; இங்கே ‘இலஞ்சம்’ என்று பெயர். துணைவேந்தர் ‘காணிக்கை’ வாங்கினார் என்று கூறினால் அவ்வளவுதான்!

அப்போது பகவான் அவதாரம் எடுக்க பூமியைப் பிளந்தால் பூமிக்குப் பெயர் பூமா தேவி. அதே பூமி, வெப்பமாகி வருவதைத் தடுக்க மாநாடுகள் நடத்தினால் அங்கே ‘பூமா தேவி’ வெப்பமடை கிறாள் என்று சொல்லக் கூடாது. ‘பூமி வெப்ப மடைகிறது’ என்றே சொல்லவேண்டும்.

பார்ப்பனத் திமிரோடு மக்களைக் கூறு போடுகிறவன் ‘இந்தியன்’. மக்களைக் கூறு போடாதே என்று மக்கள் ஒற்றுமையைப் பேசினால் ‘ஆன்டி இந்தியன்’.

மீனாட்சிக்கு சக்தி இருந்தால் தீ விபத்தைத் தடுத்திருக்க முடியாதா? என்று கேட்டால், அவன் ‘இந்து விரோதி’.

“மீனாட்சியால் தீ விபத்தை தடுக்க முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ‘அவாளால்’ தண்டிக்கவும் முடியாது. எனவே சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று கேட்டு மீனாட்சி சக்தியையே சந்தேகத்துக்குள்ளாக்கு கிறவன் - உண்மையான இந்து; உண்மையான ‘இந்தியன்’.

அடேங்கப்பா, இவாள்கள் ஜகதலக் கில்லாடிகளடா, சாமி!