இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் பட்டினி இன்னும்கூட அன்றாட உண்மை நிலையாக இருக்கிறது. பல சமயங்களில் கடனுக்காகக் கொத்தடிமையாக இருப்பதே ஒரே வழியாக இருக்கிறது.
 
பட்டினியுடன் வாழ்ந்த குழந்தைப் பருவ நினைவுகள் இருண்டவை. பிற குழந்தைகளின் நினைவுகளிலிருந்து இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு மாறுபட்டவை. பன்சி சபர் ஒரிசாவின் போலங்கீர் என்னும் ஊரைச் சேர்ந்தவன். அவன் தனது தந்தை காலையிலிருந்து மாலை வரை ஒரு கொத்தடிமையாக வேலை செய்ததை நினைவு கூர்கிறான். அவருக்கு அவரது எஜமானன் வீட்டில் உணவு கிடைத்தது. அதுபோக மாதம் ஒன்றுக்கு 15 கிலோ நெல் கிடைத்தது. “நான் எவ்வளவு தான் கொண்டு வந்தாலும் அது உங்களுக்குப் போதுவதில்லை" என்று அவர் ஏமாற்றத்தில் கத்துவார். அவனது தாய் நலிந்து போயிருந்தாலும் காட்டிற்குப் போய் பசுந்தழைகளையும், பூக்களையும், மூங்கில் குருத்துக்களையும் புளியங்காய்களையும் மாங்காய்களையும் பறித்து வந்து அதை கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ளத் தருவார். "அது முழுக்க முழுக்க வெறும் தண்ணீராகத் தான் இருக்கும், ஒன்றிரண்டு தானியங்கள் அதில் மிதக்கும், அவ்வளவு தான்." என்று பன்சி வறட்சியுடன் கூறினான். பல நாட்கள் அவர்கள் பட்டினியுடன் தான் தூங்கச் சென்றனர்.

அதுபோல துருபதி மாலிக்கின் தாயார் ஒரு நாள் முழுக்க வேலை செய்து கிடைக்கும் சிறிதளவு அரிசியை ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து அதில் உப்புச் சேர்த்துத் தருவார். அவரைத் தவிர அனைவரும் பானையைச் சுற்றி அமர்ந்துகொண்டு அதிலிருந்து ஒவ்வொருவரும் சிறிது அருந்துவர். தனித் தனியாகத் தட்டுக்களில் வைத்து உண்ணும அளவுக்கு ஒருபோதும் மிகுதியாகக் கிடைத்ததில்லை. அவர்களுடைய தந்தை அவர்கள் கூடுதலாக அருந்துவதற்கு விட்டுவிடுவார், பின்னர் அதில் ஏதாவது சாதமோ கஞ்சியோ மீதமிருந்தால் அதை அவர்களுடைய தாய் அருந்துவார். 

 இந்தியாவின் பல பகுதிகளில் நான் சந்தித்த பல ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைகளுக்கு உணவு தர முடியாதைத் தான் தங்கள் மனதில் தாங்கிக் கொள்ளமுடியாத மிகப் பெரிய சுமையாகக் கருதுவதாகக் கூறினர். இராஜஸ்தானின் பாரன் பகுதியில் சகாரியப் பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகள் பல சமயங்களில் உணவுக்காக அழுததையும், தான் தனது சொந்த ஈரலைப் பிய்த்தெடுத்துக் குழந்தைகளுக்குத் தரமுடிந்தால் என்று என்னுமளவுக்குப் அவர் நம்பிக்கை இழந்த நிலையில் புலம்பினார். தனது நான்கு குழந்தைகளும் பட்டினியில் கிடந்து துடிப்பதைப் பார்த்து பன்சி சபர் இப்பொழுது துயரப்படுகிறார். தனது குழந்தைகளின் பசியாற்றுவதற்காக அவருடைய மனைவி அண்டை வீடுகளில் வடித்த கஞ்சிக்காக கையேந்துகிறார். தங்களுடைய குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக அந்தக் கணவனும் மனைவியும் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். அவருடைய மனைவி நாளுக்கு நாள் நலிந்துகொண்டே போகிறார். ஆனாலும் மலைச் சரிவுகளில் ஏறிச் சென்று மூங்கில் குருத்துக்களைக் கொண்டுவந்து வேகவைத்துத் தன் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். அதன் மோசமான வாடையால் குழந்தைகள் அதை உண்ண‌ மறுக்கிறார்கள்.

 ஆந்திரப் பிரதேசத்தில் ஷேக் கப்பார் என்று ஒரு முதியவர் பல சமயங்கள் வெளியில் தெரியாத வண்ணம் வேதனையில் தவிக்கிறார். அவருடைய பேத்தி எதையாவது ஆசையாகக் கேட்டு நச்சரிக்கும்போது அந்தக் குழந்தையின் தாய் தனது செயலிழந்து போன கையைத் தூக்கி அதன் கன்னத்தில் அறைகிறாள். வறுமையின் வரம்பை அறியாத அந்தப் பச்சிளம் குழந்தை தேம்பித் தேம்பி அழுதுகொண்டே தூங்கிப் போகிறாள்.

கணவனால் விலக்கி வைக்கப்பட்ட பெண்ணான லாய்பாணி, அக்கம்பக்கத்துக் குழந்தைகள் பிஸ்கோத்துக்களும் மிட்டாய்களும் சாக்கலேட்டுக்களும் தின்னும்போது அதைப் பார்த்து தனது குழந்தைகளும் வேண்டும் என்று கேட்டு அடம் பிடிக்கும்போது தான் வேதனையில் வெந்து போவது பற்றிக் கூறுகிறார். தன்னிடம் சிறிது பணமோ அல்லது கடையில் கொடுத்து மாற்றிக்கொள்ள சிறிது அரிசியோ கிடைத்தால் அதைக் கொண்டு குழந்தைகளுக்கு எதையாவது வாங்கித் தருவார். இல்லாவிட்டால் அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் எதையாவது கூறி நாளைக்கு வாங்கித் தருவதாக வாக்குறுதியளிக்கிறார். அந்த வாக்குறுதியை ஒருநாளும் அவரால் காப்பாற்ற முடிவதில்லை. 

இராஜஸ்தானில் மணி என்று ஒரு இளம் விதவை தன்னுடைய கைக்குழந்தைக்குப் பலவந்தப்படுத்திப் பாலூட்டிவிட்டு அப்பிஞ்சுக் குழந்தையை ஒரு வயதே ஆன பெரிய குழந்தையிடம் விட்டுவிட்டுச் செல்கிறாள். அக்குழந்தைகள் தமது தாய் மாலையில் கொண்டுவரும் உணவுக்காகக் காத்திருந்துவிட்டுத் தூங்கிப் போகின்றனர். மணி பலநாட்கள் கிடைப்பதை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு தான் பட்டினியுடன் தூங்கப் போகிறாள். இன்னொரு விதவைத் தாய் கமலா சாராயம் காய்ச்சக் கிடைக்கும் சிறிது ஊதியத்தில் தனது மகளுக்குத் துணி எடுத்துத் தருகிறாள். தனக்காக எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. "எனக்கெதற்குப் புதுத்துணி? நான் ஏதாவது புதிதாக உடுத்துக் கொண்டால் இவள் மினுக்கிக் கொண்டு ஆளைத் தேடி அலைகிறாள் என்று புறம பேசுவர்" என்று வெறுப்புடன் நகைச்சுவையாகக் கூறினாள்.

  பட்டினி என்பது பல சமயங்களில் குழந்தைகளைப் பெரியவர்களைப் போல தங்களது வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கச் செய்கிறது. அந்த முடிவு வேதனையளிப்பதாக இருக்கிறது. தெருக்களில் நான் சந்த்தித்த பெரும் எண்ணிக்கையிலான் குழந்தைகள் மிகமிக இளம் வயதிலேயே பிச்சை எடுக்கிறார்கள். அவர்கள் பிழைத்திருப்பதற்காகக் குப்பைக் காகிதங்களைப் பொறுக்குகிறார்கள். அவ்வப்போது பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்; சிறுசிறு குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள்; சிலசமயங்களில் தமது வீடற்ற குடும்பங்களுக்கு உணவு கூட அளிக்கிறார்கள்.

பெற்றோர்களையும் குழந்தைகளையும் மிகவும் வேதனையளிக்கும் விசயங்களில் மிகவும் முதன்மையானது பட்டினி காரணமாக பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமாகும். பெரும்பாலான பெற்றோர்களின் லட்சியம் தங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து ஒரு நல்ல வாழ்க்கைக்கான வாய்ப்பைப் பெறவேண்டும் என்பது தான். ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்வதையும் ஒவ்வொரு வயது வந்தோருக்கும் கண்ணியமான வேலை கிடப்பதையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். ஆனால் பட்டினியே வாழ்க்கையின் ஒரு வழியாகிப் போன குடும்பங்களில் குழந்தைகளையும் தங்களுடன் பட்டினி கிடக்கச் செய்வது அல்லது வெளியே வேலைக்கு அனுப்புவதைத் தவிர வேறு உண்மையான வாய்ப்பு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. 

 ஒரு சின்னஞ்சிறு குழந்தையை வெளியே வேலைக்கு அனுப்புவதை விடவும் பெற்றோருக்கு இன்னும் பயங்கரமானது அக்குழந்தையை கொத்தடிமைக் கடனுக்கு அனுப்புவதாகும். கிராமப்புற இந்தியாவில் குறிப்பாக பழங்குடியின இந்தியாவில் இது பரவலாகக் காணப்படும் உண்மை நிலையாகும். இந்திரதீப் தனது நான்காவது வயதில் போலாங்கீரில் ஒரு சருக்காரின் வீட்டில் கொத்தடிமை குடியாவாகச் சென்று தனது உணவைத் தானே உழைத்துப் பெற்றான். அவன் அதிகாலையில் எழுந்து பசுக்களையும் எருமைகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான். வயல்களுக்கு எஜமானர்களுக்கு உணவு எடுத்துச் சென்றான். வாரத்தில் ஏழு நாட்களும் வருடத்தின் பனிரெண்டு மாதங்களும் இடைவிடாமல் வேலை செய்தான். அதற்குப் பதிலாக அவனுக்கு அவனுடைய எஜமானர்கள் காலையில் தேநீரும் முத்தியும் ஒருவேளைச் சோறும் வருடத்திற்கு 12 கிலோ நெல்லும் ஊதியமாகக் கொடுத்தார்கள். அவன் தனது 21 வது வயதில் நுழைந்தபோது அவன் ஒரு வயது வந்த கொத்தடிமை வேலைக்காரனாக அல்லது ஹாலியாவாக மாறியதைத் தவிர பெரிய மாற்றம் எதுவும் நடந்திருக்கவில்லை. 

 இந்திரதீபுக்கு திருமணம் நடந்தது. ஒரே ஒரு மகன் சாது மட்டும் பிழைத்திருந்தான். அவர்கள் கிராமத்துப் பள்ளிக்கூடத்தைக் கடந்துசெல்லும் போதெல்லாம் அதைத் தனது மகன் எப்படி ஆர்வத்துடனும் ஏக்கத்துடனும் பார்த்தான் என்பதை இந்திரதீப் கவனித்தான். அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அவனது நினைவுக்கு எட்டியவரை அவனது குடும்பத்தில் பல தலைமுறைகளாக யாரும் படித்ததாகக் கேட்டதில்லை. என்ன நேர்ந்தாலும் சரி, தனது மகனை ஒரு கொத்தடிமையாக யாரிடமும் வேலைக்கு அனுப்புவதில்லை என்று அவன் தீர்மானித்தான். அதற்க்குப் பதிலாக அவனும் அவனது மனைவியும் தாங்களே சுமையை ஏற்றுக்கொண்டு அவனைப் பள்ளிக்கு அனுப்புவது என்று முடிவெடுத்தனர். சாது பதினான்கு வயதை எட்டினான். ஏழாம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றான். 

 பேரழிவு மீண்டும் வந்தது. இந்திரதீபுக்கு காச நோய் தாக்கியது. அவன் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள் மருத்துவம் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. அவன் மனைவி காதில் போட்டிருந்த சிறு தங்கக் கம்மலை விற்க வேண்டியதாயிற்று. முன்பெல்லாம் நெருக்கடி வந்தபோது அதை வட்டிக்கடையில் அடகு வைத்துச் சிறு தொகை பெற்று பின் மீட்டுக் கொள்வாள். அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. கடைசியாக மூக்குத்தியும் போனது. இந்திரதீப் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அவனது பார்வை பறிபோய்விட்டிருந்தது. உடல் முடமாகிப் போனது; ஒரு காலும் கையும் செயலிழந்து போயின. கடன் சுமையும் அழுத்தியது. அவனுடைய ஒரே சொத்தாக இருந்த அவனுடைய உடல் வலிமை அவனை விட்டுப் போய்விட்டதால் அதற்கு மேலும் அவனால் கடினமான வேலை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. 

 அவனது சின்னஞ்சிறு மகன் குடும்பப் பொறுப்பு தனது தோளுக்கு வந்து விட்டதை உணர்ந்து கொண்டான். அதை அவன் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்தான். அவனுடைய தந்தை மருத்துவமனையில் சேர்ந்துவிட்டபோதே, அவன் தானாகவே பள்ளிக்குச் செல்வதை விட்டுவிட்டு தனது தந்தையைப் போல நிலப்பிரபுவின் வயல்களில் வேலை செய்யச் சென்றுவிட்டான். அவர்களுடைய மாடுகளை மேய்த்தான். அவனுடைய ஊரிலிருந்து வெளியூருக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது. அவர்கள் மூலமாக அவன் அந்தப் பதினான்கு வயதில் ஹைதராபாத்தில் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு ரூ.900 முன்பணமாக பெற்றுக் கொண்டு தன்னைக் கொத்தடிமையாக்கிக் கொண்டான். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அதுபோல கொத்தடிமையாக இடம்பெயர்ந்தான். மெல்ல அவர்களுடைய கடன் தீர்ந்து அவர்கள் தொடர்ந்து உயிர் வாழ முடிந்தது. ஒரு ஆண்டு அவன் ரூ.8000 கடனுக்காக கண்ணீருடன் ஊரைவிட்டுச் சென்றபோது அவனை நாங்கள் கண்டோம். அவன் ஊரைவிட்டுச் செல்லும்போது ரூ.1000 கொடுத்து அவனுடைய அம்மாவின் மூக்குத்தியை அடகுக் கடையில் இருந்து மீட்டுக் கொடுத்துவிட்டுக் கையில் ரூ.500 செலவுக்காகவும் கொடுத்தான். 

 அந்தப் பையன் படிக்கமுடியாமர்ப் போனது குறித்து அவனுடைய தந்தை இந்திரதீப் இன்னும் கனத்த நெஞ்சுடன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் தனது மகன் பொறுப்புடன், தங்கள் மீது அக்கறையுடன் இருப்பது குறித்து பெருமைப்பட்டார், "அவன் தனக்காக ஒரு ரூபாய் கூட செலவழிப்பதில்லை. அனைத்தையும் தனது குடும்பத்திற்காக சேமித்து வருகிறான்" என்றார்.

  இந்த வழியில் ஒவ்வொரு தலைமுறையும துணிவோடு, ஆனால் நம்பிக்கையின்றி, பட்டினியை எதிர்த்து, கடந்துபோன தலைமுறைக்காகவும் வரப்போகும் தலைமுறைக்காகவும் போராடுகிறது.

நன்றி: தி இந்து

- ஹர்ஷ் மந்தர்
தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It