இந்தியாவில் நடப்பது இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்ட மக்கள் நாயக ஆட்சி அல்ல. இங்கே தொடருவது ‘இராம இராஜ்யம்’ தான் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழியாக உணர்த்தியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, அயோத்தி வழக்கில் நீதிபதிகள், அரசியல் சட்டப் புத்தகங்களை புரட்டவில்லை. மாறாக ‘இராமராஜ்ய’த்தில் இராமன் பின்பற்றிய ‘வர்ணாஸ்ரம’ விதிகளைத்தான் தீர்ப்புக்கான ஆதாரங்களாக எடுத்துக் கொண்டுள்ளனர். ‘இராமராஜ்யத்தில்’ இராமனிடம் பார்ப்பனர்கள் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார்கள். சம்பூகன் என்ற சூத்திரன், “பிராமண” தர்மத்துக்கு எதிராக நேரடியாக கடவுளை நோக்கி தவம் செய்ததால் “பிராமணர்” களுக்கு ஆபத்து வந்துவிட்டது என்பது வழக்கு. இராமன் ‘பிராமண’ தர்மப்படியே நீதி வழங்கினான். நேராக தவம் செய்த சம்பூகனிடம் போனான். சம்பூகன் தரப்பு நியாயங்களை அவன் கேட்கத் தயாராக இல்லை. உறையிலிருந்து வாளை உருவினான். சம்பூகன் தலையை வெட்டி வீழ்த்தினான். பார்ப்பனர்கள் மலர் தூவி, வெற்றிக் கொண்டாட்டம் போட்டனர். ‘வான் உலகத்தின்’ தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்தினர். இது வால்மீகி இராமாயணம் கூறும் ‘இராம இராஜ்ய நீதி’.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலம் தொடர்பான ஒரு வழக்கு வந்தது. அது 1528 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ‘பாபர் மசூதி தொடர்பானது. மசூதி கட்டப்பட்டு 480 ஆண்டுகளாக நிலத்துக்கு உரிமை உள்ளவர்கள். தங்கள் நிலத்தின் மீது அமைந்துள்ள வழிபாட்டு தலத்தில் நிகழ்ந்த ஒரு ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றம் வந்தார்கள்; அது என்ன ஆக்கிரமிப்பு? 

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவில் மசூதிக்குள் உள்ள மூன்று கும்பங்களில் மத்தியிலுள்ள கும்பத்தின் கீழே ‘ராமன்’, ‘சீதை’ சிலைகள் திடீரென வந்தன. அப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், “அது தான் இராமன் பிறந்த இடம்”, எனவே ராமனும் சீதையும் அதிசயமாக சுயம்புவாக அங்கே தோன்றியிருக் கிறார்கள் என்று கூறினார்கள். மீண்டும் அதை தங்கள் பத்திரிகையிலும் எழுதினார்கள். (‘ஆர்கனைசர்’ ஏடு 29.3.1987) அத்வானியும், பா.ஜ.க.வும்கூட “பகவான்” பிறந்த இடத்தில் தாமாகவே தோன்றினார் என்றே அடித்துக் கூறினார்கள். ஆனால், உண்மை என்ன? சில வன்முறை மதவெறி சக்திகள், நள்ளிரவில் ராமன், சீதை சிலையை மசூதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து உள்ளே போட்டார்கள். அத்துமீறி நுழைந்ததற்கான வழக்கும் அப்போதே காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டது. அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்த கே.கே.நய்யார் என்பவர், “நள்ளிரவில் சில இந்துக்கள் மசூதிக்குள் நுழைந்து மசூதியை சேதப்படுத்தியதோடு, சில இந்துக் கடவுள் சிலைகளையும் உள்ளே வைத்தனர்” என்று வானெலி வழியாக, மாநில முதல்வருக்கும் தலைமைச் செயலாளருக்கும் தகவல் தந்தார். 

இப்படி நள்ளிரவில் முறைகேடாக நிறுவப்பட்ட ராமன் சிலைக்கு பூஜைகளைத் தொடங்கினார்கள். இதை எதிர்த்து அப்போதே தொடரப்பட்ட வழக்குகளில் அப்போதும் நீதிமன்றங்கள் சட்ட மீறல்களைக் கண்டிக்க வில்லை; உள்ளே திணிக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிடவில்லை. மாறாக, பிரச்சினைக்குரிய அந்த இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டு வரப்பட்டது. இந்த இடத்துக்கு உரிமை கோரி, 3 பிரிவினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தரம்வீர் சர்மா (பார்ப்பனர்), சுகிர்அகர்வால் (மார்வாடி), எஸ்.யு.கான் (முஸ்லீம்). தனித்தனியாக தீர்ப்புகளை எழுதினாலும், ஒரு கருத்தில் இணைந்துள்ளார்கள். நிலத்தின் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை, அது குறித்த சட்டங்கள் பற்றி பரிசீலிக்கலாமல், ‘இந்துக்களின் நம்பிக்கை’ என்ற அடிப்படையில் நின்று தங்கள் “கதாகாலட்சேபத்துக்கு” தீர்ப்பு என்ற சட்ட வடிவம் தந்திருக்கிறார்கள். 

வழக்கு தொடர்ந்த அமைப்புகள் மூன்று. இதில் இரு பிரிவினர் இந்துக்கள், ஒரு பிரிவு முஸ்லீம்களின் சன்னி வக்பு வாரியம். மூன்று பிரிவினருமே பிரச்சினைக்குரிய இடத்தைப் பங்கீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கவில்லை. முன் வைக்கப்படாத கோரிக்கையை நீதிமன்றம் தீர்ப்பாக்கியிருக்கிறது. பிரச்சினைக்குரிய இடத்தை மூன்றாக பங்கிட்டு, இரண்டு பகுதியை இந்துக்களுக்கும், ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் பரிசாக வழங்கியிருக்கிறது. குரங்கு அப்பம் பங்கிட்ட கதை - எவருக்காவது நினைவுக்கு வந்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல. 

இதே போன்றே ராமராஜ்யத்தில் ராமனிடம் முறையிட வந்த பார்ப்பனர்கள் சம்பூகனுக்கு மரண தண்டனையைக் கோராமலேயே ராமன், சம்பூகன் தலையை வெட்டினான். அதே நீதி முறைதான் இந்த வழக்கிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. எனவேதான் இதை ‘ராமராஜ்ய நீதி’ என்று கூறுகிறோம். 

1949 ஆம் ஆண்டு நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ‘ராமன் - சீதை’ சிலைகள் பிரச்சினைக்கு வருவோம். நல்ல வாய்ப்பாக அத்வானியும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கூறியதுபோல், ராமன் சுயம்புவாக, சீதையுடன் தோன்றினார் என்பதை நீதிபதிகள் ஏற்கவில்லை. சிலை - சில நபர்களால் உள்ளே வைக்கப்பட்டது தான் என்பதை எப்படியோ ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நள்ளிரவில் கள்ளத்தனமாக சிலைகள் வைக்கப்பட்ட இடம் தான் ராமன் பிறந்த இடம் என்ற மூட நம்பிக்கைக்கு சட்டப்பூர்வமான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். 

இந்துக்களின் எந்த புனித நூலும் ‘ராமன்’ பிறந்த இடம் - இதுதான் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை. இராமனின் அதிகாரபூர்வ கதையாக பக்தர்கள் கருதி போற்றும் ‘இராம் சரித மணாசு’ம், ராமன் பிறந்த இடத்தை குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அலகாபாத் நீதிபதிகள் இந்த அபூர்வமான கண்டுபிடிப்பை இராம பக்தர்களுக்கு பரிசாக்கி இருக்கிறார்கள்.

பாபர் மசூதிக்கும், இஸ்லாம் மதத்துக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஆனால், இந்து மதத்துக்கோ இராமனுக்கோ வரலாறுகள் இல்லை. நம்பிக்கைகள் மட்டுமே இருக்கின்றன. இந்த வழக்கில் சான்றுகள் சட்டங்கள் முன் மண்டியிட்டு விட்டன. நம்பிக்கைகளே வெற்றி பெற்றுள்ளன. 

இந்த வழக்கில் நேரடியாக தான் பிறந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்காட வந்தவன் ‘சாட்சாத்’ இராமன் தான் என்பது பலருக்கும் வியப்பைத் தரலாம். மசூதிக்குள் வைக்கப்பட்ட ‘ராமன்’ சிலைதான் மனுதாரர். இந்துக்கள் கடவுளாக வணங்கும் உருவங்கள் எல்லாம் இந்திய சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உரிமை உண்டு என்கிறார், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரும், ‘இந்து மகாசபை’யின் வழக்கறிஞருமான இரவிசங்கர் பிரசாத். வழக்கைத் தொடர்ந்த இராமன், வழக்கு மனுவில் கையெழுத்திட்டானா? நீதி மன்றத்துக்கு வழக்கைப் பார்வையிடவாவது வந்தானா? ‘திரேதாயுகத்திலே’ பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாகக் கூறப்படும் இராமன், இந்தியாவின் ‘குடிமகனாக’ ஏற்றுக் கொள்ளப்பட்டானா? பொதுத் தேர்தலில் வாக்களிக்க வந்து, கையில் மை குத்திக் கொண்டானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் இடமில்லை. பார்ப்பனர்கள் தங்கள் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு இராமனை சட்டக் கூண்டிலும் நிற்க வைப்பார்கள். இதுதான் இந்த வழக்கில் நடந்தது. 

பாபர் மசூதி இடிக்கப்படாமல் அப்படியே இருந்திருந்தால் இப்படி மூன்று பகுதிகளாக இடத்தைப் பங்கீட்டிருக்க முடியாது. எனவே நீதிபதிகள் இப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வு பேருதவி செய்துள்ளது. அதற்காக மசூதியை இடித்தவர்களை நீதிபதிகள் பாராட்டாமல் இருந்தது வியப்புக்குரியதுதான். ஒரு மகன் தந்தையைக் கொலை செய்து விட்டால், தந்தையின் சொத்துக்கு அவன் உரிமை கோர முடியாது என்றுதான்  சட்டம் கூறுகிறது. ஆனால், பாபர் மசூதியை அழித்தவர்கள், அதிலே தங்களுக்கும் பங்கு உண்டு என்று இடத்தை வாங்கிக் கொண்டு விட்டார்கள். இதுதான் ‘ராமராஜ்ய நீதி’! 

1993 ஆம்ஆண்டில் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் கோயில் அங்கே இருந்ததா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வழியாக அன்று நடந்த காங்கிரஸ் ஆட்சி, கருத்து கேட்டபோது, இது உச்சநீதி மன்றத்தின் வேலையல்ல என்று நீதிமன்றம் உறுதியாக மறுத்துவிட்டது. 

உச்சநீதிமன்றம் கருத்துக்கூற மறுத்தாலும், அலகாபாத் உயர்நீதிமன்றம் - “ஆம்; மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன” என்று கருத்து கூற முன் வந்து, உச்சநீதிமன்றத்தின் கருத்தையே உதறித் தள்ளிவிட்டது. இதில் பார்ப்பன நீதிபதி சர்மா மட்டும், கோயிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று தமது தீர்ப்பில் கூறுகிறார். மற்ற இரு நீதிபதிகளும் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்கள். கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை என்று நீதிபதி யு.எஸ்.கான், நீதிபதி சர்மாவின் கருத்திலிருந்து மாறுபடுகிறார். ஆனாலும், இதற்குச் சான்றாக தொல்பொருள் துறையின் அறிக்கையை மூன்று நீதிபதிகளும் ஏற்றுள்ளனர். 

மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்ததாக தொல்பொருள் துறையின் அறிக்கை கூறுகிறது. தொல்பொருள் துறையின் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பா.ஜ.க. அரசு அனுமதித்தது.  அதன் அறிக்கை வெளிவந்தபோதே, அந்த ஆய்வு முறையானதல்ல என்று கூறி அதன் முறைகேடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் டி.மண்டல் மற்றும் ஷெரீன் இரத்னாகர் ஆகியோர் அம்பலப்படுத்தி, நூலாகவே வெளியிட்டனர். 

மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா என்பது குறித்து, குடியரசுத் தலைவர் கருத்து கேட்டபோது அதை மறுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி பரூக்சா இவ்வாறு கூறியிருந்தார்: 

“தொல்பொருள் துறை மற்றும் வரலாற்று ஆவணங் களில் உச்சநீதிமன்றம் கருத்துக் கூறவோ, அதை ஆய்வு செய்யவோ இயலாது. அதற்கு நீதிமன்றங்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் இல்லை. வேண்டுமானால் அப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள  உச்சநீதிமன்றம் ஆணையிடலாம். அந்த ஆய்வுகளும், மதிப்பீடுகளும் எதிர்ப்புகளே இல்லாமல், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அப்படி ஒருமித்து ஏற்கப்படாத நிலையில், நீதிமன்றம் அதில் தலையிட்டு, தனது கருத்தைக் கூறுவது, இரு தரப்பிலிருந்தும் வீண் சர்ச்சைகளுக்கே வழி வகுக்கும்.” 

1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒருமித்து வழங்கிய தீர்ப்பு இது. அதற்குப் பிறகு 2003 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தொல்பொருள் ஆய்வு மேற் கொள்வதற்கான அனுமதியை உ.பி. மாநில அரசுக்கு வழங்கியது. அப்போதுகூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறாமல், ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது, கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பது போன்ற முடிவுகளுக்கு இந்த ஆய்வைப் பயன்படுத்தக் கூடாது என்பதே அதன்  பொருள். வரலாறுகளையும், தொல்பொருள் ஆய்வுகளையும் பரிசீலிப்பது, நீதிமன்றங்களின் வேலையல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்த பிறகும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டனர். 

நில உரிமைக் கோரி தொடரப்படும் வழக்குகள் 12 ஆண்டுகாலத்துக்குள் தொடரப்பட வேண்டும் என்று, அதற்கான காலவரம்பு சட்டம் கூறுகிறது. இந்த வழக்கில் சன்னி வக்புவாரியம், அந்தக் காலவரம்புக்குள் வழக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, வாரியத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

உண்மையில் பாபர் மசூதி 480 ஆண்டுகளாக முஸ்லீம்களுக்கு சொந்தமானது. அவர்களின் இந்த உரிமை மீது எந்த வழக்கும் இல்லை. இப்போது வழக்கு அவர்களுக்கு உரிமையுள்ள மசூதியில் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மட்டும்தான். இதை எதிர்த்து 12 ஆண்டுகாலத்துக்குள் அதாவது, 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்து விட்டார்கள். பாபர் மசூதி நிறுவப்பட்ட காலத்தைக் கணக்கிடுவது இந்த வழக்குக்குப் பொருந்தாது. ஆனால், நீதிமன்றம் இந்த நியாயங்களை ஏற்கத் தயாராக இல்லை. வக்பு வாரிய மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. 

5000 பக்கங்களில் தீர்ப்பை எழுதிய நீதிபதி அகர்வால், ரிக்வேதத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார். “மனிதர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள் என்பது யாருக்கு தெரியும்? ஞானிகளும், முனிவர்களும் பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகு வந்தவர்கள் தானே. இந்த பிரபஞ்சம் அழியும்போது யார் மிஞ்சப் போகிறார்கள்?” என்றெல்லாம் தீர்ப்பில் எழுதுகிறார். தீர்ப்புகளில் சட்டப் பிரிவுகளும், முன்னுதாரணங்களாக வழங்கப்பட்ட தீர்ப்புகளும் இடம் பெறும் நிலை மாறி, “ரிக்வேதங்கள்” இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. 

‘இராமனே’ நீதிமன்றத்தில் மனுதாரராகிவிட்டபோது, நீதிபதிகள் மனுதர்மத்தைத் தானே தீர்ப்பாக வழங்குவார்கள்? அதுதான் அலகாபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுதர்மங்கள் தீர்ப்புகளாக வந்த பிறகும், நாட்டில் மதக் கலவரங்கள் இல்லை என்பதும் மதத்தின் பெயரால், ரத்தம் சிந்தப்படவில்லை என்பதும் ஆறுதல் தருகிறது. இந்தப் பெருமைக்கும், புகழுக்கும் உரியவர்கள் இஸ்லாமிய சமூகத்தினர்தான். நீதி வெல்லும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் காட்டிய சகிப்புத் தன்மையும், பொறுமையும், வரலாற்றில் இடம் பெறக்கூடிய சிறப்புகளாகும்! 

அதே நேரத்தில், அலகாபாத் நீதிபதிகளின் தீர்ப்பு நீதித்துறை வரலாற்றின் கரும்புள்ளி என்று கூரை மீது ஏறி கூவலாம்.    

Pin It