“நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? "

- புதுமைபித்தன் (காஞ்சனை -1943)

'வார்த்தைகளை வைததுக் கொண்டு ஜனங்களை பயங்காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டு கொண்டேன்' என 1943-ல் புதுமைபித்தனால் எழுதப்பட்ட கதைதான் காஞ்சனை. வார்த்தைகளின் பொருண்மைத் தன்மையை புரிந்து கொள்வதற்கும் புராணம் உள்ளிட்ட தொண்மங்கள் எழுதப்பட்ட விதமாக எழுதிப் பார்க்கப்பட்ட ஒரு கதை இது. முழுக்கதையும் படிக்க... இணப்புகீழே...

http://www.chennailibrary.com/ppn/story/kanchanai.html

கதை எழுதும் இரண்டாவது நகல் பிரம்மாவைப் பற்றிய கதை. இக்கதையின் மொழிதல்களை அல்லது கதைக்குள்ளான உரையாடல் தளங்களை பிரித்தறியும் முயற்சியே இவ்வெழுத்து.

வரலாற்றில் மனித தன்மைக்கும் அமானிட தன்மைக்கும் உள்ள அமைவுகள் பற்றிய இயக்கத்தை அல்லது ஒரு தன்னிலை கட்டமைவிற்கு கதையாடல் எப்படி காரணமாக அமைகிறது என்பதை சொல்லும் ஒரு கதைதான் காஞ்சனை. வார்த்தைகள் பொருண்மைத் தன்மை வாய்ந்தவை. அதனால்தான் பைபிள் வார்த்தை மாம்சமானது என்றது. அவற்றால் ஒரு உலகை படைக்க முடியும். அப்படி படைக்கப்பட்ட உலகிற்கு சில நியதிகளை உருவாக்க முடியும்.

அந்நியதிகளை பற்றியொழுகும் மனிதர்களை படைக்க முடியும். அம்மனிதர்களைக் கொண்டு வாசிக்கும் அல்லது கதை கேட்கும் மனிதனை இயக்க முடியும். அல்லது கேட்பவனின் தன்னிலையாக்கச் செயலை செய்ய முடியும் என்பதை நிகழ்த்தும் ஒரு கதை. அல்லது வார்த்தைகளால் பீய்ச்சப்படும் உணர்வுகள் ஒரு மனித உடலின் இருப்பை மாற்றியமைக்கும் என்பதை சொல்ல முயல்கிற கதை.

தெய்வத்தன்மை / பேய்த்தன்மை என்கிற இரண்டு முரண் அமைப்புகளாக தோற்றம் தரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இக்கதையாடலில் சொல்லப்படுகிறது. கதைகள் அல்லது வரலாறு மற்றும் புராணக் கதையாடல்கள் தன்னிலை கட்டமைவை உருவாக்குகிறது. இத்தன்னிலை தமிழ் என்கிற இனத்தை இரண்டு எல்லை வரையறைகளுக்குள் கட்டமைக்கிறது. ஒன்று தெய்வ நிலை. மற்றொன்று பேய் நிலை. இவ்விரண்டு எல்லைகளையும் நோக்கி நகரும் தன்னிலைகளின் இயக்கமாக மொத்த மனித அறவியலும் தமிழ் சமூகத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

குறிப்பாகச் சொன்னால் பெண்ணிற்கு இவ்விரண்டு நிலைகளே தமிழ் சமூகத்தில் கையளிக்கப் பட்டுள்ளது. மேற்கத்தியத்தில் உருவான பிராய்டியம்கூட பெண்ணிற்கு நல்ல தாய்/கெட்ட தாய் என்கிற மன அமைப்புகளையே முன்வைக்கிறது. தெய்வ நிலையின் உருவக துவக்கம் கருவரை என்றால் பேய்த்தன்மையின் உருவக துவக்கம் கல்லறை அல்லது சுடுகாடு. ஆக, தெய்வம் கரு-உயிர்ப்பு நிலையிலும், பேய் கரு-அழிப்பு நிலையிலும் நிகழ்வதான கதையாடல்களே பழங்கதைகளாக தமிழ் சமூகத்தில் பின்னலாக்கப்பட்டுள்ளது. இத் தமிழ் கதையாடலின் ஆழ்தள அடுக்கின் மேல் இக்கதையானது கட்டமைக்கப் பட்டுள்ளது.

இக்கதை தமிழ் சிறுகதை படைப்பியக்கம் பற்றிய ஒரு உரையாடலை தனக்குள் நிகழ்த்துகிறது. அது யதார்த்தவாத நேர்க்கோட்டு கதையாடலுக்கும், மரபான மாயத் தன்மையுடன் அமைந்த குத்துக் கோட்டு கதைக்கும் இடையில் நடைபெறுகிறது. கதையின் நேர்கோட்டில் கணவன், கர்ப்பினி மணைவி மற்றும் வேலைக்காரி வருகிறார்கள். குத்துக் கோட்டில் வேலைக்காரி காஞ்சனை என்கிற 500 வருடங்களுக்கு முன்பான காசி (இதில் காசி என்பது இந்து இறையியல் பற்றியதான குறிப்பு பொருளில் வருகிறது) ராசனின் மகள் - மந்திரி மகன் காதல் - மந்திரவாதி என்பதாக வருகிறது. இவ்விரண்டு தளங்களும் சந்திக்கும் புள்ளி கதாசிரியின் அல்லது இரண்டாவது நகல் பிரம்மா எனப்படுபவனின் மொழிக்குள் நிகழ்கிறது.

கதாசிரியன் வேலைக்காரி என்கிற நிகழ்கால மொழியை காஞ்சனை என்கிற கடந்த கால மொழியாக தான் படித்துக் கொண்டிருக்கும் வரலாற்றின் வழியாக மாற்றுகிறான். நிகழ்கால மொழிக்குள் உறைந்திருக்கும் பகுத்தறிவின் மையம் செயலிழக்கச் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப்போர், பத்திரிக்கை, கதாசிரியன் பற்றிய அவனது மனைவியின் கிண்டல் ஆகியவற்றால் நிகழ்காலத்தில் இயங்கும் மொழியானது மந்திரம், சூண்யக்காரன் என்று கடந்தகால மொழிக்குள் நுழைகிறது.

எழுத்து மங்கி தோற்றங்கள் வரத் துவங்குகிறது. கண்ணாடியில் கோர உருவத்தை பார்க்கிறான். அதன் பின் அவள் வேலைக்காரிதான் என்கிறது பகுத்தறிவின் மொழி. அவளுக்கு காஞ்சனை என்கிற பெயரடையாளம் தரப்படுகிறது. வேலைக்காரியும், காசி நகர் காஞ்சனையும் ஒன்றுபோலவும், வேறுவேறாகவும் ஆன தொடர்பின்மையையும், தொடர்பையும் உருவாக்குகிறது கதைமொழி. கடந்தகால கதைகள் நிகழ்கால நிகழ்வுகள் வழியாக வாசிக்கப்படுவதை சொல்லிவிடுகிறது. கதைகளுக்கான காலத் தன்மையை அழிப்பதன் மூலம் கதையின் காலம் மீறிய இடத் தன்மை உருவாக்கத்தை முன் மொழிந்து விடுகிறது.

காலத் தன்மையற்ற ஆழ்மன மொழி அடுக்குகள் பற்றியதாக கதை மொழி நகர்கிறது. தன்னிலை என்பது மையமற்ற பல மொழி வேர்களைக் கொண்டது. தரையில் ஊன்றப்படும் வேர் போல மண்ணைப்பற்றி கிளைக்கக்கூடியது. எந்த வேர் தரையில் படுகிறதோ அவ்வேர் பற்றிக் கிளைக்கும். ஒரு குறிப்பிட்ட மொழி சமூக அமைப்பிற்குள் படரும்போது அது வேர் ஊன்றிக் கொள்கிறது. வேறொரு நிலையில் வேறொரு வேர் பட்டு படருகிறது. அல்லது தன்னிலை ஒரு குறிப்பிட்ட மொழியமைப்பில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

வேலை முடிந்தவுடன் நகர்ந்து விடுகிறது. உதாரணமாக, சாதரண மனிதன் மதநம்பிக்கை என்கிற தன்னிலை ஆதிக்கம் பெற்று நங்கூரம் பாய்ச்சி நிற்கும்போது மதவெறி கொண்டு பிற மத உடலை கொலை செய்யும் வன்முறை மனநிலைக்கு ஆளாகிறான். பிறகு அதிலிருந்து விலகி இயல்பான தன்னிலைப் பெற்றுவிடுகிறான். தன்னிலையின் இந்த இயக்கமைவை கொண்டதாக நகர்கிறது கதை. பகுத்தறிவும், மாயத்தன்மையும் அங்கங்கு நங்கூரம் பாய்ச்சி நகர்ந்து செல்கிறது.

இந்த தன்னிலையின் செயல்பாடு, கதைமொழிக்குள், பயம் என்று சுட்டப்படும் விஷயத்தில் ஒரு முக்கியமான இயக்க அமைப்பாக செயல்படுகிறது. கதாசிரியனுக்கு பயம் என்பது மணைவிக்கு ஏதாவது நேர்ந்து விடலாம் என்பதுதான். இதன் பொருள் கதாசிரியன் காஞ்சனையின் குறி இல்லை என்பதாக கதை மொழி ஒரு முடிவிற்கு வந்து விடுகிறது. அதாவது, கதாசிரியன் தன்னிலை பகுத்தறிவில் நங்கூரம் பாய்ச்சினாலும், உள்ளார்ந்து கிடக்கும் மாயவாத அல்லது பழங்கதையின் மொழியானது அவ்வப்போது அவனை அசைக்கிறது.

அவனது பயம் அவனது மனைவிக்கு இல்லை. அல்லது மனைவியாக படைக்கப்படும் பெண்களின் தன்னிலைக்கு ஒரு நிலைத்தன்மை ஆணிய மொழியால் படைக்கப்பட்டிருப்பதே காரணம். அப்பயம் மனைவிக்கு வந்துவிட்டால் அவளது நிலைத்தன்மை குலைந்து விடும் என்று யூகித்துக் கொள்கிறது கதைமொழி. ஏனென்றால் அவளுக்குள், வேலைக்காரியாக வந்திருப்பது ஒரு மனித உயிர் என்கிற புரிதல் மட்டுமே செயல்படுகிறது. அல்லது பெண்ணின் அறிதல் ஆணால் கையளிக்கப்படுவதுதான் என்பதுவே. அல்லது பெண்னின் குரல் வெளிப்படாமல் அமுக்கப்படுகிறது.

பொதுவாக பேய் எளிமையாக பற்றக்கூடிய உடல்களாக முன்வைக்கப்பட்டிருப்பவை 1. கர்ப்பினி பெண்கள் 2. பருவமடைந்த பெண்கள் 3. பருவமடைந்த ஆண்கள் 4. மாதவிடாய் வந்த பெண்கள். இவ்வுடல்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை காணலாம். இவை எல்லாம் பாலியலுடன் உறவு கொண்டவை என்பதே அது. தெய்வம் மற்றும் பேய் பற்றிய கதையாடல்கள் பாலியல் உடல் தளங்களுடன் ஒரு உறவு கொண்டிருக்கின்றன. இதில் வரும் காஞ்சனையும் காதல் வேட்கையால் பாதிக்கப்பட்ட மந்திரவாதியினால் பேயாக்கப்பட்டவள் என்பதாக கதை மொழி ஒரு யூகத்தை கட்டமைப்பதில் அறியலாம். (கற்பு அல்லது திருமண நிலை) பாலியலை தனக்குள் ஒடுக்கிக் கொள்பவள் தெய்வநிலையும், (களவு அல்லது காதல் நிலை) பாலியல் உந்தங்களை செயல்படுத்த முனைபவள் பேய் நிலையும் அடைகிறாள். பெண் என்கிற உடலின் தேர்வுப்பரப்பும் இயக்கமும் இவ்விரு எல்லைகளுக்குள் குறுக்கப்டுகிறது. இவ்வாறாகவே, பாலியல் குறித்த அதிகார கட்டமைவிற்கான கருவிகள் பழம் புராண, இதிகாச கதையாடல்களின் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

கதையில் அமானிடப் பெண்ணால் மானிடப் பெண்ணிற்கு பிரச்சனை என்பதாக யூகித்துக் கொண்டு விடும் கதைமொழி, கதாசிரியனை ஒரு மேல் நிலையில் வைத்து கண்காணிக்கச் செய்கிறது. அல்லது அறிவார்ந்த நிலையில் வைத்து மனைவிக்கு பாரா போடும் வேலையை செய்கிறது. இதன் பொருள் 'கதை என்பது பொய். கடவுள்-தர்மம் என்று பல நாம-ரூபங்களுடன், உலக மெஜாரிட்டியின் அங்கீகாரத்தைப் பெறுவது' என்கிற அறவியல் கதையாடல்களை படைத்தளிப்பதே ஒரு கதாசிரியனுக்கான அடிப்படை என்கிற அரசியல்தான். ஆக, இக் கதையாடல் அடிப்படையில் ஒரு நிகழ்வை இரண்டு மொழிக்குள் பின்னிச் செல்வதின் வழியாக, சிறுகதை பற்றிய ஒரு உரையாடலை சாத்தியமாக்க முனைகிறது. தமிழ் சிறுகதை தோற்றத்துடன் உருவான அற போதனைக்கு எதிரான குரல் இது எனலாம்.

அதனால், கதை உருவாகும் கதையாக ஒருவகை metafiction-ஆக வடிவம் கொண்டு விடுகிறது இக்கதை. ஆக, இக்கதையாடலானது தனது ஆழ்தளத்தில் கடவுள் - மனிதன் - பேய் என்கிற முப்பட்டகத்தை கொண்டிருக்கிறது. சுடும் விபூதி கடவுளின் பிரதிநிதி, கர்ப்பிணி பெண் மனித குலத்தின் பிரதிநிதி, காஞ்சனை பேய் உலக பிரதிநிதி. நள்ளிரவில் நடுவீதியில் நிற்கும் ஒருவன் யார்? காசியில் காஞ்சனையின் மீது மோகம் கொண்ட மந்திரவாதியா? அல்லது கடவுளா? அல்லது இந்த முப்பட்டக இணைவை சாத்தியமாக்கிய ஆதியில் கடவுளின் பிரதிநிதி அல்லது கடவுள் என்கிற கட்டமைப்பிற்காக காலகாலமாக கதை சொல்லிவரும் தொல்குடி மாந்தரீகனா? கதைமொழி இப்புதிரை அவிழ்க்காவிட்டாலும் ஒரு தடத்தை சொல்கிறது.

அது சேமக்கலம். சேமக்கலம் சப்தம் கேட்டு வெளிவரும் கதாசிரியன், பின்னால் சேமக்கலம் அம்மனிதனின் கையில் இல்லை என்பதன் மூலம் கடவுள் மற்றும் மாந்தரீகன் என்கிற பிம்ப இணைவை சொல்லி விடுகிறது கதைமொழி. ஏனென்றால் தொல்குடி மாந்ரீகன் இல்லையேல் இன்று கடவுளும் இல்லை. கடவுள் இருக்கும்வரை கடவுளின் கதையை சொல்லிய படி இந்த தொல்குடி மாந்ரீகன் நம்மிடம் இருப்பான். இவனே பேயையும் கடவுளையும் எதிர்காலத்தையும் தீர்மாணிப்பவன். காலந்தாண்டி நம்மிடம் செய்திகளை கொண்டு வருபவன்.

கதையில் தரப்படும் விபூதி என்பது பேய் குடிக்கும் இரத்தத்துளிக்கு பதிலிடூகத் தரப்படுகிறது. விபூதியும், இரத்தத்துளியும் கரு உயிர்ப்பின் இரு குறியீடுகள். விபூதி என்பது வெந்நிற குறியீடு ஆணிலையின் கரு தருவதற்கான குறியீடு என்றால் குங்குமம் என்கிற இரத்தத்தின் செந்நிற குறியீடு பெண்ணின் கரு தரித்தலுக்கான குறியீடு ஆகும். கோவில்களில் இன்றுவரை இவை கரு உயிர்த்தலுக்கான ஒரு குறியீடாக வளமைப் பெருக்குடன் பின்பற்று வருவதன் பிண்ணனி இதுவாகத்தான் இருக்கும் என எண்ணத தோன்றுகிறது. கதையின் இறுதிவரி "இந்த ஆம்பிள்ளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மணைவி. "இதற்கு என்ன பதில் சொல்ல?" என்கிற வாசிப்பாளனிடம் ஒரு கேள்வியை முன்வைத்து முடிகிறது.

இங்கிருந்து கதையை மீள் வாசிப்பு செய்தால், எதிர்படும் ஒரு பிரச்சனை, கதாசிரியனுக்கு காஞ்சனை பேயாக வெளியேறிவிட்டால். ஆனால், மனைவிக்கு காஞ்சனை என்ன ஆனாள்? பிரதியின் இந்த இறுதிவரி தரும் பதில். கதாசிரியன் வேலைக்காரிக்கு இடையிலான ஒரு மறைக்கப்பட்ட சம்பவத்தை சொல்வதைப்போல இருக்கிறது. ஏனென்றால், கதாசிரியின் பார்வையாளனாக உள்ள வாசகரான நம்மை சாட்சியாக துணைக்கழைக்கிறான் "இதற்கு என்ன பதில் சொல்ல" என. எனென்றால் கதையாசிரியன் வாசகனின் கண்காணிப்பில்தான் இருக்கிறேன். கதைக்குள் இருக்கும் மணைவிக்க அவனது நிலை தெரியாது. அதாவது, நேர்க்கோட்டில் கதைக்குள் இருக்கும் மணைவிக்கு, குத்துக் கோட்டில் கதாசிரியன் எடுத்துரைத்துச் செல்லும் பேய்ச் சம்பவங்கள் எதுவும் தெரியாது.

அதனால், வேலைக்காரியின் மறைவு அவளுக்கு கணவனின் செயல் விளைவாக தோன்றியிருக்கலாம். ஆக, கதையாடல் முன்வைக்கும் இரண்டு பெண்களில் ஒருத்தி யதார்த்தமானவள் மற்றொருத்தி அமானிட தன்மை உள்ளவள். குடும்பப் பெண்களின் தன்னிலை கதைகளில் வரும் அ-மானிடப் பெண்களிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பை கதையாடல் அல்லது அதன் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொள்ளும் ஆசிரியன் ஏற்றுக் கொள்கிறான். அல்லது நேர்க்கோட்டு கதையாடல் அரசும் அதிகாரமும் விரும்பும் இத்தகைய பெண் தன்னிலைகளை பாதுகாக்கும், பெண்ணியத்திற்கு எதிரான ஒரு மொழியியல் தொழில் நுட்பமாகவே செயல்படக் கூடியது என்பதுதான்.

"வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜனங்களை பயங்காட்டும்" கதையான காஞ்சனை மனம் எனும் கட்டை வண்டியில் நடைபோட்டு பிறந்த கதை. மற்றொரு கதையான விநாயகர் சதுர்த்தியும், இதே வடிவமைப்பில் உருவான மனக் கட்டை வணடிப் பயணக் கதைதான்.

தொகுப்பரையாக, பெண்களுக்கு கையளிக்கபட்டிருக்கும் எல்லைகள் பேய் அல்லது பெண் தெய்வம். இவ்விரு எல்லைகளுக்குள்தான் அவர்களது உடல் இயங்குவதற்கான பரப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண் உடலை இந்த எல்லைக்குள் பாதுகாப்பதற்கான உடலாக ஆணும், ஆணின் பலத்திற்கு அரசு இதர எந்திரங்களும் உள்ளன. இதைமீறிப் போகக்கூடாது என்பதற்காக பெண் தன்னிலையை கட்டமைப்பதற்கான தொண்மங்களே பழங்கதையாடல்கள் வழி திரும்பத்திரும்ப எடுத்துரைக்கப்படுகிறது. கதையின் உள்ளே புதைக்கப்பட்டிருப்பது (மந்திரியுடன்) காதல் மறுக்கப்பட்ட ஆணாதிக்க அல்லது அரசு அதிகாரத்தின் (மந்திரவாதியின்) பாலியல் துய்ப்பிற்கு உட்பட மறத்த பெண்ணின் பேயாக்கபட்ட உடல். இவ்வாறாக நமது பழம் புராணங்களை தோண்டினால் ஒடுக்கப்பட்டும் கொனறு புதைக்கப்பட்டும் உள்ள எண்ணற்ற உடல்களை அகழ்ந்து எடுக்கலாம். காஞ்சனை குறித்த இந்த உரையாடல் அதற்கான முயற்சிதான்.

- ஜமாலன்

Pin It