காஞ்சி தொடர்வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படத்தை குப்பையில் வீசிவிட்டு சங்கராச்சாரி படத்தை வரைந்ததைத் தட்டிக் கேட்டு களமிறங்கிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் கைதுசெய்யப்பட்டதோடு அவர்கள் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் தஞ்சைத் தமிழன் விடுத்துள்ள அறிக்கை:

21 டிசம்பர் 2017 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தின் வாயிலில் மாட்டப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை குப்பையில் போட்டுவிட்டு அந்த இடத்தில் இந்துமதக் குறியீடுகளும், அதை ஒட்டிய சுவர்களில் சங்கராச்சாரிகளின் படங்களும் வரையப்பட்டிருந்தன. அவ்விடத்தில் தலைவர் அம்பேத்கரின் படத்தை  மீண்டும்  நிறுவிய குற்றத்திற்காக டிச.27 அன்று மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெசி, தஞ்சை தமிழன், பாலு ஆகியோர் பிணையில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kanchi thozar 600நிலைய மேலாளர் சீனிவாசலு அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று 26-12-2017 காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை இது சம்பந்தமாக பார்த்து விட்டு திரும்புகையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இது சுற்றுலாப்  பயணிகளை கவர்வதற்காக ரயில்வே துறை மேற்கொள்ளும்  புதுப்பித்தல் பணி என்றால் அமுதசுரபி பாத்திரத்துடன் காஞ்சி மாநகரை வலம் வந்த பௌத்த துறவி மணிமேகலை, மனிதனின் மானத்தைக் காக்கும் நெசவுத் தொழிலாளர்கள், பல்லவர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் காஞ்சி மற்றும் மாமல்லபுர கோயில்கள், சமண காஞ்சி என்றழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள சமணக்கோயில்கள், பேரறிஞர் அண்ணா என அனைத்தும் அடங்க வேண்டும். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.

அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் இருக்கக் கூடாது என மத்திய மாநில அரசு ஆணைகள் உள்ளன. ஒரு மதத்தின் படங்களை மட்டும் வைப்பது அமைதியை குலைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும் ஒழித்துக் கட்டவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற நாடு காவி பரிவாரங்களிடம் முழுமையாக செல்வதைத் தடுக்க  முற்போக்குச் சக்திகள் ஆகிய நாம்  ஒன்றிணைவோம்.