உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மூவர் விடுதலை; ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தனி நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

‘சங்கரின் மரணத்துக்கு நீதி கிடைத்திருக்கிறது’ என்று கவுசல்யா தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். தீர்ப்புக்குப் பிறகு ‘இந்து’ ஆங்கில நாளேடு கவுசல்யா வின் பேட்டியை  (டிச.18) வெளியிட்டிருக்கிறது. பேட்டி விவரம்:

கேள்வி : சமூகத்தில் ஜாதியின் செல்வாக்கு மறைந்து வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில வன்முறை சம்பவங்களை பெரிதுபடுத்துவது தேவை யில்லாதது என்ற கருத்துப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

கவுசல்யா: அது உண்மையல்ல. ஜாதியப் பாகுபாடுகளை நிலைநிறுத்தத் துடிப்பவர்கள் தான் இத்தகைய கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சில நேரங்களில் ஜாதிய பாகுபாடுகள் கொலை செய்யும் அளவுக்கு அவர்களைத் தூண்டி விடுகிறது. ஜாதியப் பாகுபாடு சமூகத்தில் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

கேள்வி : ஜாதி வெறிக்குக் கணவரைப் பலி கொடுத் திருக்கிறீர்கள். குற்றவாளிகளாக உங்கள் பெற் றோரே இருக்கும்போது இந்த வழக்கை நடத்துவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

கவுசல்யா: இந்த வழக்கை நடத்த வேண்டாம் என்றே பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். உன்னுடைய கணவரை இழந்து விட்டாய்; பெற்றோர்களையும் குற்றக் கூண்டில் ஏற்றுவதில் என்ன கிடைத்துவிடப் போகிறது? வழக்கை நடத்த வேண்டாம், விட்டுவிடு என்றுதான் கூறினார்கள். நான் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் என்னுடைய வலியை நான் மட்டுமே சுமந்தேன். அவர்களுக்கு இந்த வலி பற்றி ஏதும் தெரியாது.

கேள்வி: நீங்கள் வழக்கை நடத்துவதில் உறுதி காட்டினாலும் உங்கள் பெற்றோருக்கு எதிராகவே வழக்கை நடத்தியது, ஒருசோதனை முயற்சிதானே? நீங்கள் உங்கள் பெற்றோருக்கு எதிராக சாட்சி கூற வேண்டியிருந்ததே?

கவுசல்யா : எனது கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருந்தேன்.

கேள்வி : இந்தக் கடுமையான பயணத்தில் உங்களுக்கான வலிமையைத் தந்தது எது? தனிமனிதர்களோ அல்லது நூல்களோ உங்களிடம் தாக்கத்தை உருவாக்கியதா?

கவுசல்யா : இந்த சம்பவத்துக்குப் பிறகு பலரும் என்னைச் சந்தித்து ஆதரவுதர முன் வந்தார்கள். அவர்கள் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டினார்கள். வழக்கிற்கு துணை நின்றார்கள். ஒன்றுஅல்லது இரண்டு பேரை மட்டுமே சுட்டுவது, எனனைப் பொருத்தவரை சரியாக இருக்காது. பலரும் உதவினார்கள். நான் பல்வேறு நூல்களைப் படித்தேன். அவற்றின் கருத்துகள் என்னை செழுமைப்படுத்தின.

கேள்வி : ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தி வருகிறீர்கள். ஏற்கனவே இதற்காக சட்டங்கள் இருக்கும்போது தனிச் சட்டம் தேவையா?

கவுசல்யா : சட்டங்கள் இருக்கின்றன. உண்மைதான். ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை. ஆணவக் கொலைகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என்பதற்காகவே தனிச் சட்டம் வேண்டும் என்று நான் கேட்கிறேன். கடுமையான சட்டங்கள் இருக்குமேயானால், இந்த வன்செயலில் ஈடுபடுவோர் அதில் ஈடுபடுவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இதைச் செய்யலாமா வேண்டாமா என்று யோசிப்பார்கள்.

கேள்வி : இப்போது நீங்கள் நடத்தி வரும் ‘சங்கர் தனிப் பயிற்சி மய்ய’த்தின் நோக்கம் என்ன?

கவுசல்யா: மாணவர்களுக்கு கல்வியில் உதவுதலே இதன் நோக்கம். பயிற்சி வகுப்புகள் வழியாக அவர்கள் கல்விக்கு நான் உதவுகிறேன். சமூக உணர்வுள்ள பெண்-ஆண் இளைஞர்களை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.   - என கவுசல்யா கூறினார்.