தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடிவெய்திவிட்டார். ஆளுமைத் திறன் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உயர்த்திக் கொண்டவர். பெண்களால் ஆட்சி சக்கரத்தை வலிமையோடு நகர்த்திச் செல்ல முடியும் என்று நிரூபித்தவர்.

தான் வழி நடத்திய கட்சிக்கு அவர் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். அவரது விரல் அசைப்புக்கு அவரது அமைச்சர்களும், கட்சிப் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிபணிந்து நின்றனர். ஆண்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் அரசியல் உலகில் இது ஓர் அபூர்வக் காட்சி. கருத்து மாறுபாடு களையும் கடந்து பெண்களின் இத்தகைய ஆளுமைத் திறமையை பெரியார் பாராட்டியிருக்கிறார்.

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவரது கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும்கூட ஒரு பெண் நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதற்கு பெருமையாக சான்று காட்டி, பெரியார்  பேசினார். சுயமரியாதைத் திருமணம் பற்றிய பெரியார் உரையில் (அது பிறகு ஒலித் தட்டாகவும் வெளி வந்தது) இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.

69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைக்கு நெருக்கடி வந்தபோது அதை உறுதியுடன் எதிர்த்து சமூக நீதியை காப்பாற்றினார். காஞ்சி ஜெயேந்திரனை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் வைத்தார். ஆனாலும் அவர் வழி நடத்திய அ.இ.அ.தி.மு.க. திராவிடர் இயக்கத்தின் அடியொற்றியது அல்ல; மதங்களைக் கடந்த ‘திராவிடர்’  அடையாளத்தை திராவிடர் இயக்கம் வழங்கியது. ஆனால் மறைந்த ஜெயலலிதா, தனது கட்சியை மதத்துடன் இணைத்து இதற்கு இந்து மத அடையாளத்தைப் போர்த்தினார். இது திராவிடர் இயக்கக் கொள்கைக்கு நேர் எதிரானது. சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடியது.

இப்போது அ.இ.அ.தி.மு.க.வை வழி நடத்தும் சக்தி வாய்ந்த தலைமை இல்லை. ஆனாலும் அக்கட்சி அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் எவ்விதக் குழப்பமுமின்றி மாற்றங்களை சுமூகமாக நிகழ்த்திக் காட்டியிருப்பதை வரவேற்க வேண்டும்.

அதே நேரத்தில் அக்கட்சியிலும் ஆட்சியிலும் உருவாகியுள்ள தலைமை வெற்றிடத்தை மத்தியிலும் ஆளும் பா.ஜ.க. தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தி, இந்துத்துவ அரசியலுக்குள் ‘உள்ளிழுக்கும்’ சதித் திட்டங்கள் அரங் கேற்றப்படலாம். இதற்கான வாய்ப்புகள் இல்லை என்று புறக்கணித்துவிட முடியாது. இந்த இக்கட்டான சூழலை தற்போதைய அ.இ.அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இப்போது எழுந்துள்ள கேள்வி.

பண்பாட்டுத் தளத்தில் ஜெயலலிதா ஒரு இந்துத்துவாதியாக தனது கட்சியை வழி நடத்தினாலும் தனது அரசியல் அதிகார வரம்புக்குள் பா.ஜ.க. தலை யீட்டை உறுதியாக தடுத்து நிறுத்தியே வைத்தார். மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தனக்கு பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்காதபோது அதை எதிர்த்து வெளி நடப்பு செய்த போதும் சரி; காவிரி மேலாண்மை வாரியம் நியமிப்பதில் பா.ஜ.க. அரசின் நேர்மையற்ற செயல்பாட்டைக் கண்டித்த போதும் சரி; பல்வேறு நேரங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடக் கூடிய, மத்திய அரசின் மின் திட்டம், வரி விதிப்புத் திட்டங்களை ஏற்க மறுத்தவர். தமிழகத்தின் உரிமைகளுக் காக அவர் மத்தியிலிருந்த ஆட்சிகளை அது காங்கிரசானாலும் பா.ஜ.க.வானா லும் சமரசமின்றி எதிர்த்துப் போரா டியதே அவரது அரசியல் வரலாறாக இருந்திருக்கிறது. அவரது அந்த அணுகுமுறையிலிருந்து தமிழகத்தின் புதிய ஆட்சி விலகிச் சென்றுவிடக் கூடாது என்று தமிழர்கள் நலக் கண்ணோட்டத்தில் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகும். அக்கட்சியின் ஆட்சிப் பொறுப்பை நடத்திச் செல்வோரும் கட்சியின் பொறுப்பாளர்களும் இதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

அதேபோல ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினைக்கு வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானங் களும், ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை கோரி அவர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பும் உயிருடனேயே இருக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில் இந்தத் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் தருவதற்கு புதிய ஆட்சி முன்வர வேண்டும். அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு செலுத்தக் கூடிய சரியான மரியாதை அஞ்சலியாகவே அமையும்.