நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு கொளத்தூர் புலியூர் பிரிவு, தண்டாசாலையில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். பொது மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் தோழமை அமைப்புகள் உட்பட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்க நிகழ்வுக்கு பின் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, காமராசு, கழகப் பொருளாளர் இரத்தினசாமி ஆகியோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

சரியாக 6.04 மணிக்கு மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்க, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் பொன்னம்மான் நினைவு நிழற்குடையில் அமைக்கப் பட்டிருந்த மாவீரர் சின்னத்துக்கு ஆண்களும் பெண்களுமாக சாரை சாரையாக மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திய காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சொந்தமான விடுதலைப் புலிகளின் பயிற்சி நடந்த தோட்டம் அருகே இந்நிகழ்வு நடைபெற்றது.  1984 ஆம் ஆண்டு தொடங்கி, 1986 ஆம் ஆண்டு வரை நடந்த இந்த முகாமில் பயிற்சிப் பெற்ற போராளிகள்தான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளாக களத்தில் நின்று, மாவீரர்கள் ஆனார்கள். தமிழகம் முழுதும் நடந்த விடுதலைப் புலிகள் பயிற்சியை ஒருங்கிணைத்து வழி நடத்திய போராளி பொன்னம்மான்தான் இந்த பயிற்சி முகாமையும் வழி நடத்தினார். இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தபோது வெடி பொருள் வெடித்து உயிர்ப்பலியான வீரர்களில் ஒருவர் பொன்னம்மான். மூன்று பிரிவுகளாக இங்கு நடந்த பயிற்சியில் 4 முறை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நேரில் வருகை தந்து பார்வையிட் டுள்ளார். விடுதலைப் புலிகள் முன்னணி தளபதிகள் ராதா, புலேந்திரன், லூகாஸ் மேனன் உள்ளிட்டவர்கள் பயிற்சி பெற்றது, இதே முகாமில் தான். பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், கேணல் கிட்டு ஆகியோர் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து பார்வையிட்டார்கள். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த முகாமுக்கான செலவு அனைத்தையும் மக்கள் மனமுவந்து வழங்கிய பொருட்கள், நிதி உதவியுடன் தான் நடந்தது குறிப்பிடத்தக்க சிறப்பு. அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர் கொளத்தூர் மணி, ஆதரவாளர்களுடன் இணைந்து, இதற்கான பொருள், நன்கொடைகளை திரட்டும் பணிகளை மேற்கொண்டார்.

குமாரப்பட்டி என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதி, பிறகு புலியூர் என்று பெயர் மக்களால் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில் ‘மாவீரர் நாள்’ எழுச்சியுடன் நடந்து வருகிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் பல்வேறு முனைகளில் பயிற்சிகள் நடந்தாலும் போரட்டம் தொடங்கிய காலத்தில் போராளிகளைத் தயார் செய்த பெருமை இந்தப் புலியூருக்கு உண்டு என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். மாவீரர்களின் மகத்தான தியாகம், அர்ப்பணிப்பு குறித்து தேசியத் தலைவர் பிரபாகரன் பதிவு செய்த கருத்துகளையும் சமையலறையில் முடங்கிக் கிடந்த பெண்களை விடுவித்து அவர்களை ஆயுதம் தரிக்கச் செய்த புரட்சியை பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையில் தேசியத் தலைவர் முன்வைத்த கருத்துகளையும் விடுதலை இராசேந்திரன், அவரது உரையிலிருந்து படித்துக் காட்டினார்.

“தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் பேருதவிகளை வழங்கிய பெருமை பெரியார் இயக்கங்களுக்கு உண்டு. பெரியார் இயக்கம், விடுதலைப் புலிகளோடு கொண்டிருந்த தோழமை உறவால் இயக்கத் தோழர்கள் கொள்கை உறுதி; தன்னலமற்ற அர்ப்பணிப்பு; விளம்பரம் தேடாத உழைப்பு போன்ற பாடங்களைப் பெற்று, தங்களுக்கு உரமூட்டிக் கொண்டார்கள். அதே போன்று விடுதலைப் புலிகள் இயக்கமும் பெரியார் இயக்கத்தின் உறவால் பகுத்தறிவு, பெண்ணுரிமை, கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அதை தங்கள் இயக்கத்துக்குள் அறிமுகப்படுத்தியது.

இயக்கப் போராளிகள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதையும், அதுவும் போராளிகளின் குடும்பங்களுக்கிடையே நடப்பதையும் வலியுறுத்திய தேசியத் தலைவர் பிரபாகரன். தாலி இல்லாத திருமணங்கள் நடந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று அறிவுறுத்தினார். அப்படியே தாலி கட்ட வேண்டும் என்றால், மதச் சின்னங்கள் இல்லாத புலிச் சின்னம் பொறித்த தாலியை பரிந்துரைத்தார். இயக்கம் நடத்திய ‘அறிவுச்சோலை’ புத்தக விற்பனையகங்களில் மூடநம்பிக்கை பரப்பும் நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழ் ஈழத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் கடவுள் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை. தேசியத் தலைவர் பிரபாகரன் கருத்துகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை ஏற்று, இயக்கம் நடத்திய வைப்பகங்களில் தை முதல் நாளே வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கும் நிகழ்வுகள் நடந்தன. கல்வித் துறைப் பொறுப்பாளர் இளங்குமரன் எனும் பேபி சுப்பிரமணியம், பரப்புரைப் பொறுப்பாளராக இருந்து, பிறகு காவல்துறைப் பொறுப்பாளராகிய இரமேஷ் எனும் இளங்கோ, நிதித் துறை பொறுப்பாளர் புகழேந்தி போன்ற முன்னணி தளபதிகள், பகுத்தறிவு, பெண்ணுரிமை போன்ற பெரியாரிய சிந்தனைகளை இயக்கத்துக்குள் முன்னெடுப்பதில் முனைப்பாக செயல்பட்டனர். தேசியத் தலைவர் பிரபாகரன் இதை ஊக்கப்படுத்தி ஆதரவு தந்தார்.

புலிகளின் வானொலியில் இராமாயணக் கதை நெடுந்தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. அதில் இராமாயணக் கதை ஆரிய-திராவிடப் போராட்டமே என்ற கருத்தின் அடிப்படையில் உரையாடல்கள் அமைந்திருந்தன. இராவணன்-திராவிடர்களின் தலைவனாகவும்; இராமன் ஆரியர்களால் போற்றப்பட்ட வனாகவும் சரியாகவே சித்தரிக்கப்பட்டார்கள். இதற்கு இராமாயணத்தைப் பக்தியுடன் போற்றும் பழமைவாதி களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. தேசியத் தலைவர் பிரபாகரன், எதிர்ப்புகளைப் புறந்தள்ளியதோடு, அந்த நெடுந்தொடரை மறு ஒலிபரப்புச் செய்ய ஆணை யிட்டார். நூல் வடிவில் வெளிவந்த அந்த நெடுந்தொடருக்கு ஆரிய-திராவிடப் பார்வையிலேயே அணிந்துரையும் வழங்கினார். ஒரு கட்டத்தில் தமிழகத்திலிருந்து பெரியார் இயக்கத்தைச் சார்ந்த பகுத்தறிவுப் பரப்புரையாளர்களை அழைத்து, பரப்புரை செய்யவும் விரும்பினார். அதை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடமும் தெரிவித்தார். சில பல காரணங்களால் அம்முயற்சி தடைபட்டது. கோயில்களுக்கு மாற்றாக மாவீரர் துயிலுமிடங்களே வணங்கத்தக்கவையாக மாற்றப்பட்டன. போராளிகள் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டு, மத அடையாளங்கள் கொண்ட பெயர்கள் நீக்கப்பட்டன. 40,000 தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பட்டியல் நூல் தயாரிக்கப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டது. புலிகளின் தொலைக் காட்சி, வானொலி மற்றும் இதழ்களில் மதம் சார்ந்த கருத்துகள் தவிர்க்கப்பட்டன. இப்படி எத்தனையோ நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும். பெரியார் இயக்கத்துக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துமான உறவு கொள்கைப் பரிமாற்றங்களை கொண்டிருந்த உறவாகும்.

புலிகளின் மகத்தான தியாகம்தான் இன்று ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அரங்கிற்குள் நகர்த்தி இருக்கிறது. இந்த நகர்வை மேலும் விரைவுபடுத்தி, ஈழ விடுதலை எனும் இலங்கை நோக்கிப் பயணிக்கச் செய்வதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கம். கனவுலகில் கற்பனைப் பெருமிதங்களில் மூழ்கிக் கிடப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றார் விடுதலை இராசேந்திரன்.

சு.க.ப.க. மண்டல செயலாளர் அ.குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கு. சூரியகுமார் நன்றி கூறினார். தோழர் தா.செ. பழனிச்சாமி அனைவருக்கும் இரவு உணவு வழங்கினார். நிகழ்ச்சிகளை கனடா தமிழ் வானொலி நேரடியாக ஒலிபரப்பியது. நமது செய்தியாளர்