பள்ளி மாணவர்கள் அவரவர் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வண்ணத்துடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பட்டியல் இனப் பிரிவு மாணவர்கள் இத்தகைய அடையாளங்கள் வழியாகப் பள்ளிகளில் பாகுபாடுகளுடன் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் ‘விபூதி - குங்கும’த்திலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் வரையறுக்கப் பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன.

caste threadகடந்த 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த ஜாதிக் கயிறு, ஜாதிப் பொட்டு, ஜாதி  மோதிரங்களை அணியும் வழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன், இந்தச் சுற்றறிக்கை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இப்படி ஒரு சுற்றறிக்கை ஆதிதிராவிடர் நலத் துறையிடமிருந்து தான் முதலில் வந்தது என்றும் அமைச்சர் கூறினார். 

தமிழ்நாட்டில் 99 சதவீதப் பள்ளிகளில் இத்தகைய ஜாதி பாகுபாடுகள் பின்பற்றப்படுவது இல்லை; புகார் வந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் செங்கோட்டையன். ஆனாலும் இந்த சுற்றறிக்கையை செயல்படுத்த வேண்டாம் என்று வாய்மொழியாக அமைச்சர் அறிவுறுத்தி விட்டார்.

இப்படி பள்ளிக் கல்வி இயக்குநர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியதற்கான பின்னணி என்ன? உ.பி. மாநிலம் முசோரியில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர் களுக்கான பயிற்சி மய்யம் செயல்படுகிறது. அங்கே பயிற்சி பெற்ற அய்.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டில் இப்படி ‘ஜாதிக் கயிறு’ முறை அமுலில் இருப்பதை அறிந்து அதைத் தடை செய்ய தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்துதான் பள்ளிக் கல்வி இயக்குனர், இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். (அண்மையில் ஜோதிகா நடித்து தமிழில் வெளி வந்த ‘இராட்சசி’ என்ற திரைப்படம், ‘இந்த ஜாதிக் கயிறு’ பாகுபாடுகளை காட்சிகளாக வைத்திருந்தது.)

பா.ஜ.க.வைச் சார்ந்த வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போய் நிற்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், இந்த சுற்றறிக்கை இந்து மதத்துக்கு எதிரானது; அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மிரட்டினார். அந்த மிரட்டலே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மழுப்பலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஜாதி அடையாளம்தான் இந்துவின் அடையாளம் என்பதை எச். ராஜா இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். பார்ப்பனர்கள் தங்களை ‘பிராமணர்கள்’ என்று பிறவித் திமிரைக் காட்ட முதுகில் பூணூல் அணிகிறார்கள். எனவே ஒடுக்கப்பட்ட ‘சூத்திரப்’ பிரிவினர் தங்களை ‘சூத்திர - பஞ்சம ஜாதிகளை அடையாளப்படுத்தும் நோக்கத் துடனேயே கைகளில் கயிறு கட்ட வேண்டும் என்கிறார் எச். ராஜா. 

அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் இந்தக் கயிறு களால் அடையாளம் கண்டு பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டளையிடுகிறார்கள். ‘சர்வ சிக்ஷ அபியான்’ என்ற பெயரில் மத்திய அரசு நிதி உதவியோடு  நடத்தப்படும் பள்ளிகளில் ஜாதி பாகுபாடுகள் காட்டப்படுவதை 2009ஆம் ஆண்டு தேசிய ஆலோசனைக் குழு அறிக்கை சுட்டிக் காட்டியது. 

‘அங்கன்வாடி’ என்பது குழந்தைகளுக்கான சுகாதாரம், பராமரிப்பு, ஊட்டச் சத்துக்களை வழங்கி, அவர்களின் மூளை வளர்ச்சியை உறுதிப் படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு நிதி உதவி யுடன் இயங்கும் அமைப்பு. இந்த மய்யங் களில் பிற்படுத்தப்பட்ட தலித் குழந்தை களிடையே பாகுபாடு காட்டப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த பிள்ளைகள் தங்களுக் கான உணவு பரிமாறும் தட்டுகளை வீடுகளி லிருந்தே பெற்றோர்கள் உத்தரவுப்படி எடுத்து வருகிறார்கள். தலித் குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை தம்ளர்களை இவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று பெற்றோர்களால் அறிவுறுத்தப்படு கிறார்கள். 

தலித் மக்களின் உரிமைகளுக்காக ‘எவிடென்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கதிர், இத் தகவல்களை வெளியிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கிடையே நிலவும் தீண்டாமையை அம்பலப்படுத்துகிறது. மதுரை மாவட்டம் குரையூர் எனும் கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் தலித் மாணவர்கள் சேர்க்கப்படுவதே இல்லை.

1970ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு தலித் மாணவர்கூட இப்பள்ளியில் சேர்க்கப்படாததை ‘எவிடென்ஸ்’ கதிர் சுட்டிக் காட்டுகிறார். பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் ஒரு கணித ஆசிரியர், ‘தலித்’ என்ற சொல்லை ‘கழித்தல்’ என்பதற்கு அடையாளப்படுத்தி வகுப்புகளை எடுத்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியபோது கணிதத்தை எளிதில் புரிய வைக்க இந்த முறையைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

வகுப்புகளில் தலித் மாணவர்கள் பின்னால் உள்ள இருக்கைகளில் அமர வேண்டும். பள்ளிகளுக்கு செருப்பு அணிந்து வரக்கூடாது. பொதுக் கழிவறையைப் பயன்படுத்தக்கூடாது என்ற தடைகளும் பின்பற்றப்படுகின்றன.  சில தலித் ஆசிரியர்கள், அம்பேத்கர் குறித்த பாடத்தை வகுப்புகளில் எடுப்பதற்கு ஆதிக்க ஜாதி ஆசிரியர்கள் அனுமதிப்பது இல்லை.

‘மாணவர்கள் அணியும் கயிறுகளின் நிறம் ஜாதிக் கட்சிகளின் கொடியில் இடம் பெறும் நிறமாகவோ அல்லது ஜாதி சங்கங்கள் அடையாளப்படுத்தும் நிறமாகவுமே இருக்கிறது. ஜாதிக் கட்சிகளும் ஜாதி சங்கங்களும் பள்ளி மாணவர்களிடம் இந்தக் கயிறுகள் கட்டுவதைக் கட்டாயப்படுத்துகின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை, காவி நிறங்களில் கட்டப்படும் இந்தக் கயிறுகள், ‘கீழ் ஜாதி’, ‘மேல் ஜாதி’யினரை அடையாளப்படுத்துகின்றன’ என்கிறார், எவிடென்ஸ் கதிர். 

மதுரை மாவட்டம் கப்பலூர் கிராமத்தைச் சார்ந்த 21 வயது மாணவனின் பெயர் ‘ஜாதி ஒழிப்பு வீரன்’. “எனது தந்தை, பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் எனக்கு இந்த பெயர் சூட்டியதால் பள்ளிகளில் தொடர்ந்து நான் அவமதிப்புக்கும் தொல்லை களுக்கும் உள்ளாகி வருகிறேன். பல ஆசிரியர்கள் என்னை கேவலமாகப் பேசி எனது பெயரை மாற்றிக் கொள்ளும்படி கூறினார்கள்.

நான் எனது பெயரை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. அதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார். 16 வயதில் இந்தப் பெயருக்காவே ஜாதி ஒழிப்பு வீரன் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2014இல் வழக்கு தொடரப்பட்டது என்ற தகவலையும் எவிடென்ஸ் கதிர் கூறுகிறார். இப்போது ஜாதி ஒழிப்பு வீரன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்.

‘தீண்டாமை சட்டப்படி குற்றம்’ என்று சட்டம் கூறுகிறது. மாணவர்களிடையே ஜாதிக் கயிறுகள் வழியாக ‘தீண்டாமை’ நிலைநிறுத்தப்படுகிறது. 

எச். ராஜா போன்ற பார்ப்பனர்களோ இதை இந்து மத அடையாளம் என்கிறார்கள்.

1941ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியில் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி 6 வயதுக்கு மேற்பட்ட யூதர்களும் நாஜிக்களின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் யூதர்களும் யூதர் என்ற பெயர் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கைப்பட்டைகளை அணிய வேண்டும்; இது கட்டாயம் என்று ஹிட்லரின் உத்தரவு கூறியது. அதைத்தான் இந்த ஜாதிக் கயிறும் நினைவுபடுத்துகிறது என்று ஒரு  அய்.அய்.டி. பேராசிரியர் கூறுகிறார்.

கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களே தடை செய்யப்பட வேண்டும். பிரான்ஸ் நாடு சிலுவை, குல்லா, தலைப்பாகை, பர்தா உள்ளிட்ட எந்த மத அடையாளத்தையும் அணியக் கூடாது என்று தடை செய்துள்ளது. பள்ளி மாணவர் களிடையே ‘ஜாதி நஞ்சை’த் திணிக்கும் கயிறுகள் கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும்.

(‘இந்து’ ஆங்கில நாளேடு ஆக. 18, 2019இல்  வெளியிட்ட கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)