‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

பா.ஜ.க. நடத்தும் ‘இராமராஜ்ய’ ஆட்சியில் பார்ப்பனர்கள் வெளிப்படையாகவே வீதிக்கு வந்து ‘பிராமணர்களே’ உயர் பிறவிகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே ‘பிராமணர்கள்’ உயர் பிறவிகள் என்று பெருமைப் பேசி மார்தட்டக் கிளம்பி யிருக்கிறார்கள்.

tamil brahmins global meetகேரள மாநிலம் கொச்சி நகரில் ஜூலை 19 முதல் 21 வரை ‘தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு’ (Tamil Brahmins Global Meet) என்ற மாநாட்டை நடத்தி யுள்ளனர்.

‘தமிழ் பிராமணர்கள்’ தமிழ்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தாமல் கேரளாவில் கொச்சியைத் தேர்வு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சிதம்பரேஷ் ஆகியோரும், நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்ற பார்ப்பனரும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உலகம் முழுதும் உயர் பதவிகளைப் பெற்று சர்வதேச சக்திகளாக வலிமை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் டிரம்ப், அதிபரான பிறகு அந்த நாட்டில் அரசு வழக்கறிஞர்களாகவும், டிரம்ப் ஆலோசனைக் குழுவிலும் பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர். அடுத்து வர இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒரு பார்ப்பனப் பெண் போட்டியிடக் கூடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து நாட்டின் அதிபராக இப்போது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த போரீஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறவர். ஏற்கனவே இலண்டன் மேயராக இருந்தவர். அவரது புதிய அமைச்சரவையில் இந்தியாவைச் சார்ந்த பிரித்தி பட்டேல், அலோக் சர்மா, ரிஷி சுனாக் என்ற மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் அலோக் சர்மா, ரிஷி சுனாக் இருவரும் பார்ப்பனர்கள். ரிஷி சுனாக் - இன்போசிஸ் நிறுவனரும், பார்ப்பன தொழிலதிபருமான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷாதாவின் கணவர்.

கொச்சி பார்ப்பன மாநாட்டில் பேசிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்களாகிய நாம் இரு பிறப்பாளர்கள். நாம் எப்போதும் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும். ‘பிராமணன்’ சுத்தமான பழக்க வழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, சைவ உணவு, கருநாடக இசைப் பற்று என்று உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்கள். அந்த வகையில் ‘பிராமணர்கள்’ வாழும் ‘அக்ரஹாரம்’ புனிதமானது. அது பாதுகாக்கப்பட வேண்டும். அங்கேதான் சிறந்த கலாச்சாரப் பாரம்பர்யம் உள்ளது. ‘பிராமணர்களை’த் தவிர வேறு எவரையும் அங்கே குடியமர்த்தக் கூடாது” என்று ‘பிராமண’ குலப் பெருமையைப் பேசிய அவர், தொடர்ந்து பேசுகையில் “ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடுகள் இருக்கக் கூடாது; அது தேவையற்றது; ‘பிராமணர்கள்’ இதை எதிர்த்துப் போராட வேண்டும்” என்றும் பார்ப்பனத் திமிரோடு பேசியிருக்கிறார்.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று கூறுகிறவர், ஜாதி அடிப்படை யில் அக்ரஹாரங்கள் இருக்க வேண்டும் என்கிறார். இவ்வளவையும் பேசிவிட்டு, “நான் அரசியல் அமைப்பு சார்ந்த பதவியில் இருப்பதால் இது சார்ந்து எந்தக் கருத்தையும் பகிரங்கமாகப் பேச முடியாது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பார்ப்பன மாநாட்டில் பார்ப்பன நீதிபதிகள் பங்கேற்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு உறுதிமொழிக்கு எதிரானது. பார்ப்பனர் தொடர்பான வழக்குகள் இவர்களிடம் விசாரணைக்கு வந்தால் அவர்கள் வழங்கக் கூடிய தீர்ப்பு பார்ப்பனர்களுக்கு சார்பாக இருக்குமா? சட்டம் சார்ந்து இருக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

‘பிராமணர்கள்’ இரு பிறப்பாளர்கள் என்பது மனுசாஸ்திரத்தின் கருத்தாகும். அதன் அடையாளமாகவே காயத்ரி மந்திரம் ஓதி, அவர்கள் ‘பூணூல்’ போட்டுக் கொள் கிறார்கள். ஒருவன் தன்னை ‘பிராமணன்’, ‘இரு பிறப்பாளர்’ என்று அறிவித்துக் கொள்வதால், ஏனைய ஓர் பிறப்பாளர்களை ‘சூத்திரர்’கள், இழிமக்கள் என்பதாக அறிவிக்கிறார்கள். ‘பிராமணன்’ என்ற பிறவியின் அடிப்படையிலேயே வேதம் ஓதும் உரிமையும் கடவுளிடம் நெருங்கி கர்ப்ப கிரகத்தில் நுழைந்து பூஜை செய்யும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உரிமை கொண்டாடி ஏனைய பெரும் பான்மை சமூகத்தை தங்களுக்குக் கீழானவர்கள் என்று கூறி வருகிறார்கள். அதற்கு ‘ஆகம விதி’களை எடுத்துக் காட்டுகிறார்கள். அரசியல் சட்டம் மக்கள் அனைவரும் சமம் என்கிறது. ஆகம விதிகள் ‘பிராமணர்களுக்கு உரிய சிறப்பு உரிமை களுக்கு வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறுகிறது. எனவே தான் ஆகம விதிகளை செல்லாததாக்கி அரசியல் சட்டம் வழங்கிய சமத்துவத்தை நிலை நாட்ட ‘கோயில் கர்ப்பகிரக’ நுழைவு உரிமைக்குப் பெரியார் போராடினார். பெரியார் தொடங்கிய போராட்டத்தின் நியாயங்களை இப்போது பார்ப்பனர்கள் அவர்களின் ‘அதிகாரத் திமிர்’ பேச்சுகள் வழியாக ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களான பார்ப்பனரல் லாத சமூகத்தினருக்கு உணர்த்தி வருகிறார்கள்.

கொச்சி பார்ப்பன மாநாட்டில் நீதிபதிகள் பங்கேற்ற செய்தியை ஊடகங்கள் அனைத்தும் கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்து விட்டன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு மட்டும் இந்த செய்தியை வெளியிட்டது. நடுநிலை ஏடாகவும், ‘மதச் சார்பற்ற’ ஏடாகவும் கூறிக் கொள்ளும் ‘இந்து’ ஆங்கில நாளேடு கூட இந்தச் செய்தியை வெளியிடாமல் பார்ப்பனர் களைக் காப்பாற்றியிருக்கிறது.        

நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்

கொச்சி பார்ப்பன மாநாட்டில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“அரசியல் சட்டத்தின்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்குவதாக உறுதியேற்று உயர் பொறுப்பிற்கு வந்துள்ள நீதிபதிகள் தங்களின் ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்கலாமா? அதுவும் பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள், உயர்வானவர்கள் என்று கூறி ஜாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே எதிரானது அல்லவா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. (கடிதத்தின் முழு விவரம் பின்னர்)