kolathoor mani and rajendran

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி.

மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது.

மாலை 6 மணியளவில் பறை இசை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. குடியாத்தம் பயணக் குழுவின் கலைக் குழு பறை இசைகளை முழங்கியது. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் பயணித்த ‘விரட்டு பண்பாட்டுக் கலைக் குழு’ கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தின் நோக்கங்களை விளக்கும் பாடல்கள் - வீதி நாடகங்கள் - உரைச் சித்திரங்களை நிகழ்த்திக் காட்டியபோது, கரவொலிகள் வெடித்துக் கிளம்பின. குடியாத்தம்-மேட்டூர் பயணக் குழுவில் கலை நிகழ்ச்சி நடத்திய தோழர்களும் இதில் இணைந்து கலை நிகழ்வுகளை நடத்தினர். மாநாட்டை நோக்கி கூட்டம் அணி அணியாக வந்து கொண்டிருந்தது. திரும்புமிட மெல்லாம் தலைகளாகத் தெரிந்தன. கலை நிகழ்வுகள் முடிந்தவுடனே திடீரென மழை கொட்டத் தொடங்கியது. 30 நிமிடம் மழை கொட்டித் தீர்த்தது. நிகழ்ச்சிகள் தற்காலிகமாக தடைபட்டன. மழைவிட்டவுடன் ஒலிபெருக்கி சாதனங்கள் பழுதான நிலையில் கழகச் செயல்வீரர்கள் உடனே சென்னை பரப்புரை வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கிக் கருவிகளை சில மணித் துளிகளில் மேடையில் பொருத்தினர். மேடைக்கு அருகே பரப்புரை வாகனம் நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கி மேடையில் நிறுவப்பட்டு நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கின. கடும் மழைக்குப் பிறகும் ஆங்காங்கே ஒதுங்கி நின்ற மக்கள் மீண்டும் நிகழ்ச்சிகளைக் கேட்க இருக்கையில் அமர்ந்து விட்டனர்.

திருச்சி மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் புதியவன் வரவேற்புரையைத் தொடர்ந்து, பயணக் குழு ஒருங்கிணைப் பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இளையராஜா (மயிலாடுதுறை குழு), உமாபதி (சென்னை குழு), மடத்துக் குளம் மோகன் (திருப்பூர் குழு), நாத்திக ஜோதி (சங்கரன்கோயில் குழு), ஆர்.எஸ். சக்தி (மேட்டூர் குழு), பரத் (குடியாத்தம் குழு) ஆகியோர் பயணங்களில் கட்சிகளைக் கடந்து மக்கள் தந்த பேராதரவையும் குழுவினரிடம் நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்திய ஆதரவு, நிதி உதவிகளையும் பகிர்ந்து கொண்டபோது கூட்டத்தினர் உற்சாகமடைந்தனர்.

திருப்பூர் பயணக் குழுவில் பங்கேற்று பயணம் முழுதும் அறிவியல் பாடலைப் பாடி மக்களின் பேரன்பைப் பெற்ற பெரியார் பிஞ்சுகள் யாழிசை, யாழினி ஆகியோர் மேடையில் ‘கம்ப்யூட்டரில் ஜோசியம்’ என்ற பாடலைப் பாடி பாராட்டுகளைப் பெற்றனர்.

குமாரபாளையம் கழகத் தோழர் அண்ணாத்துரை -பனிமலர் இணையரின் அன்பு மகள் ஈழக்கனி மலர் ஒவ்வொரு நாளும் உண்டியலில் சேர்த்த தொகையை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கழக வளர்ச்சிக்கு பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால்பிரபாகரன் பேசினார். நேரத்தின் நெருக்கடியால் கழகப் பொறுப் பாளர்கள் பேச இயலவில்லை. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தனது சுருக்கமான உரையில், “இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித்துவம் பெற்று நிற்பதற்கான அடித்தளம் இங்கே பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஊட்டி வளர்த்த சமூக நீதி எனும் புரட்சிகரப் பண்பாடுதான், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் சமூகத்தின் அது கடைகோடியில் உழலும் மக்களாக இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்கே முன்னுரிமை தருகிற நிலையை உருவாக்கியது பெரியார் கண்ட திராவிட இயக்கம். கல்வியை வெகு மக்களுக்கு மறுத்த மனுதர்ம பார்ப்பனப் பண்பாட்டுக்கு எதிராக தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட்ட கல்வி, வேலைவாய்ப்புக்கான சமூகநீதிப் பண்பாட்டின் வெளிப்பாடுதான் பயணக் குழுவினருக்கு கிடைத்த மக்களின் பேராதரவு” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. சமூக நீதியை பரவலாக தமிழ்நாட்டில் கலைஞர் நடைமுறைப் படுத்திய தொடர் செயல்பாடுகளையும் ‘நீட்’ தேர்வு தகுதிக்கான தேர்வு என்று சொல்லப்படுகிற வாதங்ககளில் புரட்டுகளையும் விளங்கியதோடு தமிழகத்தில் கட்டி எழுப்பப்பட்ட மருத்துவ சேவையை நீட் குலைத்து வருவதை விளக்கினார்.

திருச்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் டார்வின் தாசன் நன்றி கூறினார். பயணக் குழுவினர் கழகப் பொறுப்பாளர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குழுவில் பங்கேற்ற தோழர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

dvk meeting at perambalur

ஆகஸ்டு 20இல் தொடங்கி கொளுத்தும் வெயிலில் கிராமங்களில் சிறு நகரங்களில் ‘நீட்’ ஆபத்து; தமிழக வேலை வாய்ப்புகளை வடவருக்குத் தாரை வார்க்கும் மத்திய மாநில அரசுகளின் உரிமை பறிப்பு கொள்கைகளை விளக்கிப் பேசினர். கழகத் தோழர்களே பேச்சாளர்களாக இந்தப் பயணத்தில் பங்காற்றியது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். கொள்கைக் குடும்பமாக 7 நாள் ஒன்றாகப் பயணித்த தோழர்கள் கொள்கைகளையும் உறவுகளையும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு பெரம்பலூரிலிருந்து பிரியா விடை பெற்றனர்.

“கல்வி, வேலை - நம் உரிமை;  சுயமரியாதை - நம் அடையாளம்”

பயணக் குழுவில் இடம் பெற்றிருந்த தோழர்கள் அனைவரும் ஒரே சீருடை அணிந்திருந்தனர். கருப்பு ‘டி’ சட்டையில், சட்டைப் பை பகுதியில் பெரியார் படத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம் என்று அச்சிடப்பட்டிருந்தது. முதுகு புறத்தில் “கல்வி, வேலை - நம் உரிமை; சுயமரியாதை - நம் அடையாளம்” என்ற வாசகங்கள் அச்சிடப்பட் டிருந்தன. பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை மக்களிடையே இது கொண்டு சென்றது.

பரப்புரை வாகனங்களில் ‘நீட்’ பாதிப்பு களையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவல கங்களில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் புள்ளி விவரங்கள் படங்களுடன் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

கழக வெளியீடுகளுக்கு மக்கள் பேராதரவு

பரப்புரைப் பயணத்துக்காக கழக சார்பில் வெளியிட்ட கல்வி, வேலை வாய்ப்பு, உரிமைகள் பறிப்பு,  இடஒதுக்கீடு வரலாறு குறித்த நூல்களை பொது மக்கள் ஏராளமாக வாங்கிச் சென்றனர். நூல்களுக்கு மக்களிடையே பேராதரவு காணப்பட்டது. சென்னைப் பயணக் குழுவினர் எடுத்துச் சென்ற நூல்கள் எல்லாம் விற்பனையாகி விட்டன.

திருப்பூர் பயணக் குழுவில்  பெண்களே அதிகம்

திருப்பூரிலிருந்து புறப்பட்ட பயணக் குழுவில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இடம் பெற்றிருந்தனர். பெண்களே கடைகடையாக துண்டறிக்கைகளை வழங்கி, உண்டியல் மூலம் நிதி சேகரித்தனர்; பரப்புரை செய்தனர்; பாடல்களைப் பாடினர். பெரியார் இயக்கத்தில் பெண்களும் ஆண்களும் தோழர்களாக இணைந்து வீதிகளில் களப்பணியாற்றியதைப் பொது மக்கள் வியந்து பாராட்டினர்.