காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கழகம் மனு

மதவாத சக்திகள் விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஊர்வலங்கள் நாட்டில் பதட்டத்தை யும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகின்றன. மத அரசியலை மதங்களுக்கான பண்டிகைபோல மாற்றிக் காட்டி ஊர்வலம் நடத்துவதும்; அடிப்படை மத உரிமை என்றும் இந்து முன்னணியைச் சார்ந்த இராம கோபாலனும் மதவாத அமைப்புகளும் கூறி வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் இந்த ஊர்வலங்களில் நடக்கும் விதி மீறல்களைத் தடுக்கக் கோரி டிராபிக் ராமசாமி என்ற பார்ப்பனரே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பதட்டம் நிறைந்த பகுதிகளில் விநாயகன் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை இதற்கான இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும் என்று வரையறுத்தாலும் அவைகள் மீறப்படுகின்றன. காவல்துறை அனுமதித்த சிலைகளைவிட கூடுதலாக சிலைகள் வைக்கப்படுகின்றன. கடல் நீரை, நீர் நிலைகளை மாசுபடுத்தும் இரசாயனங்களைப் பயன்படுத்தி சிலைகளை செய்யக் கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தலைப் பொருட்படுத்துவதில்லை.

மின்சாரம் கொக்கிப் போட்டு எடுக்கப்படு கிறது. சிலைகளை அமைக்கும் இடங்களில் மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி களையும் பின்பற்றுவதில்லை. உயர்நீதிமன்றம் இது குறித்து காவல்துறையிடமும் மின்வாரியத்திடமும் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.

vinayagar stricke 600jpgசென்னையில் இஸ்லாமியர்களின் ‘பக்ரீத்’ பண்டிகை நாளான செப்டம்பர் 3ஆம் தேதி விநாயகர் ஊர்வலத்தை அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களின் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என்று பல்வேறு பெயர்களில் செயல்படும் இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. சிலைகளின் கைகளில் தங்களின் அமைப்பு கொடிகளை கட்டி விடுகிறார்கள்.

இந்த சட்ட மீறல்களை சுட்டிக் காட்டி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாநகர காவல்துறை அலுவலகம், மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் நேரில் அளிக்கப்பட்டன.

சென்னை மாவட்டக் கழக தோழர்கள் ஆகஸ்டு 18ஆம் தேதி மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று கோரிக்கை மனுவை வழங்கினர். இதேபோல் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், தூத்துக்குடி, நாகை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் கோரிக்கை மனுக்களை காவல் துறையிடம் வழங்கியுள்ளனர்.