கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுதும் 2000 விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 200 விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்து விட்டனர்.

பெரும் தொழில் நிறுவனங்கள் அரசு பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்வதற்கு ‘வராக் கடன்கள்; செயல்படாத சொத்துக்கள்’ என்று பெயர்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது பார்ப்பன அதிகாரவர்க்கம். கல்லூரி படிப்புக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத மாணவர்களின் படத்தை வங்கி விளம்பரப் பலகையில் ஒட்டி அவமானப்படுத்தும் பார்ப்பன வங்கி அதிகாரக் கும்பல், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பண முதலைகளின் பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வெளியிட மறுக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கிகளில் ‘பெரும் பணத் திமிங்கிலங்கள்’ கடனாக வாங்கி, பட்டை நாமம் போட்ட தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2.3 இலட்சம் கோடியிலிருந்து 6.8 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கிகள் அளித்துள்ள மொத்த கடன்களின் மதிப்பில் இது 11 சதவீதம்.

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், ‘செயல்படா சொத்துகளாக’ (அதாவது பார்ப்பன அதிகார வர்க்கத் துணையுடன் பட்டை நாமம் போடப்பட்ட தொகை) மாற்றியவர்களில் 70 சதவீதம் பேர் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்படிச் சொல்வது நாடாளுமன்றக் கணக்கு குழுவின் தலைவர் கே.வி. தாமஸ், அவரது அறிக்கை நாடாளுமன்றத்திலே வைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கிப் பார்ப்பனர்கள் இதற்காகவே திட்டங்களை உருவாக்கினர். வங்கிக் கடன் மறு நிதியம் மற்றும் மறு கட்டமைப்புத் திட்டம் (டுடியn சநகiயேnஉiபே யனே சநளவசரஉவசைiபே ளஉhநஅநள) என்று அதற்கு பெயர் சூட்டினார்கள். கடன் வாங்கி திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனை திருப்பி செலுத்த மீண்டும் கடன் வழங்குவதுதான் இத் திட்டம்.

கடன் வாங்கி, கடனை திருப்பிச் செலுத்த வங்கிகள் கொடுத்த கடனையும் வாங்கி, ஆக மொத்தமாக அதானி வங்கிகளுக்கு ஏப்பம் விட்டிருக்கும் தொகை ரூ.72,000 கோடி. இந்தப் பேர் வழிக்குச் சொந்தமான விமானத்தில் தான் மோடி உலகம் முழுதும் பறந்து கொண்டிருக்கிறார்.

வட்டி கட்டக்கூட முடியாத அளவுக்கு உற்பத்தி செய்யாத நிலையில் உள்ள அதானியின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தாராளமாக கடன் தொகையை வாரி வழங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே வாங்கிய கடன், புதிய கடன் எல்லாவற்றையும் 10 ஆண்டுகள் கழித்து செலுத்தினால் போதும். அதுவரை வட்டியைக்கூட கட்ட வேண்டாம் என்று தாராளமாக சலுகை காட்டியிருக்கிறது மோடி ஆட்சி. இதற்கு அருண்ஜெட்லியும் உடந்தை.

அதானிக்கு மட்டுமல்ல; மோடிக்கு மிகவும் நெருக்கமான முகேஷ் அம்பானிக்கும் அவரது ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு பழைய கடனையும் சேர்த்து புதிதாக ரூ4500 கோடி கடனை வழங்கி, திருப்பி செலுத்தும் காலத்தை 10 ஆண்டுக்கு நீடித்திருக்கிறார்கள். வேதாந்தா நிறுவனத்துக்கும் இதே சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து, உயிருக்குப் போராடும் விவசாயிகள் செத்தாலும் பரவாயில்லை என்று கடனை தள்ளுபடி செய்ய அடாவடியாக மறுக்கிறது.

நமது விவசாயிகளின் மொத்தக் கடன் சுமார் ரூ.75,000 கோடி. ஆனால் அதானி என்ற ஒரே தொழில் நிறுவனத்துக்கு மட்டும் வாரி வழங்கிய கடன் ரூ.72,000 கோடி.

வங்கிகளின் சேமிப்புகளில் 60 சதவீதம் மக்களுக்கு சொந்த மானவை. 15 சதவீதம் அரசுத் துறை நிறுவனங்கள் அளித்தவை. மக்களின் சொத்துகள்தான் இப்படி கார்ப்பரேட்டுகளின் காலடியில் கொட்டப்படுகின்றன. இப்படி கடனில் மூழ்கும் வங்கிகளை மீட்க ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவரான வைரல் ஆச்சார்யா என்ற பார்ப்பனர் ஒரு யோசனையை முன் வைத்துள்ளார். அரசுத் துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்கிறார். அதேபோல் கடனில் மூழ்கியுள்ள சிறிய வங்கிகளைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவைகளை அப்படியே மூழ்கவிட்டு விடலாம் என்கிறார். அப்படியே வங்கிகளை தனியாருக்கு விற்றால் அப்போது அதை வாங்கப் போகிறவர்கள் யார்? ஏற்கனவே வங்கிகளில் கடன் வாங்கி நாமம் போட்ட கார்ப்பரேட்டுகள் தான் வாங்குவார்கள்.

வங்கிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெரும் பணமுதலைகளை கொழுக்க வைத்து நாட்டையே திவாலாக்குகிறது. மோடி ஆட்சி இதையே கொள்கையாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவர்கள் கொண்டாடும் ‘இந்துக்கள்’ ஓட்டாண்டிகளாகிறார்கள்.