கழக செயற்குழு முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் சேலத்தில் பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:

ஈழத்தில் தமிழர்கள் ஒவ்வொருநாளும் இன அழிப்புக்குள்ளாகி வரும் நிலையில், அந்த இன அழிப்புக்கு சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ்ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் காங்கிரசுக்கும், காங்கிரசுக்கு துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ்ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப் படுகொலைகளை நிறுத்த முடியும் என்று கருதுகிறோம். ஒரு இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதுதான் இந்தத் தேர்தலில் முதன்மையானப் பார்வையாக இருக்க வேண்டும் என்பதே கழகத்தின் நிலை. இப்போது ஈழத்தில் இந்திய அரசின் முழு ஒத்துழைப்போடு இனப் படுகொலைகள் நடப்பதை, உறுதியாகத் தட்டிக் கேட்காமல் தி.மு.க. மீண்டும் காங்கிரசுடன் கைகோர்த்துக் கொண்டு காங்கிரசின் துரோகங்களுக்கு நியாயம் கற்பித்து வருகிறது. எனவே, காங்கிரஸ்- தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே இத் தேர்தலில் தமிழர் கடமையாக இருக்க முடியும் என்று கருதுகிறோம். அப்படி தோற்கடிக்கப்பட வேண்டுமானால், களத்தில் - சம போட்டியில் நிற்கக்கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே இவர்களைத் தோற்கடிக்க முடியும். எனவே எதிர்த்து நிற்கும் வலிமையான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தமிழர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். நிச்சயமாக அந்த வலிமையான கூட்டணி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான்.

அ.தி.மு.க. ஈழத் தமிழர் பிரச்சினையில் கடந்த காலங்களில் துரோகமான நிலைப்பாடுகளையே மேற்கொண்டு வந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இப்போது மக்களிடையே உருவாகியுள்ள எழுச்சியின் காரணமாக, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதோடு, தமிழர்களுக்கு எதிரான போரை, இந்திய அரசே நடத்துகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுகிறார். தி.மு.க. தனது ஆதரவை இந்திய அரசுக்கு தராமல் விலக்கிக் கொண்டிருக்கவேண்டும். அப்போது மத்தியில் ஆட்சி கவிழ்ந்து, இனப்படு கொலை நிறுத்தப்பட்டிருக்கும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஜெயலலிதாவின் இந்த கருத்துகள் சந்தர்ப்பவாதத்தோடு முன் வைக்கப்பட்டிருந்தாலும் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

அதே நேரத்தில் தி.மு.க. இனப்படுகொலைகளுக்கு துணைப்போகும் மத்திய காங்கிரஸ்ஆட்சியைக் கண்டிக்க முன் வராமல், மற்றொரு நாட்டின் இறையாண்மையில் இந்தியா ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாது என்று இந்திய அரசுக்கு நியாயம் கற்பிக்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. தி.மு.க.வின் இந்த சந்தர்ப்பவாதம் - தமிழர்கள் உணர்வுக்கு எதிராக உள்ளது. எனவே ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம் தமிழர்கள் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், கலைஞர் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம் தமிழர் உணர்வுகளுக்கு எதிரானதாகவும் இருப்பதால் ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதத்தை ஆதரிப்பதே இச்சூழலில் சரியான முடிவாக இருக்கும் என்று கருதுகிறோம்.

வீடு தீப்பற்றி எரியும் போது அணைக்க - அருகே உள்ளவர்கள் தண்ணீர் கொண்டு வரும் போது தண்ணீர் கொண்டு வருவோர், துரோகிகளா நண்பர்களா என்று பார்க்க முடியாது. எனவே, ஈழத்தில் தமிழினம் பூண்டோடு ஒழிக்கப்படாமல் இருக்க, காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என்று பெரியார் திராவிடர் கழகம் கருதுகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு இப்போதைய கூட்டணியில் இருப்பவர்கள் அப்படியே நீடிப்பார்களா என்பது சந்தேகம் தான் என்றாலும், இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே, இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் என்று கூறினர்.