சென்னையில் ஜூலை 15ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பழ. கருப்பையா, ‘காமராசர் - திராவிடர் இயக்கத்தின் பிள்ளை’ என்று கூறினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சியே காமராசரை காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் உயர்த்தியது என்றும் அவர் கூறினார். அவரது உரை :

kamarajar 600காமராசர் பிறந்த நாள் விழாவை பெரியார் இயக்கங்கள் நடத்துவதுதான் மிகப் பொருத்தமானது. பெரியார் பெரிதும் மதித்த தலைவர் காமராசர். பெரியாரின் சமூகப் புரட்சி மகத்தானது. பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே முக்கியம் என்று கருதிய பெரியார், அதற்காக இந்தியாவின் ‘விடுதலை’கூட தள்ளிப் போகலாம் என்று முடிவெடுத்தார். அவர் அந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரியானது. 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்து, அடிப்படை உரிமைகளையே பறித்தார். அப்போது காமராசர், “நாட்டைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால், கெட்ட வாய்ப்பாக அவர் உயிருடன் இல்லை. அவர் உயிருடன் இருந்திருப்பாரானால் நாட்டில் ஆட்சி மாற்றமே நடந்திருக்கும்.

இன்றைய அரசியல் பொது வாழ்க்கை ஊழலும் கொள்ளையுமாக இருக்கிறது. ஆனால் காமராசர் அதற்கு முற்றிலும் மாறுபட்டவராக வாழ்ந்தார். அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்லும் மறைந்த காங்கிரஸ் தலைவர் கருத்திருமன், காமராசரிடம் உரிமை எடுத்துக் கொண்டு கிண்டலாகப் பேசுவார். “இன்றைக்கு உங்கள் வீட்டில் தான் எங்களுக்கு சாப்பாடு” என்று கூறுவார். “எனக்கே காங்கிரஸ் கட்சி தான் சாப்பாடு போடுகிறது; உனக்கு நான் எப்படிப்பா சாப்பாடு போட முடியும்?” என்று காமராசர் கேட்பார். தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியம் உள்பட அனைத்து வருமானத்தையும் காங்கிரஸ் கட்சிக் கணக்கில் வரவு வைத்தவர் காமராசர். தனது தாயாருக்கு மாதந்தோறும் அனுப்பி வந்த சிறு தொகையைத் தவிர, தனக்கென்று தனிச் செலவு எதையும் காமராசர் வைத்துக் கொண்டதில்லை.

நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். காமராசர், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தலைவராகவும் முதல்வராகவும் உயர முடிந்தது என்றால் அதற்கான அடிப்படை என்ன? அதற்கான காரணம் என்ன? பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கி வைத்த எழுச்சி தான்/ (கைதட்டல்) 97 சதவீத மக்களை 3 சதவீத பார்ப்பனர்கள் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, நடேசனார், தியாகராயர், டி.எம்.நாயர் போன்ற தலைவர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

அது ஒரு எதிர்மறைப் பெயர் என்பது உண்மைதான். பொத்தாம் பொதுவாக பார்ப்பனரல்லாதாருக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்தது அந்த இயக்கம். அது நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது. பெரியார் தலைமைக்கு நீதிக்கட்சி வந்தபோது பெரியாரும் அண்ணாவும் இணைந்து திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டி பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு ஒரு ஆக்கப் பூர்வமான உருமாற்றத்தை வழங்கினார்கள். அந்த திராவிடர் இயக்கம்தான் இந்த மண்ணில் தமிழ் உணர்வையும் தமிழர் உணர்வையும் ஊட்டி வளர்த்தது. அந்தத் தாக்கம் காங்கிரசிலும் எதிரொலித்தது.

காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர்களே தலைவர் களாக வரமுடியும் என்று இருந்த நிலைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சி கடும் நெருக்கடியை உருவாக்கியது. கட்சியின் ‘குருக்களாக’ இருந்த பார்ப்பனர்கள் அதற்குப் பிறகு நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்ற நிலையில் தங்களது சீடர்களை களத்தில் இறக்கி விட்டனர். பார்ப்பனர் சத்தியமூர்த்தி, தனது சீடர் காமராசரையும் ராஜாஜி தனது சீடர் சுப்பையா என்பவரையும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்தார்கள். காமராசர்தான் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திராவிடர் இயக்கம் உருவாக்கிய எழுச்சிதான் இதற்கு அடிப்படை. நான் உறுதியாகக் கூறுவேன், காமராசர் திராவிடர் இயக்கத்தின் பிள்ளை; திராவிடர் இயக்கத்தின் வித்து. (பலத்த கைதட்டல்)

ராஜாஜி குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது காமராசரே நேரில் சந்தித்து திட்டத்தைக் கைவிடக் கோரினார். ராஜாஜி மறுத்தார். “நீ பெரியார் பேச்சைக் கேட்டு செயல்படுகிறாய்; திட்டத்தை கைவிட மாட்டேன்” என்றார்.

வட மாநிலங்களிலே மதத்தின் அடிப்படையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று சமூகத்தை பிளவுபடுத்தி, மத மோதல்களை உருவாக்கியதுபோல் தமிழ்நாட்டில் உருவாக்க முடியாததற்கு காரணம் என்ன? இங்கே தமிழ், தமிழர் என்ற உணர்வும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற உணர்வும் மேலோங்கி நின்றதுதான் காரணம். அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்.

பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சி நடந்த காரணத்தினால்தான் நெப்போலியன் அதிகாரத் துக்கு வர முடிந்தது. அதேபோல் திராவிடர் இயக்கம் உருவாக்கிய சமுதாய எழுச்சியினால்தான் காமராசர் அதிகாரத்துக்கு வர முடிந்தது. திராவிட இயக்கம் தமிழர் என்ற உணர்வை ஊட்டி, சமூகத்தை ஒருமைப் படுத்தியதால்தான் இப்போதும் பா.ஜ.க. தனது மத வழிக் கொள்கைகளைத் திணிப்பதில் வெற்றி பெற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் திராவிட இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக செயல்படுகின்றார்கள்.

நான், ஜெயலலிதாவின் அதிமுகவை திராவிட இயக்கம் என்று கூற மாட்டேன். அது ஆரிய தி.மு.க. அந்தக் கட்சியில் நான் 5 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தேன். கலைஞர் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து, திருவள்ளுவர் ஆண்டை தமிழருக்கான ஆண்டாக அறிவித்தார். ஜெயலலிதா முதல்வராக வந்த பிறகு அதை மாற்றினார். அதற்காக ஜெயலலிதா வுக்கு அரசு சார்பில் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்க என்னை அழைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் நான் இதை எதிர்த்துப் பேசினேன். “நீங்கள் சித்திரையைக் கூட தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் 60 ஆண்டு சமஸ்கிருத ஆண்டுக் கணக்கை விட்டொழியுங்கள். திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கைப் பின்பற்றுங்கள். 60 ஆண்டு சமஸ்கிருதக் கணக்கு தமிழருக்கான அடையாளம் அல்ல” என்று பேசினேன். அப்போது ஜெயலலிதா மேடைக்கு வரவில்லை. பிறகு வந்தபோது நான் பேசியதை அதிகாரிகள் கூறக் கேட்டு கொதித்துப் போனார். எனது பேச்சை அரசிதழில் வெளியிட வேண்டாம் என்று தடை போட்டார். தமிழர்களின் ஆண்டுகளாக பின்பற்றப்படும் குழப்பத்தை உருவாக்கும் 60 ஆண்டு சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட முறையை நாம் விட்டொழிக்க வேண்டும். பெரியார் எப்படி ஆட்சிக்குப் போகாமலேயே சமூகத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை உருவாக்கிக் கொண்டாரோ அதுபோல் நாம் செயல்படவேண்டும்.

பெரியார் இயக்கமாக தி.க. தலைவர் வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் போன்றவர்கள், அதிகாரப் பற்று இன்றி, பெரியார் கொள்கைக்காக உழைக்கிறார்கள் என்பதால் நான் அவர்களை எல்லாம் மிகவும் மதிக்கிறேன். ஒரு கட்டத்தில் நான்கூட நினைத்தேன், பெரியார் எந்த நோக்கத்துக்காக இயக்கத்தை உருவாக்கினாரோ அதன் தேவை அநேகமாக முடிந்துவிட்டது. எனவே அந்த இயக்கத்துக்கான தேவை இல்லை என்று நினைத்தேன். ஆனால் இப்போது உணருகிறேன். பெரியார் இயக்கம் முன்னெப்போதும் இருந்ததைவிட இன்னும் வலிமையோடு இயங்கவேண்டிய அவசியமிருக்கிறது என்று இப்போது உணருகிறேன். (கைதட்டல்)

kamarajar2 600பாரதியும் பாரதிதாசனும்

என்னைப் பொறுத்த வரையில் பரிதிமாற் கலைஞர் என்ற பார்ப்பனரைத் தவிர வேறு எந்த பார்ப்பனரும் தமிழை, தமிழர் உணர்வை மதிப்பவராக நான் கருதவில்லை. பாரதியைக் கூட நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பாரதி நல்ல கவிஞன் என்பது வேறு; அவன்தான் இந்து மதத்தைப் புகழ்ந்து பாடினான்; பாரத மாதாவைப் பாடினான். பாரத மாதாவுக்கு திருப்பள்ளி யெழுச்சி பாடியவன் பாரதி. பாரத மாதாவுக்கு தமிழகத்தில் என்ன வேலை? நாங்கள் தமிழ்த் தாய் என்ற ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். நாங்கள் எப்படி பாரத மாதாவுக்குப் பிறந்தவர்களாக இருக்க முடியும்? ‘பாரத மாதா’ வேண்டுமானால் எங்களுக்கு மாற்றாந்தாயாக இருக்கலாமே தவிர, நாங்கள் தமிழ்த் தாய் என்ற ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். பாரதி சமஸ்கிருதத்தைப் போற்றினான். என்னதான் தமிழைப் பாடினாலும் கூட அவன் உள்ளத்தில் அடிநாதமாக இருந்த உணர்வு சமஸ்கிருதம் தான். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாடுகிறான். நான் கேட்கிறேன், “தமிழ்நாட்டுக்கும் வேதத்துக்கும் என்ன தொடர்பு?”

தமிழுக்கு இலக்கணம் வகுத்ததே ஆரிய மைந்தன் அகத்தியன் என்கிறான் பாரதி. அகத்தியனை ஆரிய மைந்தன் என்கிறான். அகத்தியன் வந்து இலக்கணம் வகுக்கும் வரை, தமிழ் ஆடையின்றி அம்மணமாகவா நின்றது? தமிழுக்கு இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன். பாரதியோ, அகத்தியன் இலக்கணம் வகுத்தான் என்கிறான். நான் உறுதியாக சொல்வேன்; திராவிட இயக்கத்தின் கவிஞன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே தவிர பாரதியாக இருக்க முடியாது. (கைதட்டல்) பாரதிதாசன் தமிழைத் தனது உயிருக்கு நிகராகக் கருதிய கவிஞன். அவன்தான் -

“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!

செயலினைமூச்சினை உனக்களித்தேனே!” - என்று பாடினான்.

தமிழ்நாட்டில் மாற்றங்களுக்கு வித்திட்டது இரண்டு இயக்கங்கள்தான் என்பது எனது கருத்து. ஒன்று 500 ஆண்டுகாலம் நடந்த பக்தி இயக்கம்; பக்தி இயக்கம் பெரியார் இயக்கத்தைப்போல் ஜாதி ஒழிப்பைப் பேசவில்லை என்றாலும், சிவனை ஏற்றுக் கொண்டவர் எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் அவர்களைப் போற்றியது. சிவனை கடவுளாக ஏற்றுக் கொண்டவர் எந்த ஜாதியினராக இருந்தாலும் வணங்கத்தக்கவரே என்று அப்பர் பாடினார். சோழப் பேரரசு ஒன்று பிற்காலத்தில் உருவாக அடித்தளமிட்டது பக்தி இயக்கம் தான்.

பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு முதல் குரல் கொடுத்தவர் வள்ளலார். தனது தாயின் ‘யோனி’யிலிருந்து தன்னை முழுமையாக பிறக்க வைத்த இறைவனுக்கு ‘வந்தனம்’ (வணக்கம்) கூறிய வள்ளலார், ஆரிய வடமொழி மீது பற்று வைக்காமல், தமிழ் மீது பற்று வைக்கச் செய்த இறைவனுக்கு ‘வந்தனம்’ கூறுகிறார்.

அதே போன்று தமிழக்ததில் மற்றொரு இயக்கம் பெரியார் இயக்கம். அது ஜாதி ஒழிப்புப் பேசியது; சமூகயத்தைப் புரட்டிப் போட்டது; அதிகாரத்துக்குப் போகாமல் பேனா முனையில் சமூகத்தில் சிந்தனை மாற்றத்தை விதைத்தது பெரியார் இயக்கம். சமூகத்தை மாற்றியமைக்காமல் எந்தச் சட்டத்தையும் வெற்றிபெறச் செய்துவிட முடியாது. தான் பேசிய கொள்கையை தனது காலத்தில் வெற்றி பெற்றதை கண் எதிரில் கண்டு, தனது கொள்கை வெற்றிக்காக தனக்கு சிலை அமைக்கப்பட்டதை நேரில் பார்த்து மறைந்த தலைவர் பெரியார் ஒருவர்தான்” என்றார், பழ. கருப்பையா.

வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்த காமராசர் விழா

சென்னை இராயப்பேட்டை வி.எம்.சாலையில் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் மாலை 5.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவையொட்டி காமராசர், பெரியார் படங்களும் அவர்களின் கருத்துகளோடு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன.

“பள்ளிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு பதிலாக காமராசர் வாழ்த்துப் பாட வேண்டும்” என்ற பெரியாரின் கருத்து அனைவரையும் ஈர்த்தது. ‘விரட்டு பண்பாட்டுக் கலைக் குழு’வினரின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. காமராசர், அம்பேத்கர், பெரியார் மற்றும் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்கள், பறை இசை, இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் நாடகங்கள் என்று இரண்டரை மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்றினார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘காமராசரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பிலும், பழ.கருப்பையா ‘காமராசரின் சமூக நீதிப் புரட்சி’ எனும் தலைப்பிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘காமராசரும் பெரியாரும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர். பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு இறுதி வரை கருத்துகளையும் கலை நிகழ்ச்சிகளையும் செவிமெடுத்தனர். காமராசர் குறித்த ஏராளமான வரலாற்றுத் தகவல்களை கருத்தாளர்கள் விளக்கிப் பேசினர்.