எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகளே அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற முடியும்.
  - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி

அதோடு நிறுத்திடாதீங்க... எடப்பாடியை முதலமைச்சராக ஏற்கும் வாக்காளர்கள் மட்டுமே இனி தமிழ் நாட்டில் இடம் பெற முடியும்னு ஒரே போடா போட்டுடுங்க!

• மோடி தனது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாங்கியுள்ள புதிய விமானத்தின் விலை ரூ.8500 கோடி. - செய்தி

  விமானத்துக்குள்ளேயே யோகா நடத்தலாம்; மயிலுக்குத் தீனி போடலாம்; தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தையே கூட்டி மசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றும் வசதி எல்லாம் இருக்கும் போலிருக்கு!

யாருடன் வேண்டுமானாலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இரண்டே நாளில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்று குரலை மாற்றிக் கொண்டார். - செய்தி

எதுக்கு இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க; எங்க கூட்டணி எப்போதுமே அந்தந்த மாநில ஆளுநர்களுடன் தான் என்று ஒரே வரியில் முடிச்சுடுங்க.

• கொரானா பரவுவதால் மதப் பண்டிகைகளை பாதுகாப்புடன் மக்கள் கொண்டாட வேண்டும். - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

ஆமாம், பகவானுக்கு படையல் போடும்போது முகக்கவசம் போடுங்கள்; தீபார்த்தனை செய்யும்போது சானிட்டைசர் கொண்டு கை கழுவுங்கள்; ‘பகவான்’களிடமிருந்து இடைவெளிவிட்டு தூரத்தில் நின்று நமஸ்காரம் செய்யுங்கள்; ‘பகவான்’ தொற்றுக்கும் இன்னும் தடுப்பூசியை வெளிநாட்டுக்காரன் கண்டு பிடிக்கவில்லை சார்; ஜாக்கிரதைங்கோ...

• உச்சநீதி மன்ற நீதிபதி எம்.வி. ரமணா, ஆந்திர அரசுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்க ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் செல்வாக்கு செலுத்துகிறார்.
- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகார்

நல்லது; நீதிபதி ரமணா பதவி ஓய்வு பெற்ற அடுத்த நாள் ‘எம்.பி.’ பதவி உறுதியாகி விட்டது!

• வயது அதிகரிக்க அதிகரிக்க சிந்தனையில் மாற்றம் வரத்தான் செய்யும்.
- பா.ஜ.க.வின் இணைந்த குஷ்பு

அப்ப அடுத்த இரண்டு வருஷத்துல வேறு சிந்தனைக்கு போயிடுவீங்களா?

கிராமப்புற மக்களுக்கு கடன் வாங்க சொத்து அட்டை.
  -மோடி அறிவிப்பு

ஆண்டுக்கு 15 இலட்சம் வங்கியில் போடுவேன்னு சொன்னீங்க; இப்ப கடன் வாங்குறதுக்கு அட்டை கொடுக்கிறீங்க!

                                                     ****

கழக மகளிர் நடத்திய இணைய வழி நிகழ்வுகள்

பெரியார் - மணியம்மை திருமணம் குறித்த பொய் விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக,‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு' என்ற பெரியாரின் கூற்றை உறுதியேற்று திரவிடர் விடுதலைக் கழகப் பெண் தோழர்கள் ஜூலை 9ஆம் நாளான  பெரியார் - மணியம்மை திருமண நாளன்று தங்கள் பெரியாரியல் குடும்ப வாழ்வு எந்த அளவிற்கு சுயமரியாதையும், பகுத்தறிவையும் கற்றுத் தருகிறது என்பதனை விளக்கி 4-5 நிமிட காணொளிகளாக பேசி கருஞ்சட்டைப் பெண்கள் முகநூல் குழுவில் பதிவேற்றினர். மணிமொழி - பெங்களூர், இசைமதி - கோவை, சங்கீதா -  மடத்துக்குளம், சுதா - கொளத்தூர், கோகிலா - வனவாசி, வீரக்கண்ணி - மதுரை. ஜோதி - சென்னிமலை, சங்கீதா - திருப்பூர். தேன்மொழி - மேட்டூர், இரண்யா - சேலம். கீதா - மேட்டூர், கவிப்பிரியா - சென்னிமலை ஆகிய தோழர்கள் காணொளிகளில் பேசினர்.

செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளையொட்டி 20.09.2020 மாலை 6 மணிக்கு’பெண்கள் மீதான கற்பிதங்களை கட்டுடைப்போம்' என்ற தலைப்பில் சிறப்பு இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. கோபி மணிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இசைமதி - கோவை, சுதா - கொளத்தூர், சிவகாமி - திருப்பூர்,  மணிமேகலை - ஈரோடு ஆகிய தோழர்கள் கருத்துரை வழங்கினர்.  இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை வழங்கினார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It