bharathi 3607.9.2020ஆம் நாள் திங்கட்கிழமை வெளிவந்த ‘தினமணி’யில் கோதை சோதிலட்சுமி ‘பாரதியாரும் ஆரியமும்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். ஆரியர் - திராவிடர் இனப் பாகுபாடு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேலைநாட்டு அறிஞர்களால்தான் புனையப்பட்டதாகக் கூறிப் புலம்பியிருக்கிறார்.

பாரதியார் ‘ஆரியத்தை’ உயர்பொருளில்தான் கையாண்டுள்ளார் என்று மேற் கோள் காட்டி வலியுறுத்தி உள்ளார். “இருப்பனவற்றை யெல்லாம் சமரசமின்றி விமர்சனம் செய்” என்பது காரல் மார்க்சின் அறிவுநெறிக் கோட்பாடு ஆகும். அதனால் கட்டுரையாளர் இதற்குமுன்பே எழுதியிருந்த கட்டுரைகளின் கருத்து முரண்பாடுகளை நான் திறனாய்வு செய்து ‘சிந்தனையாளன்’, ‘தமிழ்ப் பணி’ ஆகிய இதழ்களில் வெளியிட்டிருக்கிறேன். அவ்வாறே இக்கட்டுரை யையும் திறனாய்வு செய்ய விழைகிறேன்.

‘ஆரிய இனம்’, ‘திராவிட இனம்’ இருக்கின்றனவா? எனக் கட்டுரையாளர் வினா எழுப்புகின்றார். அதற்கு வரலாற்றாளர்கள், அறிஞர்கள் கூறியுள்ளவற்றை நான்   இங்கே விடையாக வழங்குகிறேன். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைப் பேராசிரியர் -வரலாற்று ஆய்வாளர் இராகுல சாங்கிருத்தியாயன் சிறப்பாக எழுதியுள்ளார்.

சமுதாயத்தின் முக்கியமான மாற்றம் அல்லது பெரிய வளர்ச்சிகளையே மையமாகக் கொண்டு கதைகள் வடிவத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.

அவர் இதன் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வரிகள் அறிவுலகம் ஏற்றுப் பாராட்டப் பட வேண்டியவை. “இந்தக் கதைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் அந்தந்தக் காலத்தைப் பொறுத்த பலமான ஆதாரங்கள் இருக்கின்றன.

உலகத்தில் எத்தனையோ மொழிகள் உள்ள தர்க்க ரீதியான மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு இவைகளில் எழுதப்பட்டும் செதுக்கப்பட்டும் உள்ள சரித்திரம் -இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாட்டின் பழக்கவழக்கங்கள், புதைப் பொருள்கள் இவைகளிலிருந்தெல்லாம் ஆதாரங்கள் தேடப்பட்டிருக்கின்றன” என்று கூறும் பகுதி, “இவர் பெரும்பாடுபட்டுத் திரட்டிய அறிவுத் திரட்சியையும் அடைவையும் இந்நூலில் ஆய்வுக் கருவூலமாக வழங்கியுள்ளார் என்னும் புலனாகும் புலமை”யை வெளிப்படுத்தக் கூடியதாகும்.

இந்நூலில் இடம்பெறும் ‘அமிர்தாஸ்வன்’ என்ற பெயரில் வரும் கதையின் அடிக் குறிப்பில் வரும் செய்தி மிகவும் கூர்ந்து நோக்கத் தக்கது. “இன்றைக்கு இரு நூறு தலைமுறைகளுக்கு (கி.மு.3000) முந்திய ஒரு ஆரிய குலத்துக் கதை இது. அந்தக்காலத்தில் ஈரான் வெள்ளைச் சாதியினத்தவரும், இந்தியரும் சேர்ந்த ஒரு குலம் இருந்தது.

இரண்டும் கலந்த இந்தக் குலத்திற்கு ‘ஆரியர்’, ‘ஆரிய குலம்’ என்று பெயர். ஆடு, மாடுகள், குதிரைகள் இவற்றைப் பரிபாலிப்பது இவர்களுடைய வாழ்க்கைக்கு முக்கியத் தொழிலாக இருந்தது” என்ற குறிப்பு ‘ஆரியர்’ பற்றிய தெறிப்பான சான்றாக அமைகிறது.

‘புருதானன்’ தலைப்பில் வரும் கதையில், அதன் உள் வரலாறாக, ஆரியர் இந்தியாவிற்கு வந்த முயற்சி யைச் சுட்டுவது புலனாகும். வட்சு நதிப் பிரதேசத்திலிருந்து கிளம்பிய ஆரியர்கள் பாமீர், இந்துகுஷ் முதலிய மலைப்பிரதேசங்களின் கடினமான வழிகளையும் குனார், பஞ்சகோரா முதலிய ஆறுகளையும் கடந்து, பல இன்னல்கள் பட்டு, இந்தச் சமவெளிப்பிரதேசத்தை மங்கலபுரம் (மங்களூர்) வந்து சேர்ந்தார்கள்.

இந்த இடத்திலிருந்து அய்ம்பது கோச (நூறு மைல்) தொலைவில் அசுரர்களுடைய தேசம் இருந்தது. அதன் நகர நாகரிகத்தை ஆரியர்கள் சிறப்பித்துப் பேசியுள் ளார்கள். அசுரர்களின் உருவத்தை அருவருப் பாகச் சுட்டியுள்ளார்கள்.

புருதானன் தலைமையில் ஆரியப்படை அசுர அரசனை நகரச் சந்தியில் நிறுத்தி, நகர மக்களுக்கு முன்னால் அங்க அங்கமாக வதை செய்தது. நகரத்தின் பெரும் பாகத்தைத் தீக்கிரையாக்கியது. இதுவே அசுரர் களினுடைய கோட்டையின் முதலாவது அழிவு. அன்று தான், ஆரியர்களுக்கும் அசுரர்களுக்கும் (தேவர் ­அசுரர்) இடையில் யுத்த விதையும் ஊன்றப்பட்டது.

இன்றைக்கு நூற்று அறுபது தலைமுறைகளுக்கு (கி.மு.2000) முன்னே தேவ-அசுர யுத்தம் மூண்டதின் கதை இது. இதைத்தான் மேலைநாட்டு ஆய்வறிஞர்கள் ஆரியர்-திராவிடர் இனப்போர் என்று கூறியுள்ளார்கள் என்பது பல அறிஞரின் கூற்றாகும்.

உலக அளவில் அறியப்பட்ட பழங்கால இந்தியா தொடர்பான வரலாற்றாளர் ரொமிலா தாப்பர், ‘கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா?’ என்ற தன் உரை நூலில் “புருஷ் பழங்கால அரசன் என்றும், அசுர ராட்சசன் என்றும் பரதரால் வீழ்த்தப்பட்டவன் என்றும் வேத நூல்கள் வழியே தெரிய வருகிறது” என்று கூறியுள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது.

கட்டுரையாளர் சோதிலட்சுமி “தமிழகத்தில் வேத காலம் தொடங்கி எங்கும் ஆரிய, திராவிட முரண் காணப்படவில்லை” என்று எழுதியுள்ளார். சங்க காலம், சங்கம் மருவிய காலம், இருண்ட காலம் என்றுதான் தமிழக வரலாற்றில் நான் கண்டிருக்கிறேன். ‘வேத காலம்’ என்ற ஒன்று என் கண்ணில் படாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்.

புராணம் தொடங்கிப் பல நூல்களில் பாரத தேசம் 56 மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இந்த 56 தேசங்களுக்குள் ஒன்று திராவிட நாடு என்று குறிக்கப்பட்டுள்ளது என்று கட்டுரையாளர் கூறுகிறார். நம் நாட்டுப் பண்ணில்கூட அன்றாடம் ‘திராவிட உத்கல வங்கா’ என்ற வரியைப் பாடிக் கொண்டுதான் இருக்கி றோம். கட்டுரையாசிரியர் இதை உணர்வார் என்று நம்புகிறேன்.

‘ஆரியம்’ என்ற சொல்லுக்கு, அகர முதலிகள் (அகராதிகள்) துணைகொண்டு கட்டுரையாளர் பொருள் விளக்கம் தருகிறார். ஆரிய என்றால் உயர்ந்த, மேன்மையான, சிறப்பான உயரத்தில் உள்ள, பண்பாடு மிக்க என்ற பொருள்கள் உண்டு. சிலப்பதிகாரம், இமயமலை உச்சியில் வாழ்ந்தோரை ஆரியர் என்று சொல்கிறது என்கிறார் கட்டுரையாளர்.

அதே சிலப்பதிகாரம்தான் “தமிழரின் வீரத்தைப் பழித்த ஆரிய அரசர்களான கனக விசயரைச் சேரன் செங்குட்டுவன் அவர்களின் வடநாட்டுக்கே சென்று போர்க்களத்தில் வென்று கண்ணகிப் படிமம் சமைத்தற்கு வேண்டிய கல்லை இமயத்தில் எடுத்துக் கங்கை யில் நீராட்டிக் கனகவிசயர் தலைமையில் சுமக்க வைத்துச் சேர நாட்டுக்குக் கொண்டுவரச் செய்தான்” என்று பெருமிதத்தோடு கூறுகிறது. “மாதவி மங்கை பாடிய கானல் வரிப்பாட்டு, கனகவிசயர் தலையை நெரித்தது” என்கிறது.

“பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று கூறுவதே இழிவு என உணர்ந்து, தமிழ்ப்பற்று மிகுந்து, இன உணர்ச்சி வாய்ந்து தமிழ்மக்கள் தங்களுக்கென, தங்களையே குறிக்கும் தனிப்பெயர் கொள்ள விரும்பினார்கள்.

இவ்விருப்பம் இறுதியில் ‘திராவிடர்’ என்று வரலாற்றிற்கும், இழிந்தநிலை மாறி மனித நிலையை யடைவதற்கும், பொருத்தமாக யாரும் அசைக்கமுடியாத உண்மைப் பெயராக, உணர்ச்சிதருங் கருவியாக அமைந்து விட்டது” என்று ‘பெரியார் அகராதி’ திராவிடர் என்பதற்கு விளக்கம் தருகிறது என்பதைக் கட்டுரையாளர் அறிக.

சங்க காலத்தில் ஆரியர் தம் வேள்விக் கொள்கைகள், சடங்குச் செல்வாக்கு, அரசர்களிடம் பெற்றிருந்த முதன்மை முதலியனவற்றை எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகிய சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

ஆனாலும் அப்போதே பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது என்பதை முனைவர் சி.இளங்கோ ‘தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு’ என்ற தம் ஆய்வு நூலில் வெளிப்படுத்தியுள்ளார். சோழன் நலங்கிள்ளியின் தம்பியான மன்னன் மாவளத்தான், பார்ப்பனர்களை வெறுக்கும் இயல்பி னைக் கொண்டவனாக இருந்தான். இதனைத் தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் தம் புறப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆர் புனை தெரியல் நின்முன்னோரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர் மற்றது

நீர்த்தோ நினக்கு...” (புறம் 43)

சங்க காலத்தில் அந்தணர்களின் வைதீகச் செயற்பாட்டிற்குச் சிலரிடம் எதிர்ப்பு உணர்வுகள் இருந்துள்ளன என்பதையே இப்பாடல் சுட்டுவதாகக் கூறலாம்.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், ஆரியரை வென்றான் என்ற செய்தி அறியற்பாலது. தமிழகத்தில் இருந்த ஆரியர்களுடன் சோழர்கள் செய்த போர்ச் செய்தியை ‘ஆரியர் படையின் உடைகவென்’ என அகநானூறு (336) பதிவு செய்கிறது.

தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊர் வரை ஆரியர்கள் படையெடுத்துவந்து அங்கு அவர்கள் சோழர்களிடம் தோற்று ஓடினார்கள் என்ற செய்தியை முனைவர் சி.இளங்கோ தம் நூலில் பதிவுசெய்துள்ளார்.

மேற்கூறிய கட்டுரையாளர், பாரதியார், ஆரியர் பற்றியே பெருமையாகப் பாடினார் என்பதை விமர்சன மாகவும் குற்றச்சாட்டாகவும் சிலர் சொல்வது உண்டு என்று குறைபட்டுக் கொள்கிறார். அதன் உண்மை பற்றி இனி ஆராய்வோம்.

பாரதியார் சிறந்த கவிஞர்; உணர்ச்சி மிகுந்த கவிஞர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. உணர்ச்சி எப்போதும் உள்ளத்தில் சமநிலை யில் இருப்பதில்லை. அது சமநிலையில் வெளிப்படுவதும் இல்லை. சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் அது தன்னை ஒப்பனை செய்துகொள்ளும். கவிஞனுக்கும் அது பொருந்தும். அது பொதுவிதி. சில கவிஞர்கள் கடைசி வரையில் கொண்ட கொள்கையில் உணர்ச்சியும் உறுதி யும் கொண்டிருப்பார்கள். சிலர் அவ்வப்போது வழுக்கிக் கொண்டிருப்பார்கள்.

பாரதியார் எழுதிய கவிதைகளை ‘நியு செஞ்சுரி’ புத்தக நிறுவனம், கால வரிசைப்படியாகத் தொகுத்து 700 பக்கங்கள் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், தமிழ் நாடு ஆகியவற்றைப் பற்றி 11 பக்கங்கள் மட்டுமே உள் ளன. இந்தப் பதினோரு பக்கங்களிலும்கூட, தமிழை, தமிழ்நாட்டை உயர்த்திச் சொல்ல மனம் வராமல் ஆரியத்தையே உயர்த்திக் கூறுகிறார் பாரதியார்.

பாரதியார், தமிழைத் தாய்மொழியாகக் கொண் டிருந்த போதிலும் தம்முடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமசுகிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார். (வாலாசா வல்லவன், ‘திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்’, 3-ஆம் பதிப்பு, பக்.15, ‘நிகர்மொழி’ பதிப்பகம்).

இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார் பாரதியார். ஸ்ரீ கிருஷ்ண தோத்திரம் என்ற பாடலிடல் “ஆரிய நீயும் நின் அற மறந்தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே, வீரசிகாமணி ஆரியர் கோனே” என்று துதிக்கிறார்.

இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ‘ஆரியர் கோன்’ எனக் கூறுவது அவரின் ஆரியப் பற்றை அதிகமாகக் காட்டுகிறது. இதனை வாலாசா வல்லவன் மேற்கூறிய ஆய்வுநூலில் குறிப்பிடுகிறார்; மேலும் இந்தியாவில் உள்ள அனைத்துச் செல்வங் களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார்.

இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி; பௌத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ஆரியச் செல்வம் என்கிறார்.

“மற்ற இனத்தவரின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியர் செல்வ மாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாக அமைகிறது” என்று தம், ‘திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார், வாலாசா வல்லவன்.

சமசுகிருதத்தில் க, ச, ட, த, ப முதலிய வல்லின எழுத்துக்களுக்கு வர்க்க எழுத்துகள் இருப்பதுபோல் தமிழில் வர்க்க எழுத்துக்கள் இல்லாததால் தமிழில் எழுத்துக் குறையுள்ளது என்று பாரதியார் 1915-இல் சூலைத் திங்களில் ‘ஞானபாநு’ என்ற இதழில் எழுதி யுள்ளார். பாரதியின் இக் கூற்றை அறிஞர் வ.உ.சி. 1915 செப்டம்பர் திங்களில் அதே ஞானபாநு இதழில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார்.

“தமிழில் எழுத்துக்குறை என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருதச் சார்புடையவராக வும், தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக் காதவர்களாகவும் இருக்கின்றனர்...” -வ.உ.சி. (ஆ.இரா. வேங்கடாசலபதி, ‘வ.உ.சி.யும் பாரதியும்’, மக்கள் வெளியீடு : 1994. பக். 128, 129)

பாரதியின் உள்நிலைமை தெரிய அவரது பாடல் களைச் சற்று கூர்ந்து பாருங்கள். பாரதியின் நாட்டுப்பற்று :

“உன்னத ஆரீய நாடெங்கள் நாடே”

பாரதியின் இனப்பற்று :

“முன்னை யிலங்கை அரக்கர் அழிய

முடித்த வில் யாருடைய வில்?

ஆரிய ராணியின் வில்,

ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தேர்”

எனப் பல பாடல்களில் ஆரியத்தின் பெருமையையே பறை சாற்றுகிறார் மணியம்மையார். (‘குடிஅரசு’, 23.9.1944)

1949இல் ஓமந்தூரார் அரசு, பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950இல் அரசு, பாரதி நூல்கள் பதிப்புக்குழு ஒன்றை உருவாக்கியது. அக் குழுவில் இருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப் படியில் இருந்த கிரந்த எழுத்துகளை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909இல் வெளிவந்த ‘ஜன்ம பூமி’யில் ‘ஸமர்ப்பணம்’, ‘முகவுரை’ ஆகியவற்றின்கீழ் ‘ஸி. சுப்பிரமணிய பாரதி’ என்றே கையொப்பமிட்டுள்ளார் என்றும் ஆய்வாளர் க. கைலாசபதி கூறியுள்ளார். (வாலாசா வல்லவன், ‘தி.இ. பார்வையில் பாரதியார்’, பக்.19).

பாரதி, கவிதையில் மட்டுமல்லாமல், கட்டுரை, கதைகளில் கூட, சமசுகிருதத்தை அதிகமாகப் புகுத்தி யுள்ளார். திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். அவரின் உரை நடையில் ‘சமசுகிருத வாடை’ அதிகமாக வீசுவதைக் காண ஒரு சிறு பகுதி :

“டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது”

என்பதில் மேற்கூறிய உண்மையை உணர்க. ‘பிராயச்சித்தம்’ என்ற கதையில் ஒரு சிறு பகுதி :

“ப்ராம்ஹணா மம தேவதா (பிராமணர் எனக்குத் தெய்வம்) என்று ஸ்ரீமந் நாராயணனே சொல்லு கிறார். அப்படியிருக்கையில் யாரும் பிராமணப் பதவியிலிருந்து நழுவக்கூடாது. நழுவினாலும் மறுபடியும் சேர்ந்துகொள்ள வேண்டும்”

என்று ப்ராயச்சித்தம் என்ற கதை சொல்கிறது. தமிழில் சொல் முதலில் தனி மெய்யெழுத்து வராது என்பது கூடப் பாரதிக்குத் தெரியாமல் போனது வியப்பாக உள்ளது.

பாரதி சூழ்நிலைக் கைதியாகிவிடும் போதெல்லாம் அவரின் உறுதியில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுகிறது என்பதை அவரை முற்றிலும் ஆய்ந்தவர்கள் அறிந்து கொள்வார்கள்.

‘இந்தியா’ இதழில் பணியாற்றியபோது பாரதியாரை ஆங்கில அரசு, கைதுசெய்ய ஆணை அனுப்பியபோது அவர் தப்பித்துப் பிரெஞ்சு ஆட்சியிலிருந்த புதுவைக்குச் சென்றுவிடுகிறார். அங்குச் சிலகாலம் இருந்த பிறகு கடலூருக்குச் செல்கிறார். அங்கே ஆங்கில அரசு அவரைக் கைதுசெய்து, முதலில் சார்பு நிலைச் சிறை யிலும் அடுத்து மத்திய சிறையிலும் வைத்தது. பாரதி அச் சிறையிலிருந்தபடியே மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் ஆங்கிலத்தில் எழுதிக்கொடுக்கிறார் : (G.O.No.1331 dt.18.12.1918 Public)

“பிரபுவிற்கு உண்மையான கீழ்ப்படியும் பணியாளனாக இருக்க இறைஞ்சும் -சி. சுப்பிரமணிய பாரதி. (I beg to remain your Excellency’s most obedient servant – C.Subramania Bharathi)

கீழ்க்கண்ட நிபந்தனைகள் பேரில், பாரதியார் விடுதலை செய்யப்பட்டார்.

1. நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் ஏதாவது ஒன்றில் வாழ்க்கை நடத்த வேண்டும்.

2. பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பிறகே வெளியிட வேண்டும்.

3. அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் நீங்கிவிட வேண்டும்.

இந்த மூன்று கண்டிப்புகளையும் எழுத்து வடிவத்தில் பாரதி, ஏற்றுக்கொண்டார். 14.12.1918-இல் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அவர் நேரே கடையம் சென்று விட்டார். (வாலாசா வல்லவன், ‘தி.இ. பார்வை யில் பாரதியார்’, பக்.33-36).

நாட்டு விடுதலைக்காகப் பொங்கிப் பெருகிய உணர்ச்சி வெள்ளத்தில் பாட்டு வடித்த பாரதியார், கடலூர்ச் சிறையில் வைக்கப்பட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதப்பட்டு, ஆங்கில அரசால் வைக்கப்பட்ட கண்டிப்புகள் ஏற்றுக்கொள்ளப் பட்டுக் கடையம் சென்றுவிட்ட பிறகு, அவரின் உணர்ச்சி வெள்ளம் மங்கிப் படிப்படியாகத் தணிந்து விட்டது என்றே கூற வேண்டும்.

“ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு, நமஸ் காரம்; நான் ஸெளக்யமாகக் கடயத்துக்கு வந்து சேர்ந்தேன். ‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களை யும் ஒன்றாகச் சேர்த்து அச்சடிப்பதற்குரிய ஏற்பாடுஎதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை.இனிமேல் சிறிதுகாலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புத்தகங்களைப் போலீஸ் டிப்டி ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக்கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நாள் ஒப்பந்த மெழுதிக் கொடுத்திருக்கிறேன்.”

உனதன்புள்ள

சி. சுப்பிரமணிய பாரதி

(பெ. தூரன், பாரதித் தமிழ், பக்.297, 298) மேலும் பாரதி இந்தியாவின் பொதுமொழியாக இந்தி தான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொல்லியிருக்கிறார். 15-12-1906 இந்தியா வார ஏட்டில் ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்ற தலைப்பில் அதனைக் கூறியுள்ளார்.

1920இல் (11-1-1920) சுதேசமித்திரன் இதழில் ஸம்ஸ்க்ருத பாஷையே இந்தியாவுக்குப் பொதுமொழி யாக வரவேண்டும் என்று எழுதியுள்ளார்.

ஆங்கிலேயர் பாரத நாட்டுக்குத் ‘தன்னாட்சி’ (சுயாட்சி) கொடுத்தால் போதும் என்ற எண்ணத்துக்கும் தள்ளப் பட்டார் பாரதியார். ஆங்கியேலர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக் கில்லை. (சுதேசமித்திரன்-1916 டிசம்பர் 26-பெ. தூரன், பாரதித் தமிழ், ப.223.)

மேற்கூறிய சான்றுகளால் பாரதியாருக்குத் தமிழின் மீது தனிப்பற்று கிடையாது. ஆரிய மொழி சமசுகிருதத் தின் மீதே அதிகமான பற்றுதல் உண்டு என்பதும், நடுவுநிலைமை இல்லாமை, சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் தம் கருத்தைமாற்றிக் கொள்ளுதல், தாம் உயர் வாகக் கருதிய ஆரியத்தைத் தலைதூக்கி நிறுத்துதல் முதலிய ஒரு சார்பின் மேலோங்கிய பிடிமானம் உண்டு என்பதும் கண்டறியலாம்.

“ஆரியர் -உயர்ந்தவர் என்ற பொருளிலும் பூரியர் அவ்வாறில்லாதவர் என்ற பொரு ளிலும் பாரதி கையாண்டுள்ளார்” என்று சோதிலட்சுமி கூறுகிறார். அவ்வாறு இல்லை என்பதைப் பாரதியார் கூற்றைக் கொண்டே அவருக்கு விடையிறுக்கிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்ட மான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண்சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக் கூடும்” என்பதே அவரின் கூற்று.

ஒவ்வொரு இனக்குழு சமூகமும் அதன் மொழி வழியிலேயே அறியப்படுகிறது. தமிழினம், தமிழ்மொழி மூலம் அறியப்படுகிறது. சமற்கிருதம் ஆரிய இனக் குழுவின்மூலம் அறியப்படுகிறது. ‘ஆரியம்’ -‘ஆரியர்’ என்பது இனவழி வந்த சொல்லேயாகும். ஆரியம் நன்று தமிழ்தீ தெனவும் உரைத்த குயக்கோடனைச், சாக நக்கீரர் சவித்தார் என்பதும் அவன்பால் இரக்கங் கொண்டு இறந்தவன் மீண்டும் எழுந்து வாழ வாழ்த்தினார் என்பதும் நினைவிற்கொள்க.

“ஆரியம் போல் உலக வழக்கு,

அழிந்தொழிந்து சிதையா உன்

சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே!”

என்ற பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் ‘ஆரியம்’ என்பதை எப்பொருளில் வழங்கினாரோ அப்பொருளில் தான் பாரதியாரும் வழங்கியுள்ளார் என்பது அறியற்பாலது. ஆரியர் -பார்ப்பார், பிராமணர், அந்தணர் என்பவையெல்லாம் ஓர் இனத்தவரின் பல பெயர்கள். பிராமணர் பிரம்மாவின் தலையில் பிறந்தவர் என்பதால் மனு அவர்களை உயர்ந்தவர் என்று கூறுகிறார். அத னால்தான் ‘ஆரியம்’ என்பதற்கு உயர்பொருள் குறிக்கப் படுகிறது. அது இனவழி வந்த சொல்லே ஆகும்.

- பேராசிரியர் இரா. சோதிவாணன்