arundhati roy 400மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக வைக்கப் பட்ட அருந்ததிராய் நூல் துணைவேந்தர் பிச்சுமணி என்பவரால் திடீரென்று நீக்கப்பட்டிருக்கிறது. ‘ஏ.பி.வி.பி’ எனும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு தந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகக் குழுக்களின் ஆலோசனை பெறாமலேயே ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டார்.

ஆர்.எஸ்.எஸ். எதை விரும்பவில்லையோ, அது பாடத் திட்டத்திலும் இடம் பெறக் கூடாது என்ற நிலைக்கு பல்கலைக்கழகங்கள் வந்து விட்டன. ‘தோழர்களுடன் ஒரு பயணம்’ என்ற  அந்த நூல், அருந்ததிராய் தண்டகாரண்யப் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடத்திய உரையாடல்களையும் அவர்கள் வாழ் நிலையையும் விவரிக்கிறது. அருந்ததிராய் உலகமறிந்த எழுத்தாளர்; புக்கர் விருது பெற்றவர்.

அருந்ததிராயின் நூல் தடை செய்யப்பட்ட நூலும் அல்ல. ‘நான்கு வர்ணத்தை’ நியாயப்படுத்தி அந்த தர்மத்தைக் காக்க கொலை செய்வது பாவமல்ல என்று கூறும் கீதை கல்லூரிகளில் இடம்பெறும்போது இந்த நூலுக்கு மட்டும் தடை போடுவது என்ன நியாயம்? இராமாயணங்கள்கூட 15க்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொரு இராமாயணமும் ஒவ்வொரு கதையைக் கூறுகிறது. இதை பேராசிரியர் இராமானுஜம் என்ற ஆய்வாளர் தொகுத்திருந்தார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருந்த அந்தப் பாட நூலை இதே ‘அகில இந்திய விசுவ பரிஷத்’காரர்களின் எதிர்ப்பால் நீக்கி விட்டனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் மனுசாஸ்திரத்தை எரித்து மாணவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கருநாடக பா.ஜ.க. ஆட்சி திப்பு சுல்தான் வரலாற்றைப் பாடநூலிலிருந்து நீக்கியது. திப்பு, பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்துப் போராடியவர். முதன்முதலாக பீரங்கி ஏவுகணைகளைப் பயன்படுத்தியவர்.

இந்துக்களின் 158 கோயில்களுக்கு நிதி உதவி அளித்து அரசு நிலங்களை நன்கொடையாக வழங்கியவர். 1791இல் திப்புவுடன் பேஷ்வா பார்ப்பன மன்னர் மாதவ் ராவின் மராத்திய இராணுவம் போரிட்டபோது சிருங்கேரி சங்கர மடத்தையும் மடத்தின் கோயிலையும்  இடித்துத் தள்ளியது. இதைச் செய்தது பேஷ்வா பார்ப்பனரின் ‘இந்து’ இராணுவம்.

அப்போது சிருங்கேரி சங்கராச்சாரி, திப்பு சுல்தானிடம் தான் உதவி கேட்டார். 80 கடிதங்களை எழுதினார். திப்பு தான் பார்ப்பன சிருங்கேரி மடத்தை புணரமைப்பதற்கு நிதியுதவி செய்து பணியாளர்களையும் நியமித்தார். ஆனாலும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் பேஷ்வாக்களை ஆதரித்ததே தவிர, திப்புவை எதிரியாகக் கருதி இந்த வரலாறுகளை பாடநூலில் சேர்க்கக் கூடாது என்று கூறி தடை போட்டது.

மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அம்பேத்கர் தொகுப்பில் இடம் பெற்றிருந்த ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்ற கட்டுரைகள் தொகுப்பை நீக்க 1987இல் மகாராஷ்டிராவில் பார்ப்பனர் - சிவசேனா - ஆர்எஸ்.எஸ்.காரர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் நீக்க முன் வந்த காங்கிரஸ் ஆட்சி, தலித் தலைவர்கள் எதிர்வினைகளுக்குப் பிறகு மீண்டும் தனது முடிவை மாற்றியது.

அப்போது ஆர்.எஸ்.எஸ்.சும் சிவசேனையும் மீண்டும் போர்க் கொடி உயர்த்திய தோடு, தாங்கள் நடத்திய அம்பேத்கர் நூல் எதிர்ப்புப் பேரணிக்குத் தந்த பத்திரிகை விளம்பரங்களில், “கலப்பு இரத்தம் இல்லாத இந்துக்கள் மட்டும் பேரணியில் பங்கேற்க வேண்டும்” (14.1.1988, இந்தியன் எக்ஸ்பிரஸ்) என்று அறிவித்து ‘தலித்’ மக்களை ஜாதி கெட்டவர்கள்  ‘இந்துக்கள் அல்ல’ என்று இறுமாப்போடு சித்தரித்தது. இவர்கள்தான் இப்போது அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அன்றைய மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்வர் எஸ்.பி. சவான், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். இந்தத் தொகுப்பில் அம்பேத்கர் கட்டுரை இடம் பெறலாம். ஆனால் அந்தக் கருத்தோடு அரசுக்கு உடன்பாடில்லை என்ற அடிக்குறிப்பை சேர்க்க வேண்டும் என்று உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

கருத்துகளைக் கண்டே மிரளுகிறவர்கள் அதை சந்திக்க முடியாமல் அடக்குமுறை ஆயுதங்களை ஏந்து கிறார்கள். தமிழ்நாட்டில் பெரியாரின் பொன்மொழி,  அண்ணாவின் ‘ஆரிய மாயை’, புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’, ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘காந்தியார் ஆன்மா சாந்தியடைய’ போன்ற பல நூல்கள் அன்றைய காங்கிரஸ் ஆட்சிகளால் தடை செய்யப்பட்டன.

அப்போது காங்கிரஸ் பார்ப்பனிய கலாச் சாரத்திலே மூழ்கிக் கிடந்தது. வரலாறு இத்தடைகளை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் ‘விசுவ இந்து பரிஷத்’ அத்துமீறி நுழைவதை தமிழர்களால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

எந்தநூலையும் தடை செய்யக் கூடாது என்பதே நமது கருத்து. மனித விரோதக் கருத்துகளைக் கொண்ட ‘மனுசாஸ்திரமும்’, ‘கீதை’யும்கூட தொடர்ந்து பதிப்புகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்