கடவுளின் அச்சத்தால் மதங்களைக் காட்டி மக்கள் மீது திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளும் அதில் மக்கள் சந்தித்த கடும் துயரமும் வரலாறு நெடுக நிகழ்ந்து வந்திருக்கின்றன. இந்த நம்பிக்கைகளை தகர்த்து எதிர்த்துதான் மனித சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை மதங்களைப் புண்படுத்துகிறார்கள் என்று கூச்சல் மட்டும் மாறாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

18ஆம் நூற்றாண்டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் போரைக் காட்டிலும் நோயால் உயிரிழந்தவர்களே அதிகம். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளை தனது டைரிகளில் பதிவு செய்துள்ள குறிப்புகள் இப்போது வரலாற்று ஆவணங் களாகப் பயன்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் நோய்த் தொற்று பரவிய காலத்தில் மக்களிடம் கடவுள் பெயரால் நிலவிய மூடநம்பிக்கைகள் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட் குறிப்பில் பதிவு செய் திருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை ‘தமிழ் இந்து’ நாளேடு (நவம்.8, 2020) ஒரு கட்டுரையாக வெளியிட்டிருக் கிறது. பேராசிரியர் எம்.பி.ராமன் எழுதியுள்ள அக்கட்டுரையின் சுருக்கமான கருத்துகள்:

• 1756இல் தமிழ்நாட்டில் ஆற்காடு, வேலூர், லால்பேட்டை வட்டாரங் களில் பெரியம்மை, பிளேக் நோயினால் 10-15 ஆயிரம் பேர் பலியானார்கள். ஆர்க்காட்டில் கடம்பை அம்மன் கனவில் தோன்றி, நான் அனைவரை யும் கொன்று போட வந்திருக்கிறேன். யானை, குதிரை, ஆட்டுக்கிடா பலி கொடுப்பதோடு, மது, மாமிசம், 100 பானை சோறு போட வேண்டும் என்று கூறிய வதந்தி பரவியது. மற்றொரு அம்மன் குதிரை, யானைகளுடன், தீவட்டி ஏந்திய ஆட்களுடன், மேள தாளத் துடன் மைசூரிலிருந்து புறப்பட்டு, கடலில் குளியல் போட வந்து கொண்டிருப்பதாகவும் வழியில் அம்மன் திருவண்ணாமலையில் முகாமிட்டிருப்பதாகவும் வதந்தி பரவியது.

மற்றொரு வதந்தி - மரக்கிளைகளில் அம்மன் வவ்வால் போல் தொங்கிக் கொண்டிருப்ப தாகவும் உள்ளூர் தேவதைகள் அம்மனை எதிர்த்து சண்டை போடுவதாகவும் வதந்திகள் பரவின. இரவு முழுவதும் நடந்த சண்டையால் விடிந்து பார்த்தபோது எங்கும் இரத்தம் சிந்தி கிடக்கிறது என்றும், புளிய மரத்தில் யானை, குதிரைகளின் தலைகள் தொங்குகின்றன என்றும் புரளிகள் கிளம்பின. மக்களும் நம்பினார்கள். நாளுக்கு நாள் அம்மை, பிளேக் நோயால் மரணங்கள் நடந்து கொண்டே இருந்தன. 15,000க்கும் மேல் செத்து மடிந்தனர்.

• அய்யண்ண சாஸ்திரி என்பவர் வந்தவாசியைச் சார்ந்தவர், அரசுக்குக் கட்ட வேண்டிய வரிப் பணத்தை ஆட்கள் மூலம் கொடுத்தனுப் பினார். அந்த ஆட்களில் ஒருவன், “நான் தான் மாரியம்மன் வடிவில் வந்திருக்கிறேன். இந்தப் பணத்தை எனக்குக் காணிக்கையாக்கு” என்று மிரட்டவே, சாஸ்திரி அதை நம்பி பணத்தை அனுப்பவில்லை.

• அந்தக் காலத்தில் ஆளுநர்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும்கூட இந்த வதந்திகளை நம்பி அஞ்சியிருக்கிறார்கள்.

• 1849இல் காலராவுக்கு தடுப்பூசி அறிமுக மானது. மக்கள் ஊசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. ஊசி போட்டுக் கொண் டால் ஒரு பணம் இலவசம் என்று அரசு ஆசை காட்ட வேண்டியிருந்தது. (இப்போது இலவசமாகவே கொரானா தடுப்பு ஊசி என்று தேர்தல் அறிக்கை யிலேயே பா.ஜ.க. கூறுகிறது)

• 1879இல் முதன்முதலாக அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் முறை வந்தது. மாரியாத் தாளைப் புண்படுத்தும் தெய்வக் குற்றம் என்றுஅன்று இந்துக்கள் எதிர்த்தார்கள். சுகாதார ஊழியர்களை ஊருக்குள் விடாமல் தடுத்தார்கள். கீழ் ஜாதிக்காரனுக்கும் உயர்ஜாதிக்காரனுக்கும் சமமாக ஒரே ஊசியைப் போடுவதா என்று எதிர்த்தார்கள்.

• பிரெஞ்சு மூவண்ணக் கொடியின் கீழ் ஆளும் அரசு மாரியம்மன் பெயரால் வரும் எதிர்ப்பை யும் நோய்த் தடுப்பையும் பொறுத்துக் கொள்ளாது என்று புதுச்சேரி ஆளுநர் கப்ரியேல் லூயி அன்முல்வான் 1906இல் தடுப்பூசியைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தார். ஆனாலும் மக்கள் ஏற்கவில்லை.

• 1930இல் முழுமையான மக்கள் இயக்கத்தைத் தடுப்பூசிக்காக நடத்தியும் வெற்றி பெற முடியவில்லை.

‘இந்துக்கள் நம்பிக்கை’, ‘இந்துக் கடவுள் அவமதிப்பு’ என்று இன்று சங்கிகள் போடும் கூச்சல், கடந்த காலங்களிலும் இப்படித்தான் மக்கள் முன்னேற்றத்துக்கும் உயிர் வாழ்க்கைக்கும் முட்டுக்கட்டைகளையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.

காலத்தின் மாற்றம் மக்களை தடுப்பூசிகளுக்கு தயார்ப்படுத்தியது. இப்போது அதே பழமைவாத கூட்டம் ‘மனுசாஸ்திரத்தை’ யும் ‘முருகனை’யும் வைத்துக் கொண்டு மக்கள் பிரச்சினைகளைவிட இவைதான் முக்கியம் என்று யாத்திரை போகிறது.

- விடுதலை இராசேந்திரன்