arundhati roy 300நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ‘ஏ.பி.வி.பி.’ மிரட்டி தடை செய்த ‘அருந்ததி ராய் - தோழர்களுடன் ஒரு பயணம்’ நூலிலிருந்து ஒரு பகுதி.

வெள்ளையர்கள் 'கோண்டுவானா' என்றழைத்த கோண்டுகளின் நிலத்தின் ஒரு பகுதி தான் இன்று 'தண்ட காரண்யா' என அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒரிசா, மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இதில் அடங்குகிறது. பிரச்சனைக்குரிய பகுதியை வெவ்வேறு நிர்வாகப் பகுதிகளின் கீழ் பிரிப்பது ஒரு பழைய தந்திரம். ஆனால் மாவோயிஸ்டுகள் மற்றும் கோண்டு மாவோயிஸ்டுகள் இந்த மாநில எல்லைகளைக் கண்டு கொள்வதில்லை.

அவர்களின் மனங்களில் வேறு ஒரு வரைபடம் தான் உள்ளது. காடுகளில் வசிக்கும் மற்ற பிராணிகளைப் போல இவர்களிட மும் தனித்துவமான பல பாதைகள் உள்ளது. அவர்களை பொறுத்தவரை சாலைகள் நடப்பதற்கான வழிகளாக இல்லை. அவைகள் கடந்து செல்ல பயன்படுத்தப்படுகிறது அல்லது காவல்துறையினரை வழிமறித்து பதுங்கி பாய்வதற்கே உபயோகமாக விளங்குகிறது.

கோண்டுகள் தான் அங்குள்ள பெரும்பான்மை சமூகம் (அவர்களில் கோயா, டொர்லா பிரிவுகள் உள்ளன) என்ற போதிலும் வேறு சிறு சிறு பிரிவுகளும் அங்கு உள்ளன. வியாபாரிகள், குடியேறியவர்கள் என ஆதிவாசிகளாக சாலைகளிலும் சந்தைகளிலும்தான் வாழ்கிறார்கள்.

PWG ஒன்றும் தண்டகாரண்யா காட்டுப் பகுதிக்கு வந்த முதல் குழு அல்ல. அவர்களுக்கு முன்பே புகழ்பெற்ற காந்தியவாதியான பாபா ஆம்தே அங்கு வந்து தனது ஆசிரமத்தையும் தொழு நோய் மருத்துவமனையையும் 1975இல் வரோராவில் தொடங்கினார்.

அபுஜ்மத் வனப்பகுதியில் இராம கிருஷ்ணா மிஷன் தனது பள்ளிகளை நிறுவியது. பஸ்தரின் வட பகுதியில் பாபா பீகாரி தாஸ் பழங்குடி யினரை இந்துக்களாக மாற்றும் தனது பணியை முழு வீச்சில் நடத்தி வந்தார். அந்த பிரச்சாரத் தின் மூலம் பழங்குடி கலாச் சாரத்தை முதலில் மதிப்பிழக்கச் செய்தார்கள். பின்னர் மனங்களில் வன்மத்தை விதைத்தார்கள்.

அதன்பின் இந்து மதத்தின் பெரும் வரமான ஜாதியை அறிமுகப்படுத்தினார்கள். முதன் முதலில்  இவ்வாறு கிராம பெரியவர்களையும் நிலக்கிழார்களையும் மாற்றினார்கள்.

சல்வா ஜூதும் என்ற பிரிவைத் தொடங்கிய (போராளிகளைக் காட்டிக் கொடுக்கும் குழு) மகேந்திர சர்மா போன்றவர்களுக்கு ‘துவிஜத்' பதவி வழங்கப்பட்டது - அதாவது இருமுறை பார்ப்பனராக பிறந்தவர். (இது ஒரு பெரும் மோசடியே ஏனெனில் யாராலும் பார்ப்பனராக மாற முடியாது).

ஆனால், இந்த போலி இந்துத்துவம் பழங்குடியினருக்கு போதுமானது. அங்கு விற்கப்படும் போலி சோப், தீப்பெட்டி, எண்ணெய், பிஸ்கட்களைப் போல. இந்த இந்துத்துவா மாற்றத்தின் ஒரு பகுதியாக கிராமங்களின் பெயர்கள் எல்லாம் நில ஆவணங்களில் மாற்றப் பட்டது. அதன் பயனாக இப்பொழுது பல கிராமங்களுக்கு இரண்டு பெயர்கள் உள்ளது மக்களிடம் புழங்கும் பெயர், மற்றொன்று அரசாங்கப் பெயர். உதாரணத்திற்கு ‘இன்னார்’ கிராமம் ‘சின்னாரி’யாகிப் போனது.

வாக்காளர் பட்டியலிலும் பெயர் மாற்றம் நிகழ்ந்தது. 'மாசா சர்மா' ‘மகேந்திர கர்மா' வாக உருமாறினார். இப்படி இந்துக்களாக மாற மறுத்தவர்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் தான் பின்பு இயற்கையாகவே மாவோயிஸ்டுகளின் தொகுதியாகிப் போனார்கள்.