dravida aatchi bk‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய கருத்தரங்கு திராவிட ஆட்சிகளின் மீதான அவதூறுகளுக்கு ஆய்வுப்பூர்வ மறுப்பு

இந்தியாவிலேயே திராவிட ஆட்சிகள் கல்வி - மருத்துவம் - உணவு உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்காக உருவாக்கிய திட்டங்களால் தமிழகம் முதலிடத்தில் நிற்கிறது.

திராவிட இயக்கம் பற்றி, பன்னிரண்டு ஆய்வாளர்கள் உரிய தகவல்களுடன் ஆய்வு நோக்கில் எழுதிய 12 ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு - ‘திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்’ எனும் தலைப்பில் 352 பக்கங்களோடு கயல்கவின் பதிப்பகம் சார்பில் நூலாக கடந்த வாரம் வெளி வந்திருக்கிறது மு.க. ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார்.

பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன், பதிப்பாசிரியராக இந்நூலைத் தொகுத்திருக்கிறார். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் சார்பில் இந்த நூலின் கட்டுரைகள் சென்னை திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையத்தில் திறனாய்வு செய்யப்பட்டன. 21.3.2021 அன்று மாலை 6 மணியளவில் இந்நிகழ்வு நடந்தது.

‘பொருளாதார மாற்றம், ஜாதி, அரசியல் மற்றும் திராவிட நலத் திட்ட அரசியல்’ என்ற தலைப்பில் ஜெயபிரகாஷ், ‘காவிரிப்படுகையில் நிலத்தின் அரசியல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் எழிலரசன், ‘குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் வளர்ச்சியின் பயன் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் பிரகாஷ் ஆகியோர் திறனாய்வு செய்தனர். இவை நூலில் இடம் பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகள்.

இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், “திராவிட ஆட்சிகளில் தமிழ்நாடு அடைந்த பயன், போட்டி போட்டுக் கொண்டு திமுக, அதிமுக ஆட்சிகள் மக்கள் நலத் திட்டங்களை எப்படி செயல்படுத்தின, தற்போது அதிமுக வின் நிலை என்ன ?திராவிடத்தை ஒழிப்பேன் என்று கூறுபவர்களின் அரசியல் என்ன” போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறி நிறைவுரையாற்றினார். அவரது உரையில் குறிப்பிட்டதாவது:

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முன் மாதிரி மாநிலங்களாக இது வரை கேரளாவும் குஜராத்தும் மட்டுமே பேசப்பட்டு வந்தன. தமிழ்நாடு ஆய்வுக்கே எடுத்துக் கொள்ளப்படாத நிலை. இதற்கு இரண்டு காரணங்களை முன் வைக்கிறார், பேராசிரியர் ஜெய ரஞ்சன் .

ஒன்று - “அறிவுலகில் சஞ்சரித்த ஆய்வாளர்கள் பெரும்பாலோர் வயிறு வளர்ப்பாளர்களாக இருந்தனர். வேறு சிலர் கருத்து புள்ளி விவரங்கள் பற்றி கவலைப்படாமல் தாங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் ஆய்வுகளை நடத்தினர்.

அது அவர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது. எதிர்ப்புகள் எதையும் சந்திக்க வேண்டியதில்லை. உண்மையில் திராவிட ஆட்சி காலம் இருண்ட காலம் என்பது ஒரு கருத்தாக்கம் அல்ல; வெற்றுக் கூச்சல்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் இரண்டு முறைகளில் வகைப்படுத்தப்பட்டன. ஒன்று நாட்டில் பெரும் தொழில்சாலைகளை வளர்த்து, பொருளாதாரத்தை உருவாக்கி, அதன் வழியாக வருவாய் ஈட்டி அந்த வருவாயில் மக்களுக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது ஒரு கொள்கை.

ஜெகதீஷ் பகவதி மற்றும் அர்விந்த் பனகரியா போன்ற பல ஆய்வாளர்கள் இந்தக் கருத்தைக் கூறுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் வளரும் வரை மக்கள் நலத் திட்டங்களுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்பது இதில் அடங்கியுள்ள கருத்து.

இதற்கு நேர்மாறான விவாதங்களை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் யேன்டிரேஸ் போன்ற ஆய்வாளர்கள் முன் வைத்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே இறுதியானது அல்ல; அதன் மூலம் மக்களுக்குக் கிடைத்த பலன் மக்களிடத்திலே அவை உருவாக்கிய தாக்கம் என்ன என்பதை ஆராய வேண்டும்.

குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களில் அரசின் தலையீடு இருக்க வேண்டும். மருத்துவம், கல்வி, உணவு போன்ற சமூகத்தின் உள்கட்டமைப்புகளில் அரசின் தலையீடு இருக்க வேண்டும் என்று அமர்த்தியா சென் போன்றவர்கள் வாதிட்டார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மோடியை பிரதமராக முன்னிறுத்துவதற்கு குஜராத்தை முன் மாதிரி வளர்ச்சி மாநிலமாக முன் வைத்து மோடி என்ற பிம்பத்தைக் கட்டமைத்தார்கள்.

தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பிரச்சாரத்தை அவர்களே கை கழுவி விட்டார்கள். இங்கே பேசிய தோழர் பிரகாஷ், குஜராத் வளர்ச்சியைப் பற்றி ஆய்வாளர் கலையரசன் எழுதிய கட்டுரையை முன் வைத்து உரிய தரவுகளுடன் ஆழமாகப் பேசினார். சொல்லப் போனால் ஊதிப் பெருக்கப்பட்டது தான் ‘குஜராத் மாடல்’ பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளி விவரங்களை மட்டுமே பேசுகின்றன.

ஆனால் அந்த வளர்ச்சி சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வறுமை வீதத்தைக் குறைத்தல்; மருத்துவம், கல்வி போன்ற சமூகத் திட்ட வளர்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளில் குஜராத்தைவிட தமிழகம் முன்னணியில் நிற்கிறது.

இதை தரவுகளுடன் பகவதி மற்றும் கனகரியாவின் ஆய்வுகள் நிறுவியுள்ளன. பெட்ரோலியம் சார்ந்த தொழில் வளர்ச்சி மட்டுமே குஜராத்தில் இருக்கிறது. அது வீழ்ந்தால் குஜராத் சரிந்து விடும்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட தொழிலை மட்டும் சார்ந்தது அல்ல; பல்வேறு தொழில் துறைகள் இங்கே இயங்குகின்றன. இது குறித்த விரிவான ஆய்வுகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

கேரளாவைப் பொறுத்தவரை தொழில் வளர்ச்சியே இல்லாத மாநிலம். ஏராளமான இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்குப் போய் விட் டார்கள். அவர்கள் வழியாக கேரளாவுக்கு வருகிற பணம், அங்கு பொருளாதார காரணியாக இருக்கிறது. கல்வியில் கேரளா வளர்ச்சி பெற்றிருக்கிறது.

ஆனால் மருத்துவ கட்டமைப்பு தமிழ் நாட்டைப் போல் அங்கு கிடையாது. கேரளாவின் கல்வி வளர்ச்சிக்கு கிறித்துவ மிஷினரிகளின் பங்கு மகத்தானது.

மற்றொன்று மேற்கு வங்க மாநிலம். 1977 முதல் 2011 வரை அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்றது. இம்மாநிலத்தின் ஒரே சிறப்பாகப் பேசப்படுவது கிராமப் புறங்களில் நடந்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள்.

ஆனாலும் வேளாண்மை, சேவைத் துறை, கட்டுமானம், தொழில்துறை ஆகியவற்றிலும் மாநில மொத்த உற்பத்தியிலும் தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலமாகவே மேற்கு வங்கும் இருப்பதை தரவுகளுடன் கள ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

முனைவர் ஆ. கலையரசன், தனது கட்டுரையில் த்வாஜ்பயான் பட்டாச்சாரிய (2010) மற்றும் பார்த்தா சாட்டர்ஜியின் (2004) ஆய்வுகளை முன் வைத்து இதை நிறுவுகிறார்.

மேற்கு வங்க கிராமங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதால் அவர்களின் கல்வி, பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகி, மூலதனமில்லாதவர்களாக்கப்பட்டனர் என்றும் ஏனைய கட்சி சாராத குடிமைச் சமூகத்துடன் அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக 1993-1994ஆம் ஆண்டிலிருந்து 2011-2012ஆம் ஆண்டு வரை கிராமப்புற பட்டியலினமக்களின் வறுமை நிலை தமிழ்நாட்டில் 42 சதவீதம் குறைந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 24.4 சதவீதமே குறைந்தது.

மேற்கு வங்கத்தில் பெரும் தொழில் நிறுவனங்களை நடத்துவோரில் வங்காளிகளைவிட பனியாக்களும் மேற்கு வங்க மாநிலத்தைச் சாராதவர்களுமே அதிகம். மண்டல் குழு மேற்கு வங்கத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆராயச் சென்றபோது ‘எங்கள் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவே கிடையாது.

அந்த இடஒதுக்கீடு தேவையில்லை’ என்ற கருத்தை முன் வைத்தது, அங்கே ஆட்சியிலிருந்த இடது முன்னணி ஆட்சி என்பதையும்நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் நடந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளை மதிப்பிட வேண்டும்.

இங்கே விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கப்படும் விலை இல்லா திட்டங்கள் வழியாக அடித்தட்டு மக்கள் சுயமரியாதை மீட்டெடுக்கப்படுவதையும் அவர்களுக்கு அதன் வழியாகக் கிடைக்கக்கூடிய அதிகாரங்களையும் மலிவாக மதிப்பிட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்குவதாக இப்போதும் சிலர் மேடைகளில் பேசி வருகிறார்கள்.

ஒரு வேளை சாப்பாட்டுக்காக ‘ஆண்டை’களிடமும் எஜமானர்களிடமும் கையேந்தி நிற்கும் அவலத்திலிருந்து விடுவித்தது - ரூபாய்க்கு 20 கிலோ அரிசி திட்டம் .உணவு - கல்வி - சுகாதாரம் மூன்றும் சமூக நீதியின் அடிப்படைக் கூறுகள்.

இதன் கட்டமைப்புகள் வலிமையாக்கப்பட்டு அதை மக்களுக்கு இலவசமாக வழங்கியது திராவிடக் கட்சிகள். ‘அனைவரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சி’ (Inclusive Social Policy) என்று இப்போது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதைத் தான் பெரியார் ‘வகுப்புவாரி உரிமை’ என்று கூறினார்.

சத்துணவுத் திட்டம், இலவசக் கல்வி, இலவச மருத்துவ சேவை, பெண்களுக்கான உரிமைத் திட்டங்கள் போன்ற பல்வேறு சமூக வளர்ச்சிக்கான திட்டங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அறிவியல் பூர்வமாக அலசும் பல ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் சென்னை நகரில் மட்டும் தொடங்கிய மதிய உணவுத் திட்டம், காமராசர் காலத்தில் தமிழகம் முழுதும் விரிவானது. எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக விரிவாகி, பிறகு மத்திய அரசால் ஏற்கப்பட்டு, அதற்குப் பிறகு உச்சநீதிமன்றமே எல்லா மாநிலங்களிலும் அமுல்படுத்த வலியுறுத்தியது. இது சமூகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்களின் பயன்களைப் பெற்ற மக்கள் இத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டியது அரசுக்குரிய கடமை என்று உணர்ந்து உரிமைகளைத் தட்டிக் கேட்கிறார்கள். ‘எஜமான் நினைத்தால் கொடுப்பார்; நம் கையிலா இருக்கிறது?’ என்ற அடிமை மன நிலைக்கு மக்கள் விடை கொடுத்து விட்டார்கள். இதுவே ஒரு ஜனநாயகத்துக்கான திறவுகோல்.

இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்காத ஆட்சிகளை மக்கள் மதிக்கத் தயாராக இல்லை.

உரிமைக்கும் தேவைக்கும் போராடக் கூடிய ஒரு சமூகமாக (Aspirational Society) தமிழர் சமூகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் இதையெல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

“சுயமரியாதை ஒரு கருத்தாக்கம் அல்ல; அது தொடர் பயணத்துக்கான வழி காட்டி.சுயமரியாதை சுற்று வட்டப் பாதைக்குப் போய் விட்டதால், அது சுழன்று கொண்டே இருக்கும். அதுதான் எதிர்கால அனைத்து திட்டங்களுக்குமான வழி காட்டி” என்று பேராசிரியர் ஜெயரஞ்சன் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். இதை பெரியார் வேறு மொழியில் கூறினார்.

“சுயமரியாதை என்கிற ஒரு இஞ்சினை பயன்படுத்தி சரியாக ஓடத் தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால் பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத் தோல் பட்டையை மாட்டி விட்டாலும் அது தானாகவே ஓடும்.” (குடிஅரசு, 17.2.1930)

விளிம்பு நிலை மக்களுக்கான அரசின் முதலீடுகள் தான் சமூக மாற்றத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்குமான உந்து விசைகளாக மாறி நிற்கின்றன. 

திராவிடர் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு சாதனைகளை சமூக -அரசியல் ஆய்வுகளுடன் பார்த்தால் இந்த முடிவுக்கு வர முடியும். ‘வெற்று முழக்கம்’, ‘வீண் ஆரவாரம்’ உள்ளீடற்ற உளறல்களால் திராவிடர் இயக்கத்தின்மீது சேற்றை வாரி வீசுவோருக்கு ஆய்வுபூர்வ மறுப்பை வழங்குகிறது இந்த நூல்.

இதன் உள்ளடக்கத்தை உள்வாங்கி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நூல் வெளி வந்த 15 நாட்களுக்குள் இந்த நூலின் முக்கியத்துவம் கருதி இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தைப் பாராட்ட வேண்டும்.

பெரியாரியலை காலத்தின் அறைகூவலுக்கு ஏற்ப சமூக அரசியல் பார்வையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற துடிப்பு மிக்க இளைஞர்களின் பாசறையாக நமது இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று இது. தமிழகத்திலே இந்நூலின் மீது நடக்கும் முதல் ஆய்வுக் கூட்டமும் இது தான்” என்றார் விடுதலை இராசேந்திரன்.

- விடுதலை இராசேந்திரன்