மண்மொழி, இது 31 வது இதழ். மண்மொழி தொடங்கி இந்த ஐந்தாண்டுகளில் அநியாயத்துக்குக் காலதாமதமாகி வரும் இதழ். இந்த 2010ஆம் ஆண்டு சன.-பிப். மாதமிட்டு வந்த இதழுக்குப் பிறகு இப்போது ஜூலை இறுதியில்தான் வருகிறது.

இடையில் இதை மே மாதம் கொண்டுவர உத்தேசித்திருந்தது, பிறகு செம்மொழி மாநாட்டிற்குள்ளாகவாவது கொண்டு வந்து விடலாம் என்று திட்டமிட்டது. மாநாடு முடிந்து ஜூலை முதல் வாரமாவது கொண்டுவர முனைந்தது, இடையில் வழக்கமான தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கப்பற்படை தாக்குதல், இதை எதிர்த்த போராட்டம், 2 நாள் சிறைவாசம் என அதையட்டி சில நாட்கள். இவையன்றி எப்போதுமே உடனின்று உழற்றும் பசி போல தொடர்ந்து வரும் நெருக்கடிகள் எல்லாமுமே சேர்ந்து, எதையுமே இயலாதது ஆக்கிவிட்டது.  அந்த இயலாமையை  வருணித்துக்  கொண்டிருப்பதில் பயனில்லை. கடந்த நாட்கள், கடந்த காலம், இழந்த வாய்ப்புகள், போனவை போனவைதான் என்பதால் இனி அடுத்து என்ன என்று யோசிப்பதே பொருத்தம் என்று படுகிறது.  இப்பபடி யோசிக்க மண்மொழி முதலாண்டு தெரிவித்த யோசனையையே மீண்டும் வலியுறுத்தத் தோன்றுகிறது.

மண்மொழி நல்ல தரமான இதழாக ஒவ்வொரு பிரச்சனையிலும் பரந்துபட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக வந்து கொண்டிருப்பதாகப் பலரும் பாராட்டுகிறார்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட இதழ்களை எங்கோ வாங்கிப் பார்த்து, படித்து தொலைபேசியில் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.  இப்படிப் புதிய புதிய அறிமுகங்களும் முகவரிகளும் தொலைபேசி எண்களும் மேலும் மேலும் சேர, இவற்றையெல்லாம் கட்டிக் காத்து இவர்களோடெல்லாம் முறையாகத் தொடர்பு வைத்து இவர்களுக்கெல்லாம் பொறுப்பாய் இதழ்கள் அனுப்பி எல்லோருடைய எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியுமா என்பது மனசுக்குள்ளேயே பெரும் கேள்வியாயும் உறுத்தலாயும் இருக்கிறது.

காரணம், அந்த அளவுக்கு மண்மொழியின் அகக் கட்டுமானம் மிகப் பலவீனமாய் இருக்கிறது. எப்படியோ இதழ் இந்த பலவீனத்தோடே வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மையே தவிர, இது நிலையாக வருவதற்கான எந்த உத்திரவாதமும் தற்போது  இல்லை.

எந்த ஒரு இதழுக்கும் இரு வகைக் கட்டுமானங்கள் மிகவும் முக்கியம். மண்மொழிக்கும் அதுவே. ஒன்று மண்மொழியின் 48 பக்கங்களையும் தரமான, மக்களுக்குத் தேவையான, மக்களைத் தெளிவுபடுத்தி விழிப்பூட்டுகிற பயனுள்ள கருத்துகள் செய்திகளாகப் பார்த்து, தொகுத்துத் தருவது. மற்றொன்று உரியவாறு அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. இதில் முதலாவது பணியை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றி விடலாம்.  அந்த நம்பிக்கை இருக்கிறது.  ஆகவே, அதில் ஒன்றும் பிரச்சினையில்லை.  ஆனால் இரண்டாவது பணிதான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.

ஒரு நிர்வாகம் என்பது அதற்கான அகக்கட்டுமானத்தோடு இருக்கவேண்டும். அது மண்மொழிக்கு இல்லை. இதைத் தீர்க்கும் முகமாகத்தான் மண்மொழியின் தொடக்க ஆண்டில் ஒரு ஆலோசனையை முன் வைத்தோம். அதாவது தமிழ் நாட்டில், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், வசதி படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தனித்தோ அல்லது கூட்டாகவோ ஒன்று சேர்ந்து, அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டால் முழு நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்ள விட்டுவிடலாம். பிறகு 48 பக்கம் தரமான கருத்துகளோடு நிறைவு செய்து தருவதுடன் ஆசிரியர் குழு தன் பணியை முடித்துக் கொள்ளும்.

இதற்கு பல யோசனைகள் இருக்கின்றன. ஒன்று, மண்மொழியின் நிர்வாகத்தைத் தனித்தோ கூட்டாகவோ ஒரு சிலர் பொறுப்பேற்று நடத்துவது, மற்றொன்று, இப்படி யாருக்கும் முன்வர வாய்க்கவில்லை என்றால், அவரவர்களும் இருக்கிற இடத்திலேயே இருந்து எதாவது ஒரு தொகையைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் வங்கியில் வைப்பு நிதியாகச் செலுத்தி, அதன் வட்டி, வருவாய் மட்டும் மாதந்தோறும் மண்மொழிக்குக் கிடைக்க ஏற்பாடு செய்வது.  இப்படிச் செய்தால் அவரவர் பணமும் அவரவர் பெயரில் வங்கியில் இருக்க, பணத்திற்கும் பாதுகாப்பாய்இருக்கும்.  மண்மொழிக்கும் உதவினாற்போல இருக்கும்.  வாய்ப்புள்ளவர்கள் இதுபற்றி யோசிக்குமாறும் அவரவர் வாய்ப்புக்கு தொலைபேசுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

எப்படியோ, மண்மொழி இதழ் அதிகம் இடைவெளி விட்டுப் போகாமல் தொடர்ந்து வர, அவரவரால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும்.  இதன்வழி தமிழ்நாட்டில் தமிழின விழிப்புக்கும், தமிழ்த்தேசிய எழுச்சிக்கும் அவரவரால் இயன்ற பங்கை ஆற்றவேண்டும் என்பதே நம் அவா.

நல்லது பார்ப்போம்                                                                           தோழமையுடன்

ஆசிரியர்.

Pin It