கடந்த காலங்களில் கம்யூனிஸ்டுகள், தங்கள் கட்சிக் கொள்கைகளைக் கடுமையாகப் பின்பற்றி வந்தார்கள். கம்யூனிஸ்டுகள் மதத்தை விலக்கி வைக்க வேண்டும்; அவர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் துர்க்கா பூசைக்கு பந்தல்களை அமைக்கிறார்கள். கேட்டால், இது மக்களோடு தொடர்பு கொள்ளக் கூடிய கலாச்சார நிகழ்ச்சிகள்.

மத நிகழ்ச்சிகளாக கருதக் கூடாது என்கிறார்கள். சரி; தொண்டர்களை, இதற்கு அனுமதிக்கலாம் என்று சமாதானம் கூறலாம். ஆனால், தலைவர்கள், கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறக்கூடாது அல்லவா? ஆனால், தலைவர்களும் மாறி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் மனைவி, புகழ் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபடுவது, பலரது புருவங்களை உயர்த்தியது.

நாடாளுமன்றத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தனது பேரனுக்கு ‘பூணூல்’ போடும் சடங்குக்கு அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கினார். அண்மையில் மேற்கு வங்க போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், தனக்கு கடவுள் பக்தி உண்டு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். “கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியதோடு நான் முதலில் ‘இந்து’, அடுத்து ஒரு ‘பிராமணன்’, மூன்றாவது தான் ‘கம்யூனிஸ்ட்’” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தகவல்: தி நியூ சண்டே எக்ஸ்பிரஸ்’ (செப்.24)

தொடர்ந்து மேற்கு வங்க மாநில அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி, ஜோதிபாசுவை கிருஷ்ண பகவானுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். கல்கத்தா வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் எச்சூரியிடம், இது பற்றி கேட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். கட்சியில் சேர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளை உருவாக்கியவன் மனிதனே என்பதை ஏற்க வேண்டும் என்கிறார். கட்சிகளில் மூத்த தலைவர்களாக இருந்து பிறகு அமைச்சர்களாகவும் வந்தவர்கள் இப்படி பேசலாமா? இதற்கு எச்சூரிகள் என்ன பதில் கூறப் போகிறார்கள்?

‘ஆணி வேர்’ - புலிகள் தயாரிப்பில் முதல் திரைப்படம்

விடுதலைப் புலிகளின் கலை-பண்பாட்டுப் பிரிவு - முதல் முறையாக மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. திரைப்படத்தின் பெயர் ‘ஆணி வேர்’. ரூ.7 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் லண்டனில் கடந்த வாரம் திரையிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் வெற்றி பெற கவிஞர் காசி. ஆனந்தன், வைரமுத்து, இயக்குனர் சீமான், வைகோ ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

வரப் பெற்றோம் இடஒதுக்கீடு: தொடரும் விவாதம்

இடஒதுக்கீட்டுக்கு எதிராக  பார்ப்பன சக்திகளிடமிருந்தும் “புரட்சிகர” சக்திகளிடமிருந்தும் முன் வைக்கப்படும் அத்தனை விவாதங்களுக்கும் சரியான சமூக கண்ணோட்டத்தில், விடை தரும் மிகச் சிறந்த நூல். “இடஒதுக்கீடு என்பது கல்வியை அறிவியலை சனநாயகப்படுத்துவது. இதன் வழி சமூகத்தின் ஆற்றல்களை எல்லாம் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாய்ச்சுவதற்கும், ஊனப்பட்டு ஒடுங்கிக் கிடக்கும் தகுதிகளையும், திறமைகளையும் வெளிக் கொணர்வதாகும். எனவே ‘தகுதி-திறமை வேண்டும் என்றால், இடஒதுக்கீடு வேண்டும்’ - என்று ‘தகுதி திறமை’ கூப்பாடு போடுவோருக்கு பதிலடி தந்துள்ளார் நூலாசிரியர். இடஒதுக்கீடு எதிர்ப்பு வாதங்களை முறியடிக்கும் போர்வாள்!

நூலாசிரியர் : நலங்கிள்ளி,
பக். 48; விலை: ரூ.10
வெளியீடு : சாளரம், 348 ஏ, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை,
சென்னை - 600 014.