தற்போது, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 77, 81, 82, 85 பிரிவுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்காகும். இந்தத் திருத்தங்களுக்காக அரசியல் சட்டப் பிரிவில் 16(4ஏ), 16(4பி) என்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்தத் திருத்தங்கள் என்ன கூறுகின்றன?

1995 ஆம் ஆண்டு 77வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மண்டல் பரிந்துரைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் - தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதைத் தடை செய்தது. இதை மாற்றியமைக்க வந்ததே இந்த சட்டத் திருத்தம். அரசியல் சட்டப் பிரிவில் 16ல் 4ஏ என்ற உறுப்பு இதற்காக சேர்க்கப்பட்டது.

81வது சட்டத்திருத்தம் நிரப்பப்படாத - தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணிகள் தொடர்பானது. ஒவ்வொரு ஆண்டும் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் போனால், அடுத்த ஆண்டுகளில், அந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அப்படி, இடங்களை சேர்த்து நிரப்பும்போது, இடஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கும். அந்த நிலையில் 50 சதவீதத்துக்குமேல் போகக் கூடாது என்ற உச்சவரம்பு, பொருந்தாது என்பதே இந்த சட்டத்திருத்தம். இதற்காக அரசில் சட்டப் பிரிவு 16(1)ல் (4பி) என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.

82வது சட்டத்திருத்தப்படி தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு ஆதரவாக, எந்த ஒரு தேர்விலும் தகுதிக்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப் பெண்ணைக் குறைக்க முடியும். இந்தத் திருத்தம் அரசியல் சட்டப்பிரிவு 335-ல் கொண்டு வரப்பட்டது.

85வது சட்டத்திருத்தம் என்பது, இடஒதுக்கீடு மூலம் பதவி உயர்வு பெறும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரின் பதவி மூப்பைப் பாதிக்காமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டத்தின் 16வது பிரிவில் இத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தங்களை எதிர்த்துத்தான் இப்போது வழக்கு தொடரப்பட்டது; திருத்தங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘கிரிமிலேயரை’ உள்ளே நுழைத்து விட்டது!

கேரளாவில் பார்ப்பனருக்கு தனி சுடுகாடு

20 ஆண்டுகளுக்கும் மேலாக - தமிழ், மலையாளத் திரைப்பட உலகில் கதாநாயகியிலிருந்து அம்மா பாத்திரம் வரையில் ஏற்று நடித்த நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோயால் மரணமடைந்தது வேதனைக்குரியதாகும். தனது சொத்துக்களைக் கூட அவர் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காக உயில் எழுதி வைத்துள்ளார். ஆனால், அவர் மறைவையொட்டி வந்துள்ள ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டும். கேரள அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல் திருவனந்தபுரத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள “பிராமண” சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாம். சுடுகாட்டிலும் இன்னும் பார்ப்பனர்களுக்கு தனி சுடுகாடு இருக்கிறது. இதுதான் வெட்கக் கேடு!

உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு
50 சதவீத உச்சவரம்பு தமிழகத்துக்கு பொருந்தாது

50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பத்தாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டதற்குப் பிறகு, வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல், விசாரணைக்கு வருகிறது. 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இதற்காக கடந்த 19 ஆம் தேதியன்று (50 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்த அதே நாளில்) தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக 31(சி) பிரிவின் கீழ், தமிழக சட்டமன்றம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டம் இயற்றியது. இச்சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு அரசியல் சட்டத்தில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம், 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாக, சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ‘வாய்ஸ்’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் இப்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு, தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

இந்த 69வது சட்டத்திருத்தத்தை 9வது அட்டவணையில் சேர்த்ததில் அரசியலமைப்பின் அடிப்படை எதுவும் மீறப்படவில்லை. அரசியல் சட்டம் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்திலும், குறுக்கிடவில்லை. எந்த ஒரு பிரச்சினையிலும், நீதிமன்றம் தலையிட்டு பரிசீலனை செய்வதற்கு, அரசியல் சட்டம் அனுமதித்திருந்தாலும், அந்த அனுமதிக்கும் வரம்பு உண்டு. எல்லையற்ற வரம்பை அரசியலமைப்பு நீதித்துறைக்கு வழங்கவில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற தேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே உணரப்பட்டது. 1927 ஆம் ஆண்டிலேயே அன்றைய ‘சென்னை மாகாணமாக’ இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு அமுலில் இருந்து வருகிறது. மண்டல் குழு தொடர்பான வழக்கிலேயே (இந்திரா சகானி வழக்கு) இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு 68 சதவீதமாகவும், 1990-ல் 69 சதவீதமாகவும் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் 88 சதவிதம் பேர் இருக்கிறார்கள்.

இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ‘மண்டல்’ வழக்கிலேயே சில தனித்தன்மையான சூழல்களில், இதற்கு விதிவிலக்கு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. “உச்சவரம்பு 50 சதவிதம் தான் என்பது விதியாக இருந்தாலும், அதே நேரத்தில், பல்வேறு கலாசாரப் பிரிவினரையும் மக்களையும் கொண்டுள்ள இந்த நாட்டில், இதனால் எழும் அசாதாரணமான சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு இதுபற்றி பரிசீலிக்கலாம். 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கவே கூடாது என்பது மறு பரிசீலனைக்கு உட்பட்டதுதான்” என்று அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்பது, அரசியல் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கும் நோக்கத்துக்கும் எதிரானது. மேல்தட்டு வர்க்கத்தினரும், செல்வாக்குள்ள பிரிவினரும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்கும் எந்த சட்டமும் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவதைத் தடைப்படுத்துவதாகும். இது அரசியல் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரானதாகும்.

சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் வாய்ப்புகள் வழங்கினால்தான் ஏற்கனவே ஒப்பீட்டளவில் மேல் நிலையில் இருக்கும் பிரிவினரோடு போட்டியிட முடியும்” என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தனது நிலையைத் தெளிவாக்கியுள்ளது.