விசாரணையில் நீதிபதி கேள்வி!

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், 15 லட்சம் ரூபாய் தங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என்றும், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அதன் ஆயுள் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்கறிஞர் துரைசாமி, இளங்கோ ஆகியோர் நேர் நின்றார்கள். (ஆஜர்) இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளு மாறு, (கி.வீரமணி சார்பில்) மனுதாக்கல் செய்திருந்தார் தஞ்சை இரத்தினகிரி.

“இரத்தினகிரி இந்த வழக்கில் ஏன் இணைத்துக் கொள்ள வேண்டும்? அவர் எந்த வகையில் பாதிக்கப்பட் டுள்ளார்?” என்று அதற்கு முன் நடந்த விசாரணையில் நீதிபதி கேட்டபோது, அடுத்த விசாரணை நாளில் இரத்தின கிரியின் வழக்கறிஞர், இதற்கு பதில் அளிப்பார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். ஆனால் 14 ஆம் தேதி விசாரணையில் ரத்தினகிரியின் வழக்கறிஞரான ராஜேந்திரன் வரவில்லை.

14 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த உடனேயே நீதிபதி, பெரியார் நூல்கள் ஏன் தேசியமயமாக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். வழக்கறிஞர் துரைசாமி கூறுகையில், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூற முடியாது, என்றார்.

பெரியார் நூல்கள் முழுமையாக இன்னும் வெளிவராமல் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது - பெரியார் கைப்பட எழுதிய நாட்குறிப்பே வெளிவரவில்லை. அதில் 60 ஆண்டுகால வரலாறு அடங்கியிருக்கிறது என்று வழக்கறிஞர் துரைசாமி கூறினார். தொடர்ந்து வழக்கில் வாதிட எவ்வளவு மணி நேரம் தேவைப்படும் என்று நீதிபதி கேட்டபோது, ஒரு மணி நேரம் போதும் என்று வழக்கறிஞர் துரைசாமி கூறினார். கி.வீரமணி சார்பில் நேர் தோன்றிய வழக்கறிஞர் வீரசேகரன், தங்களுக்கு 2 மணி நேரம் தேவை என்று கூறினார்.

நீதிபதி டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்து, வழக்கைத் தள்ளி வைத்தார்.