கொளுத்து தோழா கொளுத்து!
உளுத்துச் சிதையும் ஓட்டை அமைப்பை
உழைப்பைச் சுரண்டும் திருட்டுத் தனத்தைக்
கொளுத்து தோழா கொளுத்து!
மொய்லி அறிக்கையைத் தீயில் போடு
முட்டாள்களின் பொய் வாயை மூடு
நெய்யும் சோறும் தின்றும் ‘எல்லாம்
நேக்கே’ என்பான்; வை,நீ சூடு
இடஒதுக்கீடு பிச்சை யல்ல
எங்கள் உரிமை என்று முழக்கு
படமெடுத் தாடும் பாம்புகள் தம்மின்
பல்லைப் பிடுங்கும் போரைத் தொடங்கு
உச்ச நீதி மன்றம் என்பதே
உச்சிக் குடுமிகள் மன்றம் ஆனதா?
மிச்சம் மீதி இன்றி மேயவே
மேற்படி யாரின் வாய்க்குப் போனதா?
மண்டல் வந்து ஓங்கி அடித்தும்
மண்டை வீக்கம் குறைய வில்லை
சிண்டு முடியும் ‘இந்து’ ‘தினமலர்’
செய் குறும்புக்கு அளவே இல்லை
மனுவைக் கொண்டு சாதி பிரித்தான்
மக்களில் மேல்கீழ் பிளவு நுழைத்தான்
தினவெடுத்தே கொழுத்துத் திரிகிறான்
செருப்புத் துடைத்தே இழிவு செய்கிறான்
அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார்
அரிய உழைப்பால் விளைந்த உரிமை
புண்ணின் நோவு நமக்கே; அதனைப்
புரிந்து கொள்ளுமோ அந்த எருமை
பூவாகும் முன் போட்டு மிதிக்கிறான்
பொருளாதாரப் பூட்டை நுழைக்கிறான்
சாவா வாழ்வா பார்ப்போம் தோழா
சாம்பலில் இருந்தும் உயிர்ப்போம் தோழா
சட்டம் நீதி தடுத்தால் தகர்ப்போம்
சனாதனத்தின் கழுத்தை நெரிப்போம்
குட்டக் குட்டக் குனிதல் இல்லை
குருதி சிந்திடும் போர்தான் எல்லை.