‘நாங்கள் கண்ட’ பெரியார்

‘முகம்’ இதழில் தொடர்ந்து வெளி வந்த தந்தை பெரியாரைப் பற்றிய உரைநடைச் சித்திரம் நூல் வடிவம் பெற்றுள்ளது. 1) நான் கண்ட பெரியார், 2) நாங்கள் கண்ட பெரியார் 3) வரலாற்றில் பெரியார் என மூன்று தலைப்புகளில் தொடராக வெளிவந்தபோது, வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. தந்தை பெரியார் பற்றி தாங்கள் அறிந்திருந்த செய்திகளைப் பலரும் ‘நாங்கள் கண்ட பெரியாரில்’ பதிவு செய்துள்ளனர். வெளிச்சத்துக்கு வராத பல சம்பவங்கள் வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. இளம் தலைமுறையினரிடம் பெரியாரியலைக் கொண்டு செல்வதற்கான மிகச் சிறப்பான முயற்சியை ‘முகம்’ ஆசிரியர் முகம் மாமணி செய்து முடித்திருக்கிறார்.

பெரியாரின் வரலாற்றை யாராவது காவியமாக எழுத மாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிலையில் முடிந்த அளவு நாமே செய்தால் என்ன என்று கருதி, இந்த முயற்சியில் இறங்கியதாக ‘முகம்’ மாமணி, தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அடக்கத்துடன் அவர் இப்படிக் கூறினாலும், இந்த நூலின் உள்ளடக்கம் மகத்தானது. சுவைபட கதை போல பெரியாரின் வரலாறு, சாதனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். பெரியார் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும், கட்டாயமாக இருக்க வேண்டிய நூல்.

தொகுப்பாசிரியர்; முகம் ‘மாமணி’,
பக்கம்.224 விலை: ரூ.75
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்,
31, சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை - 600 108.

‘ஈழம்’

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை ஈழப் பிரச்சினை பற்றி ‘நந்தன்’, ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, ‘தமிழ் ஓசை’ பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் ‘ஈழம்’ எனும் தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. நவம்பர் 12 ஆம் தேதி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் எழுதிய கட்டுரை வரை இதில் இடம் பெற்றுள்ளது. சிங்களப் பேரினவாத அரசியலையும் தமிழர்கள் மீதான அடக்கு முறைகளையும், போராளிகளின் போராட்ட நியாயங்களையும் விளக்கக்கூடிய 18 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

சிக்கலான பிரச்சினைகளையும் எளிமையாக்கி, உள்ளத்தில் பதிய வைக்கக் கூடிய, எழுத்தாற்றலைக் கொண்டவர் சோலை. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிடும் அடக்கு முறையாளர்களின் கோர முகங்களை ஏராளமான தகவல்களோடு, கட்டுரைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. குறிப்பாக - பார்ப்பனர்கள் நடத்தும் சில ஆங்கில நாளேடுகளின் தமிழின விரோதப் போக்கை மிக நன்றாகவே, பல கட்டுரைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச் சிறந்த நூல்.

வெளியீடு: தணல் பதிப்பகம்,
39/13, ஷேக் தாவூது தெரு,
இராயப்பேட்டை,
சென்னை - 14. பக். 95.
விலை ரூ.25/-