(தமிழகக் காங்கிரஸ் கட்சி செயலாளரும் - சிறந்த பேச்சாளர் - சிந்தனையாளருமான - தோழர் தமிழருவி மணியன் ‘புதிய பார்வை’ (நவம்.1 - 15) இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து....)

பெரியாரை தவிர்த்துவிட்டு ஒருவன் தமிழ்நாட்டில் சமூக நலன் பற்றிச் சிந்திக்கிறான் என்றால் இவனைப் போல் ஒரு போலி இருக்க முடியாது. நான் அப்படித்தான் நினைக்கிறேன். எத்தனையோ பேர் சமூக சிந்தனையாளர்களாகப் புறப்பட்டிருக்கலாம். 94 வயதில் அவரால் சரிவர இயங்க முடியாத நிலையிலும் மூத்திரத்தைக் கட்டுப்படுத்துகிற ஆற்றலைக்கூட இழந்துவிட்ட நிலையிலும் ஒரு பொழுதும் ஓயாமல் வீதி வீதியாகச் சென்று பேசி சமூகத்திற்குத் தொண்டாற்றிய தலைவனை உலகம் முழுவதும் தேடினாலும் பார்க்க முடியாது. ஆனால் தேசியக் கட்சியில் உள்ள பலருக்கு வரலாறு தெரியாது.

1919 லிருந்து 1924 வரைக்கும் இதே தேசிய இயக்கத்தை அவர் எப்படி வளர்த்தெடுத்தார் என்கிற கடந்த காலம் தெரியாது. கதர்ச் சட்டைக்காரர்கள் பலருக்குத் தெரியாது. அவர்களுக்கு இதைத் தெரியப்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன். அதனால் அவரைப் பற்றிப் பேசுகிறேன்.

அடித்தள மக்களுக்காக அவர் பாடுபடவில்லை என்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கச் சிலர் இப்போது முயற்சிக்கிறார்கள். அது உடைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலித் மக்களுக்காக அவர் செயல்படவில்லை என்றும், பிற்படுத்தப்பட்டவர்களிலும் மேல் தட்டில் இருந்தவர்களுக்குத்தான் அவர் அனுசரணையாக இருந்தார் என்று சொல்வது மிக மோசமான குற்றச்சாட்டு. இதைவிட யாரும் பெரியாரைக் கொச்சைப்படுத்திவிட முடியாது. அவர் மனிதனை மனிதனாகப் பார்த்தார். ‘கடவுளை மற மனிதனை நினை’ என்பதுதான் அவரது அடிப்படை முழக்கமாக இருந்தது. கீழினும் கீழாக எவன் வீழ்ந்து கிடக்கின்றானோ, அவனைக் கைதூக்கி விடுவதற்காகப் புறப்பட்டவர்தான் பெரியார்.

கேள்வி : இதைச் சொல்வதே சிலருக்கு ‘அலர்ஜி’யை உண்டு பண்ணிவிடுமே?

அவர்கள் பெரியாரை கடவுள் மறுப்பாளராகவும், ‘பிராமண’ எதிர்ப்பாளராகவும் மட்டுமே அறிந்து வைத்திருப்பதனால் கடவுள் நம்பிக்கையில் ஈடுபாடு கொண்ட காங்கிரஸ்காரர்கள் பெரியாரைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்று நினைக்கிறார்கள். ‘பிராமணர்கள்’ மாதிரியான மேல்தட்டுத் சாதிதான் தங்களுக்கு ஓட்டுப் போடுகிறது. இதை ஏன் பெரியாரின் பெயரைச் சொல்லிக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி அரசியல் ரீதியாக சுயநலம் சார்ந்து சிந்திக்கிற காங்கிரஸ்காரர்கள் பெரியாரைப் பற்றிப் பேச மாட்டார்கள். காங்கிரசில் உள்ள பெருவாரியான தொண்டர்களுக்குப் பெரியாரைத் தெரியவில்லை. தெரியப்படுத்தப்படவில்லை. அதனால் தான் தமிழகம் முழுவதும் அவருடைய வரலாற்றைப் பற்றிப் பேசுகிறேன். ஜீவானந்தம் பற்றிப் பேசுகிறேன்.

ஜீவாவை ஒரு கம்யூனிஸ்ட் என்கிற வட்டத்திற்குள் மட்டும் நான் பார்க்கவில்லை. அதுபோல பெரியாரை ஒரு திராவிட இயக்கத்துக்காரராக மட்டும் நான் பார்க்கவில்லை. மனித குலத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஞானிகளாய், முனிவர்களாய்ப் பார்க்கிறேன். சுயநலம் துறந்து பொதுநலத்திற்காகப் புறப்படுகிறவன் யாராக இருந்தாலும், அவன் முனிவன்தான் இல்லையென்றால் திரு.வி.க. காரல்மார்க்ஸைப் போய் ஒரு முனிவன் என்று சொல்வாரா? இங்குள்ள இந்தியத் தத்துவச் சாயலோடு இந்தச் சொல்லைப் பார்க்கக் கூடாது. சுயநலம் துறந்த முனிவர்களின் வரிசையில்தான் காமராஜர், பெரியார், ஜீவானந்தம் அனைவரையும் பார்க்கிறேன். அதனாலேயே அவர்களைப் பற்றிப் பேசுகிறேன்.

பெரியாரைப் பற்றி நான் பேசுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் இன்றைக்கிருக்கிற சாதியக் கட்டுமானத்திலிருந்து தமிழகம் வெளியே வரவேண்டும் என்று முனைந்து செயல்பட்ட விதம், அதற்காக மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்கிற அவரது முற்போக்கான எண்ணம் இதைவிட சுயமரியாதையோடு வாழ்வதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அவருக்கிருந்த பிடிவாதம்.

பொதுவாழ்க்கைக்கு வருகிறவன் தன்னுடைய காசை வேண்டுமானால் இழக்கலாமே ஒழிய பொதுச் சொத்திலிருந்து ஒரு காசைக்கூட தன் வீட்டிற்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதை வாழ்வு நெறியாக வாழ்ந்து காட்டிய மனிதர் பெரியார். இப்படி அவருடைய பொது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த பண்பிலிருந்து ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் ஒவ்வொரு தமிழனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவற்றை ஒலிப் பேழைகளாக்கி முடிந்தவரை பலரிடம் கொண்டு செல்கிறேன்.

சமீபத்தில் பெரியார் திடல் அரங்கத்தில் சென்று பெரியாரைப் பற்றிப் பேசியபோது வந்திருந்த சில காங்கிரஸ்காரர்கள் பெரியாரைப் பற்றிக் கூடுதலாகப் பேசியதாக முகம் சுளித்தார்கள். அதையொட்டி சத்தியமூர்த்திபவனிடம் இலேசான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அத்தகைய விமர்சனங்களைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆதாயங்களை அடைவதற்காக, பதவிகளைப் பெறுவதற்காக அரசியலுக்கு நான் வரவில்லை. சில கொள்கைகளை, லட்சியங்களை மனதில் அடிப்படையாகக் கொண்டு அரசியலுக்கு வந்தவன் நான் எனக்குள்ளேயே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வது இதைத் தான்.

பெரியார் என்பவர் கட்சிக்காரரில்லை. கொள்கைக்காரர். ஜீவா என்பவர் கட்சிக்காரரில்லை, கொள்கைக்காரர். அதுபோல இந்த மணியனும் ஒரு காட்சிக்காரனில்லை, கொள்கைக்காரன்.