கன்னட ராஜ்யோத்சவ தினத்தையொட்டி, கர்நாடக மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களிலும் கன்னடமயமாக்கும் திட்டம் முதல் முறையாக அமுல்படுத்தப்படுகிறது. இனி கைது ஆணை, நீதிமன்ற அழைப்பு போன்றவை கன்னடத்தில்தான் இருக்கும் என்று சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார். மொழிவாரி மாநிலங்களாக மத்திய அரசு பிரித்து கொடுத்த நவம்பர் 1 ஆம் தேதியை, மாநில அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. மாநில மக்களின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாநிலத்தில் எல்லா நீதிமன்றங்களிலும் கன்னடத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாள் முதல் நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாம் கன்னடத்தில் தான் இருக்கும். கைது ஆணை, நீதிமன்ற அழைப்பு உட்பட 151 ஆவணங்கள் இனி கன்னடத்தில் கொடுக்கப்படும்.

இதுவரை நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஆங்கிலமாக இருந்து வந்தது. தற்போது இது மொழி மாற்றம் செய்யப்பட்டு கன்னடமாக்கப்பட்டுள்ளது. இந்த மொழி மாற்றத்தை சட்டத்துறையும், வழக்கறிஞர்களின் கன்னட ஜாக்ருத்தி சங்கமும் இணைந்து செயல்படுத்தியுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 500 சட்ட பிரிவுகளும் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதை மொழி பெயர்க்க குறைந்தது நான்கு மாதங்கள் தேவைப்படும். இந்த குழுவுக்கு தலைவராக கன்னட எழுத்தாளர் கோ.ரு.சென்னபசப்பாவும், துணைத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி என்.எஸ்.சங்கொலியும் நியமனம் செய்ப்பட்டுள்ளனர்.

தமிழின எதிர்ப்புக்கு ‘விருது’

இலங்கை அரசின் மிக உயர்ந்த விருது ‘சிறீலங்கா ரத்னா’. இந்த விருதைப் பெறுவதற்கு இலங்கைக் குடிமகன் அல்லாத ஒருவரை - சிறீலங்காவின் சிங்களப் பேரினவாத அரசு தேர்வு செய்து கடந்த 14 ஆம் தேதி கொழும்பில் வழங்கியிருக்கிறது. சிறீலங்கா அரசின் இந்த விருதுக்குரியவர் யார் தெரியுமா? அவர் தான் ‘இந்து’ நாளேட்டின் தலைமை ஆசிரியர் என்.ராம்! ‘பத்திரிகைத் துறையில் அவரது தன்னிகரற்ற திறமை; குறிப்பாக சிறீலங்காவுக்கு அவர் ஆற்றிய, மிகவும் தனித்தன்மையான பெருமைக்குரிய சேவை’க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாம்!

ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடுநிலை பிறழ்ந்து, ‘இந்து’ ஏடு கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விட்டதற்குக் கிடைத்துள்ள பரிசு இது. “இவர் தான் சிறிலங்காவின் செல்லப் பிள்ளை. தமிழர்களுக்கு துரோகி” என்று தெளிவாக அடையாளம் காட்டிய சந்திரிகாவுக்கும், அந்தத் தகுதிக்கான முழு உரிமையும் தனக்கே உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள ‘இந்து’ ஏட்டின் ஆசிரியருக்கும், உண்மையை ஒப்புக் கொண்டமைக்காக ஒரு வகையில் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்! தன்மானத் தமிழர்கள், எதிரி யார் நண்பன் யார் என்பதை இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் நல்லது!

‘விதவை’களே இல்லாத கிராமம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது நெய்யமலை. இந்த மலையின் உச்சியில் நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலாங்கடை என மூன்று கிராமங்கள் உள்ளன. சுமார் 2500 பழங்குடியின மக்கள் இங்கு வாழ்கின்றனர். சாலை, மின்சாரம், மருத்துவம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமங்கள் இவை. நாகரிகத்தில் அதிகம் திளைப் பவர்கள் என்று கூறிக் கொள்ளும் நகர்ப்புற மக்களில் பலர் பொருளற்ற சடங்கு, சம்பிரதாயங்களில் மூழ்கி மனித இன முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்துப் போடும் இக்காலத்தில், அந்த மூன்று கிராம மக்களும் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு சவுக்கடி கொடுத்து மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார்கள்.

இக்கிராமங்களைச் சார்ந்த இனப் பெண்களின் கணவன் இறந்து விட்டால், அக்கிராமத்திலுள்ள கோயிலில் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். கணவனை இழந்த அப்பெண்ணை அழைத்து, மறுமணம் செய்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை விளக்கிக் கூறுகிறார்கள். அப்பெண்ணுக்குப் பொருத்தமான கணவர் கிடைத்தவுடன், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி மறுமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் இந்த கிராமங்களில் கணவனை இழந்த பெண்களே இருப்பது இல்லை. இயற்கையோடு இணைந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் இவர்கள் இயற்கையிலேயே மனித நேயம் அதிகமாக இருக்கிறது. இந்தச் செய்தி படித்த, நாகரிக முட்டாள்களுக்கு உரைத்தால் நன்மையே!

சாதிகளைக் கடந்து...

பழங்கால மன்னராட்சியில் மிக முக்கிய பங்கான, தகவல் தொடர்பை செய்தவர்கள் ‘கிராம தலையேறிகள்’ என்றழைக்கப்பட்டவர்கள். இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். இவர்களின் பணி, வெள்ள அபாயம், இயற்கை சீற்றம், அரசின் உதவிகள், கட்டளைகள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட தகவல்களை அரசின் உத்தரவுப்படி கிராம மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது தான்.

இப்படி தகவல் கொடுத்து வந்த ஒரு முதியவரின் சிலையை தாங்கள் வழிபடும் கோயில் வளாகத்திற்குள் நெடுங்காலம் முன்பாக வைத்து பெருமைப்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் மத்தூர் மற்றும் தலைவாசலை அடுத்த ஊனத்தூர் கிராம மக்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் பாப்பாப் பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்கச்சி ஏந்தல், நாட்டார் மங்கலம் போன்ற சாதி வெறியர்களுக்கு மத்தியில் இக்கிராம மக்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டுப் பாட நூல்களில் - காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ற உண்மையை எடுத்துச் சொன்னதற்காக, ஆர்.எஸ்.எஸ். காரர்கள், ‘துள்ளிக்’ குதித்தார்கள். இல.கணேசன், பா.ஜ.க.வினரை சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவரான மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மிரட்டலுக்கு தமிழக அரசின் கல்வித் துறை பணிந்து விட்டது. கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ற வார்த்தையை பாடநூலிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. பொய்களை வரலாற்றுப் பாடங்களாக்கிய இந்துத்துவ கும்பல்  இப்போது உண்மைகளையும் இருட்டடிப்பு செய்யத் துடிக்கிறது.

குத்தூசி குருசாமி எழுதியது போல், இவர்கள் ‘காந்தியை பகவான் கோட்சே அவதாரம் எடுத்து வந்து, தனது பாதாரவிந்தங்களுக்கு அழைத்துக் கொண்டார்’ என்று எதிர்காலத்தில், பிரச்சாரம் செய்தாலும் வியப்பில்லை; தமிழகக் கல்வித் துறையின் இந்த பின்வாங்கலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பிள்ளை பெறும் எந்திரமா?

பெண்களை பிள்ளைப் பெறும் எந்திரங்களாக மாற்றுவதை எதிர்த்து - போர்க்குரல் கொடுத்தவர் பெரியார். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக்கூட, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் தான் பெரியார் ஆதரித்தார். பெண்கள் கர்ப்பப்பைகளையே அகற்றிவிட வேண்டும்; பெண்களின் அடிமைத்தனத்துக்கு அவர்கள் பிள்ளை பெறும் மறு உற்பத்தியை செய்வதும் ஒரு முக்கிய காரணம் என்றார் பெரியார். இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனம், டெல்லியில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசுகையில், இந்துக்களின் மக்கள் தொகைக் குறைந்து வருவது பற்றிக் ‘கசிந்துருகி’ ஒரு கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு இந்துப் பெண்ணும் குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும் என்பது தான். இவரது ‘அரிய’ ஆலோசனை. இவர்களின் “இந்து கலாச்சார தேசியத்துக்கான” உற்பத்திப் பொருள்களாக பெண்களை மாற்றத் துடிக்கிறது இந்தக் கூட்டம். குஜராத்தில - இசுலாமிய கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து - சிசுவை நெருப்பில் போட்டக் கூட்டம், இப்போது அதே இனவெறியோடு பெண்களை பிள்ளை பெறும் எந்திரமாக அறிவுரை கூறுகிறது.

வோல்க்கர் குழு அறிக்கை

1990 ஆம் ஆண்டு ஈராக், குவைத் நாட்டை ஆக்கிரமித்ததற்காக, அமெரிக்க நிர்ப்பந்தத்தின் பேரில் அய்.நா. ஈராக் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. இதனால், ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள், மருந்து இல்லாமல், மடிந்தன. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈராக் மக்கள் மாண்டனர். இந்த நிலையில் ஈராக் நாட்டிலிருந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து, அதற்கு பதிலாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரு திட்டத்தை அய்.நா. உருவாக்கி, இந்த ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டை தன் வசமே வைத்துக் கொண்டது.

ஏற்றுமதி செய்யப்பட்ட ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் விலையும் மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் - அதிபராக இருந்த சதாம் உசேன், தனது நாட்டின் பொருளாதார சீரழிவை தடுத்து நிறுத்த, தனியாகக் கூடுதல் வரிகளை விதித்து அரசு செலவுக்குப் பயன்படுத்தினார். பொருளாதாரத் தடையை நியாயப்படுத்துகிறவர்கள், இதை லஞ்சம் என்கிறார்கள். அதைத் தான் வோல்க்கர் குழுவும் கூறுகிறது. தனது நாட்டின் உற்பத்திப் பொருளுக்கு, அந்த நாடு வரி விதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? நட்வர்சிங், அப்போது எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத் துறை செயலாளர், ஈராக் மீதான பொருளாதாரத் தடையை எதிர்த்ததோடு, 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் குழுவோடு ஈராக்குக்கு சென்றார்.

வோல்க்கர் ஒரு அமெரிக்கர். ஈராக் நாட்டில் இப்போது நடப்பது அமெரிக்காவின் ‘எடுபிடி’ ஆட்சி. அந்த அரசு வழங்கிய ஆவணங்களிலிருந்து தான் காங்கிரசும், நட்வர்சிங்கும் இப்போது “குற்றவாளிகளாக” சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஆராய வீரேந்திர தயாள் தலைமையில் ஒரு குழுவும் (இவர் அய்.நா.வின் முள்ளாள் அதிகாரி) நீதிபதி ஆர்.எஸ்.பதக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என்று, சோனியாவும் அறிவித்துள்ளார்.

அய்.நா.வின் கண்காணிப்புக்கு உட்படாமல், ஈராக் அதிபர் சதாம் உசேன், துருக்கி, ஜோர்டான், சிரியா உட்படப் பல நாடுகளில் உள்ள தனி நிறுவனங்களுக்கு தனது நாட்டின் எண்ணெயை விற்றுள்ளார். அந்தப் பட்டியலில் தான் நட்வர்சிங், காங்கிரஸ் கட்சியின் பெயர்கள் இருப்பதாக, அமெரிக்காவின் ‘ஊதுகுழலாக’ இருக்கும் ஈராக் அரசு, வோல்க்கர் குழுவிடம் கூறியுள்ளது. இது உண்மை தானா என்ற விளக்கத்தைக்கூட, நட்வர்சிங்கிடமோ, காங்கிரசிடமோ கேட்டு உறுதிப்படுத்தாமலே, வோல்க்கர் குழு, தன்னிச்சையாக இந்தப் பெயர்களைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துவிட்டது. ரஷ்யா உட்பட வோல்கர் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட பல நாடுகள், இந்தக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளிவிட்டனர். பா.ஜ.க. இதை வைத்து அரசியல் நடத்தி, தனது அமெரிக்க விசுவாசத்தைக் காட்டத் துடிக்கிறது. இதுவே வோல்க்கர் அறிக்கையின் சுருக்கமான பின்னணி.

அப்பாசாமியும் பாண்டாவும்

திருமணமாகி - இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகிவிட்ட - அப்பாசாமி, தந்தைக்கும், மனைவிக்கும் பயந்தவர். நண்பர்கள் சேர்க்கையால் வேலைக்குப் போகாமல், ஊர் சுற்றுவது, சீட்டாடுவது, குடித்துக் கும்மாளமடிப்பது என்று பொறுப்பற்றவராக செயல்பட்டார். தந்தை, குடும்பத்தின் கண்டிப்பினால், திடீர் என்று அய்யப்பன் பக்தராகி, ஆன்மீகத்தின் உச்சத்துக்குப் போய், குடும்பம், குழந்தைகளைத் ‘துறந்து’ பக்திக் கிறுக்காகி விடுகிறார். இபபடி வாழ்வதைவிட, ஊர் சுற்றிவிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்த அப்பாசாமி எவ்வளவோ மேல் என்று, குடும்பத்தினர் உணருகிறார்கள்.

இயக்குனர் தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘சிதம்பரத்தில் அப்பாசாமி’  தீவிரமான பக்தியும், பொறுப்பற்ற வாழ்க்கையே என்ற செய்தியை சமூகத்துக்கு அழகாகச் சொல்லியிருக்கிறது. இதே போல், உ.பி. மாநிலத்தில், காவல்துறை அய்.ஜி.யாக இருக்கும் பாண்டே, கிருஷ்ணனின் சீடராக மாறி - தன்னை கிருஷ்ணனின் மீது காதல் கொண்ட ‘ராதா’ என்று கூறிக் கொண்டு, தன்னைப் பெண்ணைப் போல் அலங்காரம் செய்யத் துவங்கி விட்டார். அலுவலகத்தில் காக்கி உடை, வெளியே வந்தால் பெண்கள் உடை! பாண்டாவின் மனைவி - இந்த ‘கிருஷ்ண பக்தரை’ எதிர்த்து நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர்ந்துவிட்டார். இவர் உண்மையிலே “கிருஷ்ண பகவானாகவே” பல பெண்களுடன் வாழ்ந்து கொண்டு, ஊரை ஏமாற்ற பெண் வேடம் போடுகிறார் என்பது, மனைவியின் குற்றச்சாட்டு. மாநில காவல்துறை பாண்டாவை - மனநோய் மருத்துவரிடம் அனுப்பி அவரை பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

பக்தி மூடத்தனத்துக்குக்கூட, பகுத்தறிவு என்ற கடிவாளம் தேவைப்படுகிறது! முட்டாள்தனத்தைப் பின்பற்றுவதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்று பக்தியில் நம்பிக்கையுள்ளவர்களேகூட இடித்துக் கூற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பக்தி மூடத் தனங்களில் சிக்கிக் கொள்ளாத பகுத்தறிவுவாதிக்கு - இப்படிக் கடிவாளம் தேவை இல்லை. காரணம் பகுத்தறிவுச் சிந்தனை அவனைப் பக்குவப்படுத்தி, சரியான வாழ்க்கைப் பாதையை தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

குஷ்புவும் – சானியாவும்

குஷ்புவின் கருத்தை ஆதரித்துப் பேசிய டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கு எதிராக - ஆர்.எஸ்.எஸ். காரர்கள், போர்க்கொடி உயர்த்தி, சானியாவின் உருவப் படங்களை எரிக்கத் துவங்கி விட்டனர். பிறகு சானியாவே தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். தமிழ்நாட்டு ‘கலாச்சாரக் காவலர்களும்’ ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இப்போது ஒரே தளத்தில் கை கோர்ப்பதை கவனிக்க வேண்டும். பாரம்பர்யம், கலாச்சாரப் பெருமைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றத் துவங்கினால், அது, மீண்டும் அடிமைத் தனத்துக்கே கொண்டு செல்லும் என்பதைப் பெரியார் துணிவுடன் சுட்டிக்காட்டி எச்சரித்தார். அறிவியல் கண்ணோட்ட மற்ற மொழி உணர்வும் அந்த திசைக்கே இழுத்துச் செல்லும் என்பதையும் பெரியார் சுட்டிக்காட்டியது எவ்வளவு சரியான உண்மை என்பது இப்போது புரியும்.

‘குஷ்பு’ தனிமைப்படுத்தப்பட்டு - வழக்கு மேல் வழக்கு போட்டு, இழுத்தடித்து, அவர் நீதிமன்றம் வந்த போதுகூட, முட்டைகளையும், செருப்புகளையும், கார் மீது வீசுமளவுக்கு, தமிழகத்தில் ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது’ கொடூரமான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. மாற்றுக் கருத்துகளுக்கே தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்குவது, மிகவும் ஆபத்தானது.

‘கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது’ என்று பார்ப்பனர்கள் கூறி வேதத்தை எதிர்த்தவர்களை எல்லாம் ‘நாத்திகர்’ என்று கூறி, படுகொலைகளை செய்தார்கள். அவைகளை எல்லாம் கேள்விக்குள்ளாக்கித்தான், சமூக மாற்றத்துக்கான இயக்கங்கள், வளரத் தொடங்கின என்ற வரலாறுகளை மறந்துவிடக் கூடாது. பெண்கள் அமைப்புகள் அனைத்துமே, குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் துவங்கியிருப்பதும், இடதுசாரி இயக்கங்களும், ‘கலாச்சாரக் காவலர்களுக்கு’ எதிராகக் குரல் கொடுத்திருப்பதும், ஆறுதலைத் தருகின்றன.