80 மீட்டர் நீளமுள்ள சிறீலங்காவின் ஆயுதக் கப்பலான ‘எம்.வி. இன்விசிபில்’ என்ற கப்பலை சனிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தகர்த்து மூழ்கடித்துள்ளனர். இந்தக் கப்பல் முழுதும் சிறீலங்கா ராணுவத்துக்கான ஆயுதங்கள் இருந்தன. கொழும்பிலிருந்து காங்கேசன் துறைக்கும், அங்கிருந்து கொழும்புக்கும் தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் இந்தக் கப்பல், திரிகோணமலை துறைமுகத்தில் அஸ்ரப் துரை எனுமிடத்தில் நங்கூரம் அடித்து நிறுத்தப்பட்டிருந்த 2 மணி நேரத்தில் நீரில் மூழ்கியது.

திடீரென்று குண்டு வெடிப்பு சத்தம் கேட்டவுடன், திரிகோணமலை துறைமுகத்தில் நின்றிருந்த படைப் பிரிவினர், விடுதலைப் புலிகள் விமானத்திலிருந்து குண்டு வீசுவதாகக் கருதி, வானத்தை நோக்கி, தங்கள் துப்பாக்கிகளைத் திருப்பினர். அதன் பிறகுதான், கப்பல் தகர்க்கப்பட்ட செய்தி அவர்களுக்கு தெரிய வந்தது. கொழும்பிலிருந்து வெளி வரும் ‘லக்பீம்’ என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் இந்தக் கப்பல் தகர்ப்பு சிறீலங்கா ராணுவத்தை கடும் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக கூறியுள்ளது.

கடலுக்கு அடியில் வெடி வைத்து தகர்த்து, கப்பலை மூழ்கடிக்கும் கடல் போர்முறை இது வரை, எங்கும் நடக்காதது. இது எப்படி முடிகிறது என்று, சிறீலங்கா ராணுவம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி, பி.438 என்ற இலங்கையின் டோராக் கப்பலை, இதேபோல் தான் விடுதலைப்புலிகளால் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. அப்போது கடலுக்கு அடியில் காந்த சக்தி மிகுந்த வெடிகுண்டு துகள்கள் கண்டெடுக்கப்பட்டன.

எனவே காந்தத்தைப் பயன்படுத்திய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று, சிறீலங்கா ராணுவம் முடிவு செய்தது. இது தவிர கடலுக்கடியில் செல்லக்கூடிய ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தி, கடற்புலிகள் அந்த ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை ஏந்திக் கொண்டு, கடலுக்கடியில் பயணம் செய்து இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக, சிறீலங்கா ராணுவம் கருதுகிறது என்று, அந்த ஏடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் எடை குறைவான இந்த ஸ்கூட்டர்கள் கடலுக்கடியில் மிக வேகமாக செல்லக் கூடியவை. ஒரு மணி நேரம் வரை, கடலுக்கடியில், இந்த ஸ்கூட்டரில் இருக்கலாம். டென்மார்க் நிறுவனம் ஒன்றிலிருந்து விடுதலைப் புலிகள், இந்த ஸ்கூட்டர்களை வாங்கியுள்ளனர் என்றும், அந்த கொழும்பு ஏடு சிறீலங்கா ராணுவத்தை மேற்கோள் காட்டி, செய்தி வெளியிட்டுள்ளது.

மூழ்கடிக்கப்பட்ட கப்பல் - பாகிஸ்தானுக்கு சொந்தமானதாகும். 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சார்ந்த 264 பேரை சட்ட விரோதமாக ஏற்றிக் கொண்டு, இந்தக் கப்பல், இத்தாலிக்கு பயணமானபோது, இலங்கைக் கடற்பரப்பில், இலங்கை கப்பல்படை, இந்தக் கப்பலை சுற்றி வளைத்துப் பிடித்தது.

இலங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தக் கப்பலை இலங்கை ராணுவம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தக் கப்பலை, சிங்கள ராணுவத்துக்கு ஆயுதம் வழங்குவதற்கு சிறீலங்கா ராணுவம் பயன்படுத்தி வந்தது. அந்தக் கப்பல் தான், இப்போது புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் கேனல், கங்கை அமரன் தலைமையிலான கரும்புலிப் படைப் பிரிவு இத்தாக்குதலை நடத்தியதாக தமிழ் நெட், இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் - சிறீலங்கா ராணுவத்திடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.