குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்கள் தமிழில் இல்லையே என்கிற வசை Books for Children மற்றும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புத்தகப் பூங்கொத்து என்னும் 25 புத்தகங்கள் கொண்ட தொகுதியால் கழிந்தது என்று சொல்லலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புத்தகங்கள் இவை என்று சொல்லலாம். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் மலையாளத்தில் வெளியிட்ட இச் சின்னஞ்சிறு நூல்களைத் தமிழில் தந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். பல்வேறு மொழி எழுத்தாளர்கள் எழுதியவற்றையெல்லாம் ஒரு ஆசிரியர் குழு கூடி மலையாளத்தில் தயாரித்த தேர்ந்த இப்புத்தகங்களை பல மலையாள எழுத்துக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்த உதயசங்கர் குழந்தை மொழியில் பெயர்த்துத் தந்திருக்கிறார்.

அழகான சின்ன வடிவம். மனதைக் கொள்ளை கொள்ளும் என்பார்களே அப்படி உண்மையிலேயே மனதைக் கிளர்ச்சியுறவைக்கும் வண்ணப்படங்கள் பக்கத்துக்குப் பக்கம் ஒவ்வொரு பக்கத்திலும் பெரிதாகப் படங்கள். கொஞ்சமாக எழுத்து. தேர்ந்த ஓவியர்களால் வரையப்பட்ட படங்கள். நம்மையே ஈர்க்கின்றன. குழந்தைகளைக் கண்டிப்பாகக் குதூகலிக்கச் செய்யும்.தலைப்புகளை மட்டும் கீழே தருகிறேன்:

1. கிளிக்குஞ்சு, 2. ஆகாய யுத்தம், 3. ஒடியட்டும் பிரம்பு

4. பூனை கணக்குப் படிக்கிறது, 5. சித்திரம் வரைதல்

6. எறும்பு அரண்மனை, 7. மேகங்களின் கதை

8. சூரியனைத் தொட வேண்டி.., 9. மந்தாரக்கிளி

10. இனி பால் வேண்டாம் அம்மா, 11. குட்டிக்குட்டி முயல்

12. வால்களின் கதை, 13.இலஞ்சிப்பூக்கள் சொன்ன கதை

14. நான் குட்டி மூசா,15. படர்ந்து ..படர்ந்து..படர்ந்த கதை

16. யாருடையது இந்தத் தோட்டம்?, 17. ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித், 18. ரயிலும் குதிரையும், 19. நன்மையே தரும் மரம், 20. என் கதை, 21. என்னுடைய நண்பர்கள், 22. ஒரு போராட்டம், 23. சில்..சில்..சில்.., 24. பாட்டி சொன்ன கதைகள், 25. நீங்கள் என் அம்மாவா?

ஒவ்வொரு புத்தகத்தின் பின் அட்டையிலும் அப்புத்தகம் எதைப் பேசுகிறது என்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் ஓரிரு வரிகள் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு...சிலசோற்றுப் பதமாக ஓரிரு புத்தகங்கள் பற்றி மட்டும் சில வார்த்தைகள்:

பாட்டி சொன்ன கதைகள்

இதில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ஒரு கதையில் ஒரு வேலையும் உருப்படியாகத் தெரியாத ஒரு தச்சன் ஒரு வீட்டுக்குப் பலகை செய்யப்போகிறான். மதியம் வரைக்கும் நில்லாமல் வழுக்கிக் கொண்டு போகும் பலகையை என்ன செய்வது என்று தெரியாமலே போகிறது. இவன் சாப்பிட்டு விட்டுப் போட்ட எச்சில் இலையை தின்னும் நாய் ஒரு காலால் இலையை அமுக்கிக் கொண்டு வழுக்காமல் நக்கிச் சாப்பிட்டதைக் கண்டு ..ஆகா...நாமும் இதுபோலச் செய்யலாமே என்று ஒரூ காலால் பலகையை அமுக்கிக் கொண்டு தச்சு வேலையைச் செய்யத் துவங்குகிறான். அவ்வளவுதான் கதை.

சில்..சில்..சில்..

அணில் ஒன்று மரத்தில் ஏறுகிற காட்சி படமாக முதல் பக்கத்தில்.சில்..சில்..சில்.. என்று அணில் ஏதோ சொல்கிறது. அது என்ன சொல்கிறது புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 7

என்று குழந்தைகள் எழுதுவதற்காக அல்லது சொல்வதற்காக இரண்டு வரி வெற்றிடம் விடப்பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் அணில் மாம்பழத்தைப் பார்க்கிறது. சில்..சில்..சில் என்று ஏதோ பேசுகிறது. அது என்ன பேசுகிறது என்று குழந்தைகள் எழுத வேண்டும். அடுத்த படத்தில் அது மாம்பழத்தைப் பறிக்கிறது. அது கீழே விழுகிறது. மீண்டும் சில்..சில்..சில்...அடுத்தபடத்தில் கீழே விழும் பழத்தை இரண்டு குழந்தைகள் பிடித்திக்கொள்கிறார்கள். அணில் ஏமாந்து நிற்கிறது. மீண்டும் அது சில்..சில்.சில்ல் என்று ஏதோ பேசுகிறது. அவ்வளவுதான் கதை.

ஒரு போராட்டம்

ஒரு ஊரில் உள்ள விளக்குமாறுகள் எல்லாம் சேர்ந்து வேலை நிறுத்த நோட்டீஸ் தருகின்றன. மனிதர்களால் அவமதிக்கப்படுகிற விளக்குமாறுகள் எல்லாம் ஒன்றுகூடிக் கூட்டம் நடத்துகின்றன. அவர்கள் ஒரு போஸ்டர் தயாரித்து எல்லா இடங்களிலும் ஒட்டுகிறார்கள்.அவர்களுடைய கோரிக்கைகள் :

1.எங்களை சுத்தமாக வைத்திருப்பது வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது போன்றது என்று அங்கீகரிக்க வேண்டும். தேவை முடிந்துவிட்டால் எங்களைக் கழுவிச் சுத்தமாக்கிப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.,

2. குறந்த ஆட்களை வைத்து அதிக வேலை வாங்கக் கூடாது.ஒருவீட்டில் முற்றம், அடுக்களை, குளியலறை, கக்கூஸ் மற்றுமுள்ள வேறு அறைகளுக்கு தனித்தனியான விளக்கமாறுகளை உபயோகிக்க வேண்டும்.

3.கோபத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் எங்களுடைய பெயரைப் பயன்படுத்து வதை நிறுத்த வேண்டும்.

4.வேலை முடிந்த பிறகு நல்ல ஓய்வு எடுப்பதற்கு சுத்தமான இடத்தை ஒதுக்க வேண்டும்

5. ஆண்,பெண் என் வித்தியாசமில்லாமல் எல்லோரும் எங்களைப் பயன்படுத்த அனுமதி தர வேண்டும். குழந்தைகளுக்கு எங்களைப் பயன்படுத்த பயிற்சி தர வேண்டும். விளக்கமாறுகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தூசிதட்டிகளும், வழிப்பான்களும், தேய்ப்பான்களும் போராட்டத்தில் இறங்கும் செய்தியோடு கதை முடிகிறது.

என் கதை

ஒரு செருப்பு தன் சோகக் கதையைக் கூறுகிறது.தேவி என்கிற பெண் குழந்தையால் ஜென்ம சாபல்யம் அடைந்து செருப்புக் கடையின் அலமாரியிலிருந்து விடுதலைப் பெற்று தேவியின் கால்களை அலங்கரித்து பள்ளிக்கூடம், சர்க்கஸ், கல்யாண வீடு ,கடற்கரை என்று எங்கெல்லாமோ சுற்றுகிறது. அது மனிதர்களைப் பார்க்கிறது. அவர்களுடைய செயல்களால் வேதனை அடைகிறது. ஆண்கள் குடித்து விட்டு வருகிறார்கள்.பெண்கள் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகள் டிவி பார்த்தே கண்ணைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தேவி தன்னை மிகவும் நேசிக்கிறாள் என்பதில் அந்தச் செருப்புக்கு ஏகப் பெருமை.

கதை இப்படியே போய்க்கொண்டிருக்க ஒருநாள் தேவியின் அப்பா அவளுக்குப் புதுச் செருப்பு ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறார். தேவி இந்தச் செருப்பை காலால் எட்டி உதைத்துக் குப்பென அறைக்குள் போட்டு விடுகிறாள். புதுச் செருப்பை தேவி கொண்டாடுகிறாள்.

இந்த அறைக்குள் இருட்டுக்குள் கிடக்கும் செருப்பு தன்னோடு கிடக்கும் பழைய சமையல் பாத்திரங்கள், பழுதான ரேடியோ, சாயம்போன பழைய துணிமணிகள், கை ஒடிந்த பொம்மை எல்லாவற்றையும் பார்க்கிறது. அந்தச் சாமான்களுக்கு நடுவே ஒரு கட்டில். அதில் தேவியின் பாட்டி எந்த அசைவுமில்லாமல் கிடந்தாள். செருப்பின் வேதனை பெருகி அது சத்தமில்லாமல் குலுங்கி அழுகிறது என்று கதை முடிகிறது

இது போல ஒவ்வொரு கதையும் ஒரு மாதிரி.ஒரு புத்தகம் போல இன்னொரு புத்தகம் இல்லை என்பதுதான் இந்த 25 புத்தகங்களின் தொகுப்பின் மிகச் சிறப்பான அம்சமே. எந்தக் கதையிலும் நீதி ஒன்றும் சொல்லப் படவில்லை. அது ஒன்றே இப்புத்தகங்களின் மிகப்பெரிய பலம். பச்சைக் குழந்தைகளுக்கு நீதி சொல்வதைப்போல ஒரு அருவருப்பான விசயம் இந்த உலகத்தில் இருக்க முடியுமா?

உண்மையில் இப்புத்தகங்களை முதலில் பெரியவர்கள் படிக்க வேண்டும். நான் படித்து முடித்த பிறகு பல மாற்றங்கள் எனக்குள் நடப்பதைப் பார்க்கிறேன்.இப்போதெந்ல்லாம் நான் விளக்கமாறுகளை மதிக்கத் துவங்கி விட்டேன். அவற்றுக்கு ஓய்வெடுக்க ஒரு சுத்தமான இடத்தை ஒதுக்கி விட்டேன். வீட்டு வேலைகளில் ஆண்களும் குழந்தைகளும் பங்கேற்பது அவசியம் என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டு விட்டேன்.

இதுபோல ஒவ்வொரு புத்தகமும் ஆழத்தில் ஒரு செய்தியை வைத்துள்ளது அது பெரியவர்களுக்கானதாகவும் இருக்கிறது.பெரியவர்கள் என்பதும்தான் யாரு? வளர்ந்துவிட்ட குழந்தைகள் தானே?

Pin It