இந்து மதம் மற்றும் இந்தியாவை தகர்த்தெறிவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் இந்துத்துவா எதிர்ப்பை மாணவர் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைப்பு விடுத்துள்ளார். ஈரோட்டில் கடந்த 9.4.06 அன்று நடைபெற்ற மதவெறி எதிர்ப்பு கூட்டு இயக்கக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய சிறப்புரை.

“இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மாநாடு நடத்துவது இது முதல் முறை அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 தேர்ந்தெடுத்து ஈரோட்டில் அந்த நாளில் மாநாட்டை நடத்தினார்கள்.

அம்பேத்கர் பிறந்த நாளை மறக்கடிக்கும் விதமாக டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிப்பு தினத்தை கொண்டாடுகிறார்கள். நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடினால், அதே நாளில் கிருஷ்ண செயந்தியை கொண்டாடுகிறார்கள். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், இந்துத்துவா சக்திகள் அதை வியாசர் பிறந்த நாளாகக் கொண்டாட்டம் போடுகிறார்கள்.

“இந்துக்கள் சிறுபான்மை ஆனால் தமிழ் - தமிழனின் கதி என்னாவது? என்பது விதிக்கு வீதி எழுதி வைக்கும் இந்து முன்னணியினர் ‘ஓம்’ என்பதைக்கூட சமஸ்கிருதத்தில் தான் எழுதுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். முன்பு ஆரிய சபை, இந்து மகா சபை, இந்து கலாச்சார சபை என்ற பெயர்களில் இயங்கியது. இந்துத்துவாவை வளர்க்கும் பணியை முதலில் தொடங்கியது காங்கிரசு தான். மொகரம் - பண்டிகைக்கு எதிராக கணபதி ஊர்வலத்தை நடத்திக் கலவரத்தை ஏற்படுத்தியவர் திலகர்.

மக்களை ஆயிரக்கணக்கில் சாகடித்த ‘பிளேக்’ நோயைப் பரப்பும் எலிகளை அப்போதைய ஆங்கில அரசு கொன்றபோது, அந்தப் பணியைச் செய்த ஆங்கிலேயே அதிகாரியைக் கொன்று அதனால் தண்டனை பெற்றவர்தான் காங்கிரசின் முன்னோடித் தலைவரான திலகர்! அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடும், இந்து மகாசபை மாநாடும் ஒரே மேடையில் நடைபெற்றன.

இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவருள் ஒருவர் கே.எம்.முன்ஷி - இவர்தான் இந்தியா முழுவதும் ‘பாரதி வித்யா பவன்’ என்னும் இந்துத்துவா கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர். இவர் தான், முன்பு தாக்கப்பட்ட சோம நாதபுரம் ஆலயத்தைப் புதுப்பித்து அதன் தொடக்க விழா நடைபெற்றபோது மரபுகளை மீறி குடியரசுத் தலைவரை வரவழைத்து அழைத்துச் சென்றவர்.

1925-ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பல பெயர்களில் இயங்கியது. 1949-ல் காந்தியார் கொலை செய்யப்பட்டதும் தடை செய்யப்பட்டது. 1949-ல் ‘சியாம் பிரகாஷ் முகர்ஜி’ என்பவர் பாரதிய ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வார்க்கரின் ஆலோசனைப்படியே இது நடைபெற்றது. இந்த அமைப்பைக் கட்டுப்படுத்தி இயக்க சுந்தர்சிங் பண்டாரி, தீன் தயாள் உபாயத்தி யாயா, வாஜ்பேயி, அத்வானி ஆகிய நால்வரை அனுப்பினார்கள்.

1964-ல் ஆகஸ்டு 29-ல் ‘விசுவ இந்து பரிசத்’ தொடங்கப்பட்டது. இதற்கும் வழிகாட்டியவர் கோல்வார்க்கர் தான். இந்து இயக்கங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது, வர்ணாசிரம தர்மத்தை வெளிக்காட்டாமல் செயல்படுவது என்ற திட்டத்துடன் வி.எச்.பி. தொடங்கப்பட்டது.

2002-ல் திருச்சியில் பேசிய பிரவீண் தொக் காடியாவின் மூன்று எதிரிகள் பேச்சை 1964-லேயே வி.எச்.பி. தொடக்க விழா நிகழ்ச்சியில் அப்போது பொதுச்செயலாளராக இருந்த எஸ்.எஸ். சாப்தே பேசினார்.

கிறித்தவர், இஸ்லாமியர், பொதுவுடைமையாளர்கள் ஆகியோர் நம் எதிரிகள் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாகவும், எதிர்ப்பாகவும் இருக்க வேண்டுமென்றும் பரபரப்பாகப் பேசினார்கள்.

வி.எச்.பி.யின் பொதுக்குழு ‘தர்மசங்வார்’ என்று அழைக்கப்படுகிறது. 1984-85களில் மூன்று துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மூன்று ஜென்ம பூமிகள் இருப்பதாகவும், மசூதிகளிடமிருந்து கோயில்களை விடுவிக்கும் காலம் வந்துவிட்டதாகவும் கொக்கரிக்கிறார்கள். அயோத்தியில் ராமன் பிறந்த இடம், விசுவநாதர் பிறந்த காசி, மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடம் ஆகிய மூன்று இடங்களையும் மீட்க சபதம் எடுக்கிறார்கள்.

அதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகளையும் சுட்டிக்hகட்ட வேண்டும். 1966-ல் அலகாபாத்தில் நடைபெற்ற உலக இந்துக்கள் மாநாட்டில் இந்துவின் அடையாளமாக மதச்சின்னம் அணிவது, பஞ்சகட்சம் கட்டுவது, உச்சிக்குடுமி என்று இருந்ததை மாற்றி, கடல்தாண்டிப் பயணம் செய்யலாம் என்றும் தினமும் காலையில் குளித்து, கடவுளை வழிபட்டாலே, இந்துக்களுக்கு அடையாளம் எனவும் திருத்தினார்கள்.

1930-ல் வெளிநாடு சென்ற மதன்மோகன் மாளவியா - இந்தியாவின் மண்ணையும், கங்கை நீரையும் எடுத்துச் சென்றார். முதன்முதலில் கடல்தாண்டி இங்கிலாந்து சென்ற ராஜாராம் மோகன்ராய் - ஒரு பசு மாட்டையும், பார்ப்பன சமையல்காரன் ஒருவனையும் கூடவே அழைத்துச் சென்றார் என்பது வரலாறு.

பல இடங்களில் உள்ள கிறித்துவ மிஷினரிகள் போல இந்து மிஷன்களைத் தொடங்கியவர் கேரளப் பார்ப்பனர் சின்மயானந்தா! நாகர்கோயிலில் நடைபெற்ற வி.எச்.பி. மாநாடு பசுவதையைத் தடுக்க வேண்டும், சமஸ்கிருதத்தை உயர்த்தப் பாடுபட வேண்டும். ‘ஓம்’ என்ற எழுத்தை வாகனங்களிலும், வீட்டுக் கதவுகளிலும் எழுதி வைக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் போட்டு இந்துத்துவ வெறியைத் திட்டமிட்டுப் பரப்பத் தொடங்கினார்கள்.

வி.எச்.பி.யின் வழிகாட்டும் குழு “மார்க்தர்ஷன் மண்டல்” என்று கூறப்படுகிறது. மேலும் பலதுணைக் குழுக்களும் செயல்படுகின்றன. பஜனை நடப்பதைக் கண்காணிக்க ‘அனுஸ்தான்’ என்றும், முஸ்லிம், கிறித்தவர்களை - இந்துக்களாக மாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளது ‘தர்மப்பிரச்சார்’ என்றும், பூசாரி களுக்குப் பயிற்சியளிப்பது “ஆச்சார்ய லிபாக்” என்றும் பல இயங்குகின்றன. மேலும் இஸ்கான், அனுமான் சேனா, பழங்குடிகளை மதமாற்றம் செய்யும் ‘பார்வாச மண்ணுயர்’ போன்ற குழுக்கள்...

இப்படியெல்லாம் இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு, தம் ஆக்டோபஸ் கைகளைப் பரப்பி வருகின்றன. பி.ஜே.பி. ஆட்சியிலும், ஆளும் மாநிலங்களிலும் கல்வித் துறையில் திட்டமிட்டு இந்துத்துவா புகுத்தப்படுகிறது. இந்திய மயமாக்கல், தேசிய மயமாக்கல், ஆன்மீக மயமாக்கல் என்று கல்வித் திட்டங்கள் சீரழிக்கப் பட்டு, நஞ்சூட்டப்படுகின்றன. இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் பெயரை ‘தீன்தயாள் உபாத்தி மையம்’ என்று பார்ப்பனர் பெயரையே சூட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

2002-ல் கேரளாவில் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ‘ஆதித்யன்’ என்ற பார்ப்பனர் வழக்குத் தொடர்ந்தார். இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு பழைய சாஸ்திரங்களைக் காட்டி மனிதர்களை வேறுபடுத்துவது கூடாது என்றும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் மகத்தான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்தத் தீர்ப்பை கேரள வி.எச்.பி. அமைப்பினர் வரவேற்றனர். தமிழக இந்து முன்னணியினர் எந்தப் பதிலும் கூறாமல், தொடர்ந்து பார்ப்பன சாதி ஆதிக்கத்தின் மையமாக இருந்து வருகிறார்கள்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எங்கு பார்த்தாலும் இந்துத்துவ மாணவர் அமைப்பு “ஏபிவிபி” தான் இருக்கிறது. இன்னும் 20-25 ஆண்டுகள் கழித்து பொது வாழ்வுக்கு வருவோர் எல்லாம் “ஏபிவிபி” என்ற இந்துமதவெறி இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தாம் என்ற நிலை உருவாகிவிடக் கூடும்.

எனவே, மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ எதிர்ப்புப் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்து சமயம் என்ற பெயரில் நம்மை அடக்கி யாளும் கூட்டத்தை இனங்காண்போம். இந்து மதத்தை விட்டொழிப்போம். மதவெறி இயக்கக் கூட்டி யக்கத்தை வலுப்படுத்துவோம். இந்து மதத்தையும், இந்தியாவையும் தகர்த்தெறிவதில் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

(இப்பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உரை அடுத்த இதழில் இடம் பெறும்)

தொகுப்பு : கதிர்.