எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது.

பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும் படகோட்டிகள் சில தீவுகளில் இறக்கிவிட்டு திரும்பி வருகின்றனர். தீவுகளில் பட்டினிக்கு உள்ளாகி, மரணத்தோடு போராடி ராமேசுவரம் கடற்கரையை இந்த அகதிகள் வந்து சேரும் துயரங்கள் ஏடுகளில் அன்றாட செய்தியாகி விட்டன. பலர் பிணங்களாகி விடுகிறார்கள்.

இந்த அவதிகளுக்கு மனிதாபிமானத்தோடு உதவுவதற்கு, இந்தியாவின் கப்பல்படைகளும், உளவு நிறுவனங்களும் தயாராக இல்லை. சிங்களக் கப்பல் படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பிணமாகிக் கொண்டிருக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் முனைப்பான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. மாறாக - சிங்கள ராணுவம் துவங்கியுள்ள போரில், அந்த ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் மறைமுக முயற்சிகளில் இந்த அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியிருப்பதாகவே தெரிகிறது. எப்படி?

அலுமினிய குண்டுகள், அலுமினிய பால்சுகள் தயாரிப்போர் தமிழகம் முழுதும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு, ஆயுதம் தயாரிக்கவே இவைகள் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் சிறைப்படுத்தப்படுகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்க வேண்டிய அவசியமின்றியே ஓராண்டு வரை உள்ளே வைக்க ஆட்சியாளர்களுக்கு உதவக்கூடிய ஆள் தூக்கிச் சட்டம் தான், தேசப் பாதுகாப்பு சட்டம்!

தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகி விட்டதைப்போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி, தமிழர்களை அச்சுறுத்தி, அவர்களை ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க விடாமல், வாயடைக்கச் செய்யவே இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.

இந்த செயல்பாடுகளை முடுக்கி விடும் ‘மூளை’க்கு சொந்தக்காரராக ஒருவர் செயல்படுவதாக - தமிழக காவல்துறையின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர்தான் எம்.கே. நாராயணன். பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை அதிகாரி. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அதுவரை இப்பதவியிலிருந்த ஜே.என் தீட்சத் மரணமடைந்தார். அடுத்த மூன்று வாரங்களில் ஜன.25, 2005 இல் மயன் கோத்தே கீயாத் நாராயணன் இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்க - கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் புதுடில்லி பார்ப்பன அதிகார மய்யத்தோடு நெருக்கமாக செயல்பட்டு வந்தவர்தான் இந்த அதிகாரி. அந்த ‘அனுபவங்கள்’ தான் இப்போது, பிரதமருக்கு ஆலோசகராக செயல்படும் பதவியை இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கொழும்பு ஊடகங்கள் - எம்.கே. நாராயணனை எப்போதுமே தங்கள் நேச சக்திகளாகவே கருதி வருகின்றன. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் வந்தவுடன், சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கின.

இந்திய பார்ப்பன ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் இவர் மிகவும் கைதேர்ந்தவர், சாதுர்யமானவர் என்று இவரைப் புகழ்கின்றன. ஆனால் அப்படி என்ன சாதனையை இவர் செய்து காட்டியுள்ளார் என்ற கேள்விக்கு, பதில் வராது. தமிழர்களுக்கு - ஈழத் தமிழர்களின் உண்மையான போராளிகளுக்கு எதிராக இருந்தாலே போதும்; இத்தகைய புகழ் மகுடங்கள் சூட்டப்பட்டு - அவர்கள், உயர் அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்பட்டு விடுகிறார்கள். இதுதான் இந்திய தேசியப் பார்ப்பன அதிகார அமைப்பின் இயங்குமுறை.

கடந்த பிப்ரவரி மாதம் ஆங்கில, சிங்கள கொழும்பு நாளேடுகள் எம்.கே. நாராயணனை புகழ்ந்து தள்ளி, அவரது உரை ஒன்றை பெரிய அளவில் வெளியிட்டன. 2007 பிப்.11 ஆம் தேதியில் 43 ஆவது மூனிச் சர்வதேச மாநாட்டில் பாதுகாப்பு கொள்கை பற்றி உரையாற்றிய அவர், தீவிரவாத இயக்கங்கள் எப்படி நிதி திரட்டுகின்றன என்று விவரித்தார்.

அப்போது விடுதலைப்புலிகள் நிதி திரட்டுவது பற்றி குறிப்பிடும்போது, விடுதலைப்புலிகள் போதை மருந்து விற்பனை மூலம் நிதி திரட்டுவதாக, ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்; ஆதாரம் ஏதுமற்ற ஒரு புகார். அப்படி ஏதாவது ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா என்று எவ்வித தரவுகளும் இன்றி, சர்வதேச மாநாடு ஒன்றில் - நாராயணன் பொறுப்பின்றி சுமத்திய அவதூறு இது. இதைத்தான் சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சியோடு வெளியிட்டன.

தமிழ் ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் பல நாள் தங்கி பிரதமர் சந்திப்புக்காகக் காத்துக் கிடந்தனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாது, தவிர்த்தார் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன்.

இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் படுகொலைகளை நேரில் எடுத்துச் சொல்வதே, அந்த மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம். இவர்கள் - விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள்கூட அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் கியுபாவில், ஹவான்னா நகரில் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது, அங்கே, பிரதமருடன் இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ்தேவானந்தாவை - கியுபாவுக்கு வரச் சொல்லி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தவர், இந்த அதிகாரிதான்!

1985 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த படுகொலையில் நேரடி தொடர்பு கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா! சிறீலங்கா அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, போராடும் தமிழர்களுக்கு துரோகம் செய்து, பலரை படுகொலை செய்து, சிங்கள அமைச்சரவையிலும் இடம் பெற்று விட்டார்.

நாடாளுமன்ற பிரநிதிகளை பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்த எம்.கே.நாராயணன், தமிழ்நாட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய டக்ளசை புதுடில்லியில் சந்தித்துப் பேசியதோடு, ஹவன்னாவில் பிரதமர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார் என்பதிலிருந்தே - எம்.கே.நாராயணன் சிங்கள ஊடகங்களால் ஏன் போற்றி புகழப்படுகிறார் என்பதன் காரணம் புரிந்திருக்கும். (பிறகு - தமிழக முதல்வரின் தலையீட்டால், ஈழத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தனர் என்பது வேறு செய்தி.)

1987 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று இந்தியா கட்டாயப்படுத்தியது.

இந்த சதி வலையைப் பின்னிய அதிகார வட்டத்தில் - எம்.கே. நாராயண னுக்கும் முக்கிய பங்கு உண்டு.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவசர அவசரமாக ஈழத்திலிருந்து டெல்லிக்கு 1987 ஜூலை 23 அம் தேதி அழைக்கப்பட்டார். அப்போது இலங்கையில் இந்தியாவுக்கான தூதராக இருந்த ஜெ.என்.தீட்சத் என்ற பார்ப்பனர், ஒப்பந்தத்தின் நகலை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஒப்பந்தத்தை முழுமையாகப் படித்து, சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், விடுதலைப்புலிகளை ஊதித் தள்ளிவிடுவோம் என்றும், வாயில் ‘சிகாரை’ப் பற்ற வைத்துக் கொண்டே மிரட்டினார்.

அந்தச் சூழலில் ஜூலை 23 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை பிரபாகரனுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்தவர் அன்றைக்கு புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். மிரட்டல்களும், அழுத்தங்களும் பலிக்காமல் போனது வேறு சேதி! ஆனால் தமிழ் ஈழப் பிரச்சினை பற்றியோ, போராடும் இயக்கங்கள் பற்றியோ சரியான புரிதலோ, மதிப்பீடுகளோ இல்லாது, அவசர கோலத்தில் அதிகார வெறியில் அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாக்கக் காரணமாக இருந்தவர்களில் எம்.கே. நாராயணனும் ஒருவர். இத்தகைய அதிகாரிகள்தான், இலங்கைப் பிரச்சினையைக் கையாளுவதில் சமர்த்தர்களாக - பார்ப்பன-சிங்கள ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஜெ.என்.தீட்சித் - எம்.கே. நாராயணன் என்ற இரட்டையர்கள்தான், ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்புவதில் ‘மூளையாக’ இருந்து செயல்பட்டவர்கள். என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ‘சவுத் ஆசியா’ எனும் இணையதளத்தில் இதுபற்றி பல விரிவான ஆய்வுகள் வெளியிடப்பட்டன.

“1987 இல் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியது. இரண்டு தனி மனிதர்கள்தான். அவர்கள் ஜெ.என். தீட்சித்தும், எம்.கே.நாராயணனும் ஆவர்” என்று ‘சவுத் ஆசியா’ செய்தியாளர் சுதா ராமச்சந்திரன் தனது ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார். (How India’s Srilankan Policy will evolve under the new Government can be gleaned from examning the options of two individuals J.N. Dixit and M.K. Narayana who are like; to play a Central role in crafting this policy i.e. the deployment of indian troops in Srilanka)

தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டங்களை மிஞ்சுமளவுக்கு ராணுவ வேட்டை நடத்தியது. ‘இந்திய அமைதிப்படை’ கடைசியில் அவமானப்பட்டு வெளியேறியதுதான் நடந்தது. உலக அரங்கில் இந்தியாவின் முகத்தில் கரிப்பூசச் செய்த இந்த முடிவை எடுத்த எம்.கே. நாராயணன் தான், இப்போதும் ஈழப் பிரச்சினைக்கு பிரதமரின் ஆலோசகர்.

‘டெகல்கா’ வார ஏட்டில் (ஜூன் 30, 2006) அதன் தமிழக செய்தியாளர் வினோஜ்குமார் - எம்.கே.நாராயணன் நடவடிக்கைகள் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். பிரதமரின் தூதர், ஆலோசகர் பதவி ஏற்ற சில நாட்களில் நாராயணன் முதலில், தமிழக முதல்வர் கலைஞரை சந்திக்க வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஆனால் என்ன காரணத்தாலோ அவரது முதல் வருகை தடைப்பட்டது. தமிழக முதல்வர் எம்.கே.நாராயணனை சந்திக்க விரும்பவில்லை என்றே செய்திகள் வலம் வந்தன. முதலில் தனது அதிருப்தியை தமிழக முதல்வர் பதிவு செய்தாலும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையில் அதற்குப் பிறகான சந்திப்பை அவரால் தவிர்க்க முடியவில்லை. எம்.கே. நாராயணன் தமிழ் ஈழப் போராளிகளுக்கு எதிரானவர் என்பதைவிட, தமிழக முதல்வருக்கு அவர் மீதான கோபத்துக்கு வேறு ஒரு முக்கிய காரணம் உண்டு.

1990களில் தி.முக. ஆட்சியைக் கலைப்பதில், இதே அதிகாரிதான் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, சந்திரசேகர் பிரதமராக இருந்த காலம் அது. தமிழ் நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சி, விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவு வைத்திருப்பதாக புலனாய்வுத் துறை பொய்யாக ஒரு அறிக்கையைத் தயாரித்தது. அப்போது புலனாய்வுத் துறை இயக்குனராக இருந்தவர், இதே எம்.கே.நாராயணன் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டியவர். எம்.கே.நாராயணன் அப்போது தயாரித்த அறிக்கையில் என்ன கூறினார்?

(அடுத்த இதழில்)