அவ்வப்போது வரும் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளின் ஒன்றாக தற்போது வெளிவந்திருக்கிறது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர் ஷோபாசக்தியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "எம்.ஜி.ஆர் கொலை வழக்கு'. மரபார்ந்த புனைகதை வடிவத்தை கலைத்துப்போட்டு எழுதுவதில் எப்போதும் தீராத வேட்கை உடையவர் ஷோபாசக்தி. முப்பதாண்டு களுக்கும் மேலாக ஓர் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளின் ரணம்தான் இந்தக் கதைகள். இரத்த வாடையைத் தாண்டி சுவாசிக்காத முடியாத வர்கள் வேறு எந்த வாசனையைச் சிலாகித்துக் கூறிவிட முடியும் என்பதை இந்தச் சிறுகதைகளை வாசிக்கும் போது எளிதில் புரிந்துகொள்ள முடியும். கதைகள் முழுக்க இயக்கங்களும் இயக்கங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் வன்முறைகளும் போகிறபோக்கில் சொல்லப்பட்டுள்ளன.

இதில் உள்ள பத்து கதைகளும் உண்மைகளுக்கு அருகில் இருந்து எழுதப்பட்டுள்ளன; கதைகளில் புனைவுத் தன்மை என்பது மிகவும் குறைவு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சம்பவத்தின் வரலாறு. எந்த கதையும் குறிப்பாக முடிவு தேடிச் செல்லவில்லை. இலங்கைக்கு எதிரான போரில் விடுதலைப் புலிகள் தோற்கவேண்டும் என்று ஈழத் தமிழர்களே எண்ணும் அளவுக்கு முகாம்களில் அவர்கள் வதைக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் மிகக் கொடுமையான பதிவுகள். இலங்கை இராணுவத் தின் இனவெறியும் ஈழத் தமிழர்களின் வதையும்தான் கதைகளின் மையம். சுய அனுபவம் சார்ந்த இக்கதைகள் வாசிப்பதற்கு மிகவும் கனமானவை.

எம்.ஜி.ஆர் கொலைவழக்கு ஆசிரியர்: ஷோபாசக்தி கருப்புப் பிரதிகள் பி 74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை5. விலை ரூ. 110

*******

ஜெயமோகனின் சமீபத்திய நாவல், "அனல்காற்று'. இந்த நாவல் காமத்தை புதிய கண்ணோட்டத்தில் விவா தித்துச் செல்கிறது. பாலுமகேந்திரா இயக்குவதற்காக இக்கதை எழுதப்பட்டது என்கிறார் ஜெயமோகன். இக்கதை திரைப்படமாக வந்திருந்தால் பல்வேறு விவா தங்களை எழுப்பிருக்கும். காமத்தில் சுயவிமர்சனம் இல்லை. காமத்தில் தியாகம் இல்லை. காமத்தில் நாம் ஒரு கணம்கூட இல்லாமலாவதில்லை. காமத்தில் நாம் எதையும் கொடுப்பதில்லை. அதில் நாம் ஒவ்வொரு கணமும் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

காமம் ஒரு முடிவில்லாத போர். அங்கே வெல்வது ஒன்றே இலக்கு என இரு உடல்கள் போராடுகின்றன. காமத்தில் முன்வைக்கப்படும் ஒவ்வொன்றும் பிறி தொன்றே. காமத்தில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் சொல்லப்படாத ஒன்றே... என இந்நாவலில் வரும் முதன்மைக் கதாபாத்திரம் காமத்தை தொடர்ந்து விவரித்துக்கொண்டே செல்கிறது. காமம் ஒரு முடி வில்லாத தேடல் என்பதை நோக்கி இந்தப் பிரதி தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கிறது. கன்னியா குமரிக்குப் பிறகு ஜெயமோகனின் இலகுவான மொழிநடையை இந்நாவலில் காணலாம்.

அனல்காற்று ஆசிரியர்: ஜெயமோகன் தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை14 விலை ரூ. 90

Pin It