மத்திய அரசுத் தேர்வாணையமும் - மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும் இணைந்து, இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்து வரும் சட்ட விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி - முன்னாள் மத்திய அமைச்சரும் அய்க்கிய ஜனதாதளத் தலைவருமான சரத் யாதவ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 7) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் பின்வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

1) மத்திய அரசுப் பதவிகளில் 49.50 சதவீதம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எஞ்சிய 50.50 பதவிகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது. திறந்த போட்டியில் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் தேர்வாணையம் - மத்திய வேலை வாய்ப்புத் துறையுடன் பேசிக் கொண்டு, திறந்த போட்டிக்கான இடங்களில் முழுவதுமாக தகுதி அடிப்படையில் அனுமதிக்கப்பட வேண்டிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணித்து விட்டு, பார்ப்பன முன்னேறிய பிரிவினரை மட்டுமே கொண்டு நிரப்பி வருகிறது. நீதிமன்றங்கள் பல வழக்குகளில் தெளிவாகத் தந்துள்ள தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை இது.

2) கடந்தமுறை நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.) மொத்தமுள்ள 425 இடங்களில், திறந்த போட்டிக்கான இடங்கள் 214. இதில், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்கள் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள். இதில் 40 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்கு திறந்த போட்டியில் இடம் தர மறுத்து, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் நிரப்பியுள்ளனர்.

27 சதவீத ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 117 பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். நியாயமாக - பொதுப் போட்டியில் 40 பிற்படுத்தப் பட்டோருக்கும், இடஒதுக்கீட்டுப் பிரிவில் 117 பேருக்குமாக 157 பிற்படுத்தப்பட்டோர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3) தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தினரை திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள். இந்தப் பிரிவு மாணவர்கள் எழுத்துத் தேர்வில் - மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆனால் நேர்முகத் தேர்வில் இந்த மாணவர்களுக்கு - சாதி வெறி கண்ணோட்டத்தோடு குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மதிப்பெண்களைக் குறைத்து விடுகிறார்கள்.

தேர்வு எழுதும்போது - இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள், பொதுப் போட்டியில் வரும் மாணவர்கள் ஒன்றாகவே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், நேர்முகப் பேட்டிக்கு, இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள் தனியே பிரிக்கப்பட்டு, தனியாக நேர்முகத் தேர்வு நடக்கிறது. அவர்கள் சாதி அடையாளத்தைத் தெரிந்து கொண்டு, நேர்முகத் தேர்வில் மதிப் பெண்ணைக் குறைத்து, போட்டிக்கு தேர்வு பெற முடியாதவர்களாக அழுத்தி விடுகிறார்கள்.

4) எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று - நேர்முகத் தேர்வில் பழிவாங்கப்பட்ட ஒரு மாணவர் - 1996 இல் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இடஒதுக்கீடு பட்டியலில் வரும் மாணவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்குழு வழங்கியிருந்த சராசரி மதிப்பெண் 140 மட்டுமே.

ஆனால், இடஒதுக்கீட்டின் கீழ் வராத மாணவர்களுக்கு, குழு வழங்கியிருந்த மதிப்பெண்களின் சராசரி மதிப்பு 200. கடுமையாக உழைத்து, இந்தத் தகவல்களைத் திரட்டி அந்த மாணவர் தனது வழக்கு மனுவில் பதிவு செய்து, அநீதியை எடுத்துக் காட்டினார். நேர்முக தேர்வுக்குழு, இது தொடர்பான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தரவில்லை. உண்மை அம்பலமாகிவிடுமே என்று பதுங்கியது.

உச்சநீதிமன்றம், மாணவர் தெரிவித்த தகவலை ஏற்றுக் கொண்டு, அம்மாணவருக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இதேபோல் எத்தனை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களால் நீதிமன்றத்துக்குப் போய் நீதியைப் பெறமுடியும்?

5) இதேபோல் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற - 390 தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு - ‘சிவில் சர்வீசில்’ வேலை வாய்ப்பு கிடைக்காமல், நேர்முகத் தேர்வுக் குழுவினால் சூழ்ச்சிகரமாக பறிக்கப்பட்டுள்ளது என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக, சரத் யாதவ் கூறுகிறார்.

6) பிற்படுத்தப்பட்டோரில் ‘கிரிமிலேயரை’ வைத்து, முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கிட வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு பகுதியினரை விலக்கிவிட்டு கீழ்நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, நேர்முகப் போட்டிக்கு வரும்போது, வெளியேற்றிவிடுகிறார்கள். இதுதான், இவர்களின் ‘தகுதி-திறமை’யைக் காப்பாற்றும் யோக்கியதையா? என்று கேட்டிருக்கிறார் சரத்யாதவ்!

அதிகாரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் சட்டங்களையும் மீறி, சமூக நீதியைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் - இடஒதுக்கீடே இல்லை. ‘தகுதி-திறமையுள்ள’ விஞ்ஞானிகள் 11,000 பேர் ரூ.256 கோடி செலவில் இன்சான்ட் 4 சி செயற்கைக்கோளுடன், எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் பறக்கவிடப்பட்ட ஒரு நிமிடத்துக்குள்ளே கடலில் விழுந்து வெடித்து சிதறியது.

வெடித்து சிதறியது, ராக்கெட் மட்டுமல்ல, இந்தப் பார்ப்பனர்கள் பேசும் ‘தகுதி-திறமை’ வாதமும் தான்!