'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப்பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.

வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)

ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)

"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?

ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?

'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.

"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.

இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.

'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!