maoist_530

ஒற்றைக் கண்ணீர்த்துளியொன்று வீழ்ந்து
புரள்கிறது
வெயிலெனப் பரவிய பூமியின்மேல்

உயிர்களைக் கடந்து
சுட்டுச் சாய்த்த சடலங்களை
குப்பைகளை பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்க வேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை காலில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக் காற்றின் கடைசி சுவாசத்தை
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவள் சுரப்பிகளைப் பொசுக்கி இருக்கலாம்
ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்
உறைந்த கடைசிவானம் குருதிச் சிவப்பாகியிருக்கலாம்

அதிகாரப்பசியின் கோரம்
உயிர்களைத் தின்ன
கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை கூடுகிறது
வறுமை
வாழ்வின்மை
சுரண்டல்
இவற்றுக்கெதிரான குரலே
மரணத்திற்கானதாகி விடுகிறது

ஊழலின் அரசியலை ஜனநாயகமாக்குவதும்
மக்களின் உயிர்களை மயிரென நினைப்பதும்
மக்களாட்சியெனின்
பசுமை வேட்டை என்பது
வேறென்ன
மக்களை கொல்வதன்றி

Pin It